07

07

நாடுகடந்த தமிழ்ஈழம் நாட்டுக்கொரு தமிழ்ஈழம்: குலன்

headlss_chickens_competitionஅத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று கோட்டையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மக்கள் சரிவரகட்டி எழுப்பப்படாது போனதாலும், நிலத்தின் பண்பு புரியாமல் சூழல் அறியாமல் சரியான அரசியல் ஆய்வின்றி, ஆயுதத்தில் மட்டும் மனநோய் கொண்டு அவசர அவசரமாகக் கட்டப்பட்டதால்தான் புலிக்கோட்டை அழிந்தது என்பதை இன்னும் உணராமல், இன்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வட்டுக்கோட்டையையும், தட்டுப்பட்ட புலிக் கோட்டையையும் கொண்டு நாடுகடந்த நாடுகடக்கா தமிழ்ஈழம் எனத்தடி கொடுத்து ஓடுகிறார்கள். செம்மறியாட்டுக் கூட்டம் போல் முன்னுக்குப் போகும் செம்மறி கத்திக் கொண்டு ஓட பின்னால் கத்திக் கொண்டோடி துப்பாக்கிகளால் மந்தைகளாக்கப்பட்ட எம்மக்கள் புலிக்கோட்டை அழிந்த பின்பாவது சுயமூளையில் சிந்திப்பார்களா?

1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபுரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.

கடும் காற்றுக்கு கதைசொல்ல முடியாத பிரபாகரன் எனும் தலைமைக் கலசத்துக்கு மட்டும் புலம்பெயர் மக்களால் ஆராதனைகள், அபிசேகங்கள், தோத்திரங்கள். அன்று மண்மீட்பு, என்று மக்களின் மனமீட்பு இன்றிப் புறப்பட்ட போர்வீரர்களும் அடிமண்ணாய் கிடந்த மக்களை கருத்தில் கொள்ளவில்லை, சிரத்தை எடுக்கவில்லை. அப்படி கரிசனைப்பட்டவர்கள் கூடச் சுடுகோல்களால் சுட்டுக் கருக்கப்பட்டார்கள். கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?

ஐரோப்பாவில் நாட்டுக்கு நாடு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அவைகள், பேரவைகள் உருவாகின்றன. இப்பேரவைகள் (பேயவைகள்) அந்நாட்டிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப் படுத்துமாம், ஜனநாயகமுறையில் தேர்தல் வைப்பார்களாம், எல்லோரும் போய் வோட்டுப் போட வேண்டுமாம். எது ஜனநாயகம்? வோட்டுப் போடுவதுதான் ஜனநாயகமா? இப்படி ஒருதேர்தலை நடத்த நீங்கள் யார்? நாட்டில் அவதியுறும் மக்களைக் கருத்தில் கொள்ளாத இவர்கள் எமது மக்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நீங்கள் யார்? இவர்களின் கொள்கை வட்டுக்கோட்டைத் தமிழீழம் தானாம். அப்படியென்றால் நாடுகடந்த தமிழீழம்? இது நாடு கடத்தப்பட்டதா? இது நாடுகடக்காத் தமிழ் ஈழமா?

புலிகள் இருந்தபோது அங்கிருந்தபடியே இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்தினார்களாம். இப்போ புலிபோனதும் புலம்பெயர் தமிழர்களுக்குக் கிலிபோய்விட்டதாம். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்புத் தேவையாம். இதனால்தான் அவைகள் பேரவைகள் கட்டுகிறார்களாம். இது உள்நாட்டு தமிழர்களையும், அரசியலையும் பிரதிநிதிப்படுத்துமாம். இது நாசனல் மற்றையது இன்ரநாசனலாம். இது ஒரு ஜனநாயக அமைப்பு என்று கட்டுபவர்கள் இப்படி ஒரு அமைப்பைக் கட்டுவதா? இல்லையா? என்று எந்தவாக்கெடுப்பும் நடத்தவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் பற்றியோ அரசியல் அமைப்புகள் சட்டங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் ஊரிலிருந்தபடி புலம்பெயர் தமிழர்களை புலிகள் கட்டுப்படுத்தினார்கள் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் தான். இதை உணர்ந்துதான் தமக்குத்தாமே மகுடம் சூடிக்கொண்டு புதிய அவைகள் துவையல்கள் வெளிவருகின்றன. இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி. நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?

