19

19

மூன்று அமைச்சர்களின் எதிர்ப்புக்குள்ளும் அமெரிக்காவின் கைகளுக்கு போகும் கெரவலப்பிட்டிய மின்நிலையம் !

மூன்று அமைச்சர்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள் வாசுதேவநாணயக்கார விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உத்தேச உடன்படிக்கை மற்றும் அமைச்சரவை பத்திரம் குறித்து மூன்று அமைச்சர்களும் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட விதத்தினை சுட்டிக்காட்டி அவர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

முதலில் அமைச்சர்கள் மத்தியில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்காமல் நிகழ்ச்சி நிரலிற்கு வெளியே சமர்ப்பித்ததாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
கேள்விபத்திரம் கோரப்பட்ட பின்னர் மூன்றாம் தரப்பிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டமை நல்லாட்சி கொள்கைளிற்கு முரணானது என அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர்களின் எதிர்ப்பையும் மீறி நிதியமைச்சு கெரவலப்பிட்டிய யுகடனாவி 300மெகாவோட் மின்நிலையத்தை அமெரிக்காவை தளமாக கொண்ட நியுபோர்ட்டிரஸ் எனேர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

“நல்லாட்சி அரசில் ஒன்றும் செய்யாதுவிட்டு இன்று அனுராதபுரம் சென்று நல்லவர் போல நடிக்கிறார் மனோகணேசன்.” – நடராஜா ரவிக்குமார்

“நல்லாட்சி அரசில் அமைச்சராக இருந்தபோது ஒரு அரசியல்கைதியையும் விடுவிக்காது இன்று அனுராதபுரம் போய் சிறைக்கு முன்பு நின்று மனோகணேசன் நாடகமாடுகிறார்.” என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மனோ கணேசன் அநுராதபுரம் சிறைக்குச் சென்று கைதிகளது விடுவிப்பு தொடர்பில் சிறைச்சாலை முன்பாக நின்று முகநூலில் வீடியோ மற்றும் படங்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவேற்றம் செய்து, ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இது தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே  நடராஜா ரவிக்குமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐந்து வருடங்கள் நல்லாட்சியில் சகலவிதமான அதிகாரங்களுடன் இருந்தபோது வாய்மூடி, கைகட்டி, மௌனமாக இருந்துவிட்டு தற்போது அரசியல் விளம்பரம் தேடுவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நின்று முகநூலில் வீடியோ மற்றும் படங்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவேற்றம் செய்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனது செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மைத்திரி – ரணில் நல்லாட்சியை தானே கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து வந்த மனோ கணேசன், அந்த நல்லாட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிரு நாட்களிலேயே விடுவித்து இருக்கலாம்.

ஆனால் அதனை அப்போது செய்யாது, இப்போது விழுந்திருக்கும் தனது செல்வாக்கை சரி செய்வதற்காக இரண்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் கூட அழைத்துச்சென்று, அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நாடகமாடுகிறார்.

இன்று அனுராதபுர சிறைச்சாலைகளில் இருக்கும் அத்தனை கைதிகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் அதே சிறையில்தான் இருந்தார்கள் என்பது மனோ கணேசனுக்கு தெரியாது இருப்பது வேதனைக்குரிய விடயம். தான் சார்ந்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் குறைந்தது ஒரு தமிழ் சிறைக்கைதியையாவது இவர் முயற்சி எடுத்து விடுவித்து இருந்தால், இவர் இன்று போடும் கூச்சலுக்கு நாங்களும் உறுதுணையாக இருந்திருப்போம்.

ஆனால் அப்படி எதுவும் இவர் நல்லாட்சியில் சாதனை செய்ய இல்லை. எனவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு எனும் வார்த்தையை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர் என்பதாகவே நாங்கள் கருத வேண்டும்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

கணவனை கொலை செய்தமை தொடர்பில் மனைவி வழங்கியுள்ள வாக்குமூலம் !

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், நேரடியாக சென்று விசாரணைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேற்கொண்டார்.

நேற்று இரவு, மனைவியால் திருவலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

இதேவேளை கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் நேற்றைய தினமும் அவ்வாறு செய்தமையினால், ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரிடம் அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா உயிர்ப்பலி !

