நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.
இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.
இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் – Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.
1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.
இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் – மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி – அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.
பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.
இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.