இந்த இருபகுதியினருக்கும் சில தில்லு முல்லுகள் உண்டு. யாரின் கீழ் யார் இயங்குவது என்று பிரச்சனையும் உண்டு. பேரவைகள் (பேராசைகள்) கடைசிகாலங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது அவர்பின்னால் இருந்து சேர்ந்து குழிபறித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை தமதாக்கிய பெருவள்ளல்கள் எனலாம். இதை சிவசேகரமவர்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்லின் புலம்பெயர் புண்ணாக்குகளின் புத்திகளைக் கழுவி பணருசிகண்ட பூனைகள் எனலாமே. இது உள்நாடுகளில் தமிழீழ அமைப்பாகவும் (லோக்கல்). மற்றையது நாடுகடந்த தமிழ்ஈழம் உலகரீதியான தமிழீழ அமைப்பாகவும் (இன்ரர்நாசனல்) இயங்குமாம். ஒன்று பிரபாகரனுடையது மற்றையது கேபியினுடையது என்று கூறுவது பொருந்துமோ? ஒன்று புலம்பெயர் தமிழர்களிடன் நேரடடியாகப் பணம் பிடுங்கியவர்கள், நாடுகடந்த தமிழீழத்தார் பிடுங்கியவர்களிடம் பிடுங்கியவர்கள்.

இவர்கள் தனித்தனியே கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். கூடுதலாக நாடுகடந்த தமிழீழத்தார் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அமைப்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதால் பிரபாகரனால் அமைப்பை விட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லது நாட்டுக்கு அழைக்க ஒடி ஒழித்தவர்கள் என்கிறார்கள் நோர்வே தமிழர்கள். எது எப்படியோ எல்லோரும் தமிழர்களைத் திண்டவர்கள் தான். நோர்வே சென்றபோது இவர்களின் பின்புலங்களை அறிந்தபோது நோர்வே தமிழர்கள் பல சொன்னது நியாமாகவே தோன்றியது.

எதிர்வரும் 15ம்திகதி (நவம்பர் 15) நோர்வேயில் ஒரு குழு ஜனநாயகம் எனச்சொல்லிக் கொண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை எனப்பெயரிட்டுக் கொண்ட அமைப்பு நோர்வே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த குழுஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடத்துகிறதாம். இதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களாம். தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில், மாநகரங்களில் தமிழர்களின் தொகைக்கேற்ப வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களாம். தலைநகர் ஒஸ்லோவில் தேர்தலுக்கு நிற்பவர்கள் உங்கள் வோட்டுக்கள் எனக்கே, நானுன் ஊரவன் உன்வோட்டு எனக்குத்தான் என்று தொடங்கி விட்டார்களாம். இதன் பிரதிபலன்களாக ஊர்வாதம், குழுவாதம், சாதி, குலம் கோத்திரம் என்று ஒன்றாய் இருக்கும் மக்கள் சிதறிச் சின்னா பின்னமாகிப் போகப்போகிறார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையும்தான் ஜனநாயகம் எனக்கருதினால் இலங்கை அரசாங்கம் சிறு ஆயுதம்தாங்கிய குழுக்களும் தாய்நாட்டில் செய்வது எந்தவிதத்திலும் பிழையாகாது. பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இருப்பவன் தன்னை தலைவனாக்கிய சமூகத்துக்கு நன்மை செய்வதும் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்குவதும் நியாயமாகிறது. எம்சமூகங்களில் பழிவாங்கல் என்பது உதிரத்தில் ஊறிவிட்ட ஒன்றாக அமைந்ததால் தான் சகோதரப்படுகொலைகள் வகை தொகையின்றி நடந்தன.

இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?

ஐனநாயகம் என்பது தன்னை எதிர்த்து வோட்டுப் போட்டவர்களையும், சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துபவனே சரியான ஜனநாயகவாதி. இது எம்நாடுகளில் எங்கே நடக்கிறது. இதையே வெளிநாடுகளில் ஜனநாயம் என்று தேர்தல் நடத்த முன்வருகிறார்கள் புலன்பெயர்ந்த தமிழர்கள். என் கணிப்பீட்டில் கீழத்தேய நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே. திறமையான பொய் பித்தலாட்டங்களின் கூட்டமே.

நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடத்தப்படும் தேர்தல் பற்றி என் காதைக் கடித்த செய்திகள்
• தொடங்கிட்டாங்கப்பா தொடங்கிட்டாங்க குடுத்த காசுக்கே கணக்கு காட்டேல்லை வெளிக்கிட்டுட்டாங்கடா காசு சேர்க்க.
• குடுத்த காசை உடன் எடுக்கேலாது. பிடித்து விடுவார்கள் எல்லோ. வியாபாரத்தைத் தொடங்கினால் கணக்குக் காட்டலாம் தானே.
• தலைவர் உயிரோடை இருக்கேக்கை இவை எப்படி தேர்தல் நடத்த முடியும். தலைவர் ஆபிரிக்காவில் இருக்கிறார். வரும்போது வருவார். அப்பதெரியும் இவையின்ரை ஆட்டங்கள்.
• யாரிந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தார்? பதில் – முந்தி புலியிலை இருந்து கலைச்சு விடப்பட்டவையள், காசடித்துக் கொண்டு ஓடி ஒதுங்கியவை, ஊருக்குக் கூப்பிட்ட போது ஓடி ஒழிச்சவையும், உள்ளுக்கிருதே காட்டிக் கொடுத்தவையும் சேர்ந்து தான் நாடுகடந்த தமிழ்ஈழம் தொடங்கியிருக்கினம். உருத்திரகுமார் இவர்களுடன் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசினவராம் கேள்விப்பட்டீர்களோ?
• அப்ப நீங்கள் எதுக்கு சப்போட்? அண்டைக்கும் குளப்பினாங்கப்பா, இப்பவும் குளப்புகிறானுகளப்பா? கண்டறியாத தமிழ்ஈழமும் நீங்களும். இங்சை வந்தனீங்கள் வாழ்ந்து போட்டுப் போங்கோவன்.
• ஊரிலை எல்லாம் வெறுமையாப் போச்சு இஞ்சை இருந்தாவது போராடவேணும் தானே.
• முகிலமும் நெடியவனும் பிரச்சனையோடை ஒழிச்சிட்டாங்கள். இருக்கிற சனத்தைக் கொண்டிழுக்க யாராவது வேணும் தானே எண்டுதான் பேரவை துவங்கியிருக்கினம்.
• அங்கை மக்களாலை போராட ஏலாது நாங்கள் தான் இஞ்சை இருந்து ஏதாவது செய்ய வேணும். (ஏன் தமிழீழம் வாங்கி அனுப்பப் போறியளோ?)
• வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்குத் தான் அரசாங்கம் பயப்படுது. நாங்கள் ஒன்று சேருவது முக்கியமெல்லே (இரண்டாய் பிரிந்து நிற்கிறீர்கள் எப்படி ஒன்றாகிறதைப் பற்றிக் கதைக்கிறீர்கள்).
• இரண்டு பகுதியும் வட்டுக்கோட்டையைத்தான் கொண்டு திரியினம். அதை வைச்சு எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாங்களோ? இதுக்கிள்ளை யார் யாருக்குள்ளை வேலை செய்யுறது எண்டதுதான் பிரச்சனை.
• திரும்பவும் அடிபடப்போறாங்கடா சாமி.
• நாளைக்கு எல்லாத் தமிழர்களும் எங்களுக்குத்தான் வோட்டுப் போட்டவை எண்டு நோர்வே அரசாங்கத்திடம் சுத்தப் போறாங்கடா டோய்.
• புலியின்ர காலத்திலேயே தமிழீழத்தில வீடு வாங்காமல் கொழும்பில வீடு வாங்கினாங்கள். தமிழீழம் கிடைக்காதெண்டு அப்பவே உவங்களுக்குத் தெரியும்தானே? இப்ப புலி செத்தபிறகு நாடுகடந்த தமிழீழம் எண்டுசொல்லி இனி எந்தநாட்டில வீடுவாங்கப் போறாங்களோ தெரியாது.
• தலைவர் போனதாலை எல்லாரும் தாங்கள் தாங்கள் தலைவரா நிக்கிறாங்கள்.
• தலைவர் போனதாலைதான் இந்தத் தலையிடியள் தொடங்கியிருக்கிறாங்கள்.
• அன்னை பூபதி பள்ளிகூடம் என்னமாதிரி அண்ணை? எல்லாரிட்டையும் காசுவாங்கித் தானே கட்டிடம் வாங்கினவங்கள். படிப்பறிவில்லாதவையும் படிப்பிக்கினம். நடிப்பு மட்டும் ஏதோ கிராயுவேட் பண்ணின மாதிரி. கோடிக்க ணக்கிலை வாங்கின வங்கள். உது ஆற்றை பேரிலை கிடக்குது, நடக்குது? வேதாளம் பார்த்த வெங்காயங்கள் யார் கேக்கப் போகிறாங்கள்.
• மற்றவங்களின்ரை காசிலை தின்னப் பழகிட்டாங்கள் விடுவாங்களோ.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ…….!!!!!!!

