September

September

ஈக்வடோர் சிறையில் நடந்த கலவரம் – 100பேர் பலி !

ஈக்வடோரில்  உள்ள சிறையில் நடந்த கலவரத்தில் 100 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். ஈக்வேடார் சிறைச் சாலைகளில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் மீண்டும் நாட்டின் முக்கிய சிறைச் சாலையில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,

“ ஈக்வடோரில்  உள்ள குயாகுவிலில் அளவுக்கு அதிகமான சிறைக் கைதிகள் உள்ளனர். இதில் சிறை கைதிகளிடம் ஏற்பட்ட மோதலில் 100 பேர் பலியாகினர். 52 பேர் காயமடைந்தனர். சிறையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் துப்பாக்கிகளை வைத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு தினசரி ஒரு குவளை பால். – விவசாய அமைச்சு நடவடிக்கை !

வறிய பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் நோக்கில் அவர்களது நலன் கருதி சிறிய அளவிலான 6 பால் பதப்படுத்தும் நிலையங்களை அமைக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஒரு குவளைப் பால் வழங்கும் நோக்கில் இந்த நிலையங்கள் கட்டப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

குறித்த பால் பதப்படுத்தம் நிலையங்கள் 13.9 மில்லியன் யூரோ பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு பால் பதப்படுத்தும் நிலையத்தில் இருந்தும் ஒரு நாளைக்கு 5,000 லீற்றர் வீதம் இந்த ஆறு நிலையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 30,000 லீற்றர் பால் பதப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“ஆசிரியர்கள் மீது சரத் வீரசேகர அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு !

“சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” என இலங்கை  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை பொலிஸார் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ( Joseph Stalin )தெரிவித்தார்.

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸாரினால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் இலங்கை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்தமாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் பைசர் தடுப்பூசி மையங்களை உருவாக்குங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கொழும்பு இராணுவ வைத்தியசாலைகளில் போடும் பைசர் தடுப்பூசியை வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களிலே போடுவது பலருக்கு வாய்ப்பாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று (30) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணங்களை தாண்டிச் செல்ல தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், அவ்வாறு செல்வதாக இருந்தால் பல்வேறுபட்ட அனுமதியைப் பெற்று செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளிற்கு செல்வோருக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

மாகாணங்களை தாண்டி பிரயாணம் செய்ய முடியாத சூழலில் இவ்வாறு கொழும்புக்குச் சென்று தடுப்பூசியை பெறும் நடவடிக்கை சிறந்த ஒன்றாக இருக்க முடியாது. ஆகவே இங்கு எவ்வளவு மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்குரிய தடுப்பூசிகளை உரிய பகுதிகளில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே, இலங்கை அரசாங்கம், சுகாதார பிரிவு இதிலே தலையிட்டு வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் தடுப்பூசி மையங்களை உருவாக்குவதன் மூலம் குறித்த மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும்.

வடமாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசியை வடக்கு மாகாணத்தில் பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.

“ரணிலும் -சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும்.” – வீ. இராதாகிருஷ்ணன் விருப்பம் !

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும்  என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்தார்,

“நல்லாட்சியின் போது அரச தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட விரக்தியாலேயே 69 இலட்சம் பேர் மொட்டு கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் இன்று மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கமும் கொள்கையின்றி செயற்படுகின்றது. நாட்டை ஆள்வது அரசாங்கமா அல்லது வர்த்தக மாபியாக்களா என தெரியவில்லை. பல பிரச்சினைகள் உருவாகின்றன.

இந்நிலையில் ஒரு பிரச்சினையை மறைப்பதற்காக மற்றுமொரு பிரச்சினையை தோற்றுவிக்கும் தந்திரத்தை அரச தரப்பினர் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறக்க செய்வதற்காக தற்போது மற்றுமொரு தாக்குதல் பற்றி தகவல் பரப்பட்டு வருகின்றது.

அதேவேளை,  மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலகிச்சென்றவர்கள் மீள கட்சியில் இணையலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பலரும் இது தொடர்பில் எம்மை தொடர்பு கொண்டுள்ளனர். தவறை உணர்ந்து, கொள்கையை ஏற்று அவர்கள் இணைந்துகொள்ளலாம். கட்சியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”  என்றார்.

இலங்கையில் 25 ரூபாயினால் அதிகரிக்கும் சிகரெட்டின் விலை !

எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக குறித்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் 31 சதவீதமான ஆண்கள் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதுடன், மேலும் 26 சதவீதமானவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின்போது சிகரெட்டுக்கான விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சதவீதமானோர் 25 ரூபாயிற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர்.

மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட  மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 23.09.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்யப்பட்டமைக்கான ரசீது வழங்கப்பட்டனவா, கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கைகள்  உள்ளடங்களாக விரிவான அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை காவல்துறை பரிசோதகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட, வங்காலைபாடு கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளிகள்  24.09.2021 (வெள்ளி) அன்று கடலுக்கு தொழிலுக்கு சென்று  வீடு திரும்பிய வேளையில் கடற்படையினரால் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வெளிவந்த செய்திகளை அடிப்டையாக கொண்டும் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பூரண விளக்க அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பேசாலை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் பேசாலை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் அறிககையும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெறும்.

மேற்படி இரு முறைப்பாடுகளும் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்குமாறு பணித்து தந்தை தாக்கியதில் மகன் பலி !

தும்புத்தடியால் தாக்கப்பட்டமையால் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் காலி பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி – மஹமோதர பகுதியில் 16 வயதான குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மயக்கமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணித்தார்.

ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா – அதிர்ச்சியில் அமெரிக்கா !

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது இராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது. அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா இராணுவம் தெரிவித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டுமொரு ஏவுகணையை சோதித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆயுத அமைப்பின் வளர்ச்சி எல்லா வகையிலும் தற்காப்புக்கான தேசத்தின் திறன்களை அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத ஏவுகணை சோதனையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

முதன்முறையாக துனிசியாவில் பிரதமராகும் பெண் !

வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே என்ற பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உயர் கல்வி அமைச்சகத்தின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர்.

கடந்த ஜூலை மாதம் நாட்டின் அதிபர் கயிஸ் சயித் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டதை அடுத்து 2 மாதங்களாக பாராளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

துனிசியாவின் ஜனாதிபதி புதன்கிழமை நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்தார், அவரது முன்னோடி பதவி நீக்கம் செய்யப்பட்டு பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த அவரை நியமித்தார்.

இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திய இஸ்லாமிய கட்சியை ஒதுக்கி வைத்தது, மற்றும் துனிசியாவின் இளம் ஜனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு சதி என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாட்டை பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவது அவசியம் என்று சையத் கூறினார்.