நிவாரணக் கிராமங்களில் இன்னும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிர்களுக்கு நானே பொறுப்பு என்பதால் அப்பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்ற முடியும் ஜனஹமுவ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது. கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.
நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.
அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம். மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது. அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை” என்றார்.