இலங்கையில் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக நேற்றையதினம் தெரிவிக்பபட்டதுடன் நேற்றுமுன்தினம் நீண்டநாட்களின் பின்னர் குறைவான கொரோனா உயிர்ப்பலி (84பேர்) பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,125 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 504,055 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 432,038 ஆக அதிகரித்துள்ளது.

2021 வருடத்திற்கான விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது வென்ற மட்டக்களப்பு குடும்பம் !

விவசாய அமைச்சினால் நடாத்தப்பட்ட 2021 வருடத்திற்கான விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புக்களுக்கு மதிப்பளித்தலும் விவசாயத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கக்கூடிய கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்தலும் கண்டுபிடிப்பாளர்களை கௌரவப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட தெரிவில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 03 கண்டுபிடிப்புகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த தங்கவேல் சக்திக்குமார் , சுதர்சினி சக்திக்குமார் , சக்திக்குமார் போஜஸ்வினி , சக்திக்குமார் பிரஜித் ஆகியோர் சேர்ந்து வடிவமைத்து உருவாக்கி தங்கவேல் சக்திக்குமார் அவர்களால் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட சேதனப்பசளை தயாரிக்கும் இயந்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கண்டுபிடிப்பானது தேசிய ரீதியிலான உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் , அனுசரணை வழங்கும் விதமாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய ரீதியாக செயற்படுத்தப்படும் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக விவசாய அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது .
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இந்த நான்கு கண்டுபிடிப்பாளர்களும் ஏற்கனவே பல கண்டுபிடிப்புகளுக்காக தேசிய விருதுகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

மீதேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் – உலக தலைவர்களிடம் பைடன் வலியுறுத்தல் !

காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டையில் மீதேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதார நிகழ்ச்சி ஒன்றில் பைடன் பேசும்போது,

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டயில் மீதேன்  வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உலகளாவிய மீதேன்  உமிழ்வை 2030க்குள் குறைந்தது 30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் உலக வெப்பமயமாக்கலை உடனடியாகக் குறைத்துவிடாது. ஆனால், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும். அடுத்த மாதம் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன் இது தொடர்பான முயற்சிகளை உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும். பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

”பூமியில் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வு அதிகரிக்கும் பட்சத்தில் பூமியின் நில அமைப்பும், கடலும் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கும் திறனை இழக்கும். இதனால் கடல், பனிப்பாறைகள், கடல் நீர்மட்ட உயர்வில் ஏற்படும் மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத நிலை உண்டாகும்” என்று ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை கலைத்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.

தலிபான்கள்  ஆட்சியை பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதே போல பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சகத்தை பெண்கள் விவகார அமைச்சரவை கலைத்துள்ளனர். அந்த அமைச்சகத்துக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என்று பெயரை மாற்றி உள்ளனர்.

இந்த அமைச்சகம் ஏற்கனவே 1996 முதல் 2001 வரை பெண்கள் விவகார அமைச்சரவை ஆட்சியில் இருந்தபோது செயல்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சகம் சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இலங்கை வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது.” – விராட் கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அபுதாபியில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஆட்டம் முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பெங்களூரு அணியின் தலைவர்  விராட் கோலி பின்னர் கூறியதாவது:-
எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா இலங்கையில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.
அங்குள்ள ஆடுகளங்களும், அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை, மனஉறுதியுடன் 2-வது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம்.” இவ்வாறு கோலி கூறினார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல் !

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில், பெரிய சுத்தியல் உடன் பயணித்த சந்தேகநபரே, இளம் குடும்பத்தலைவரை தலையில் தாக்கி, கொலை செய்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் கடந்த வியாழக்கிழமை வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். அவரை மீட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்தபோது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார். குறித்த சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இறுதிக்கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

அதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில் பெரிய சுத்தியல் உடன் பயணித்த நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரை, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு  முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது நீதிபதி, அவரை 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால், இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என யாழ்.போதனா  வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரே இந்தக் கொலையை செய்துள்ளார் என சந்தர்ப்ப சூழல்நிலையின் அடிப்படையில் தம்மால் நிரூபிக்க முடியுமென காங்கேசன்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா – வவுனியாவில் சம்பவம் !

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற சுகாதார பிரிவினர், அங்கு இருந்தவர்களுக்கு அன்ரியன் பரிசோதனையினை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆலயத்தின் குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தொற்று உறுதியானவர்கள் அவர்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.