டிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.
இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.
ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.
இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.