சர்வதேச நாணய நிதியம் 329.4 மில். அமெ. டொலர் கடன் வழங்கத் தீர்மானம்

images-ims.jpgஇலங் கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப் போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஈஸ்ட்ஹாமில் ஈழத்து நூல்களின் கண்காட்சி

காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் நூல் அறிமுகமும் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சி இன்று சனிக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு றினிட்டி சென்ரரில் நடைபெறவுள்ளது.

Trinity Centre
East Avenue
Eastham
London
E12 6SG
(Eastham Tube Stationற்கு அருகாமையில்)

தொடர்புகட்கு: கவிஞர் முல்லை அமுதன்
0208 586 7783

மீள்குடியேற்ற பகுதிகளுக்கு தபால் சேவை விஸ்தரிப்பு

141009post-box.jpgவன்னிப் பிரதேசத்தில் யோகபுரம், துணுக்காய் ஆகிய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கும் என வடபிராந்திய பிரதி அஞ்சல் மா அதிபதி வீ. குமரகுருபரன் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகள் வழங்கும் நோக்குடன் தபால் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களிலும் தபால் சேவைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு தபால் அலுவலகங்கள் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ளன. இதற்கு 160 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப் பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப் பித்துப் பேசினார். தேசிய கூட்டமைப்பு,  மு.கா. எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க., ஜே.வி.பியினர் சபையில் இருக்கவில்லை. பாராளுமன்றம் இம் மாதம் 17 இல் மீண்டும் கூடும்.

தெ.மா.சபை உறுப்பினர் நிசாந்த கைது

220909southern_province.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

காலி மஜிஸ்திரேட் நேற்று பிறப்பித்த பிடிவிறாந்து உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலின் போது அதிகாரிகளுடன் முறைகேடாக நடந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்

0000deminingmachine.jpgஇலங் கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தெரிவித்துள்ளார்.

காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை: 114 நாடுகள் ஆதரவு: 18 நாடுகள் எதிர்ப்பு

ஐ.நா.வால் வெளியிடப்பட்ட காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை கடந்த வியாழக்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்டது. 114 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. ஐ.நா. பொதுச் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் இணைந்து விசாரணைக்கெதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் நடுநிலைமை வகித்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் இராணுவங்கள் நடந்து கொண்ட விதங்கள் பற்றி அந்நாடுகளை விசாரணை செய்ய வேண்டுமென ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது. இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் இந்த அறிக்கை 575 பக்கங்களைக் கொண்டதாகும்.

விசாரணைகள் மூன்று மாதங்கள் இடம்பெறவுள்ளதால் இஸ்ரேல், பலஸ்தீன் தரப்புக்கள் இதற்குப் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பேரழிவு ஆயுதங்களைப் பாவித்தமை, மக்களை யுத்தக் கேடயமாக பாவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவ்விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் 1300 பலஸ்தீனர்களும் ஹமாஸின் தாக்குதலில் 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மஸ்ஜித்களின் மீதும் அகதிகள் தஞ்சமடைந்த முகாம்கள் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட்டதாலே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுகின்றது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஜுரிஸ்ட் ரிச்சார்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயாரித்தது இஸ்ரேலையும், பலஸ்தீனையும் விசாரணை செய்தபின் பெறப்பட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தின்பின் ஐ. நா.வின் பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஐ.நா. பொதுச் சபைக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை பகிஷ்கரிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமுள்ள போதும் ஐ.நா. பொதுச் சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரமில்லை.

சவுதி அரேபிய பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

சவூதி அரேபிய பெண்ணை கொலை செய்த ஒரு இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவைச் சேர்ந்தவர் முகமது நவ்ஷாத் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பந்தர் மற்றும் ஹலிமா இவர்கள், சவூதியில் பணிபுரிந்து வந்தனர். 2005ல் இவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்தனர்.

இதையடுத்து, இவர்கள் மூவருக்கும் சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகமது நவ்ஷாத்துடன், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூவரும், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

சவுதியில் இந்தியர்களுக்கு இது போன்ற மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என, இவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.