கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.
ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டம்பர் 12 ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை அன்றைய தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் அந்த செய்தியில் பதிவிட்டுள்ளார்.
தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை – ராகல பகுதியைச் சேர்ந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக எண்ணுவதாகவும், அதனால் தன்னுடன் ஒன்றாகப் பழகும் ஏனைய பொலிஸ் நண்பர்களுக்கும் அது தொற்றலாம் என நினைப்பதால் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாக, குறித்த கான்ஸ்டபிள் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்த நிலையில் அந்தக் கடிதத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொழும்பின் முகத்துவாரம் பொலிஸ் நிலைய தங்குமிட, கழிவரையில் தனது போர்வையை உபயோகித்து நேற்று (9) மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் காண்ஸ்டபிள் கடந்த மார்ச் 15 ஆம் திகதியே, பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதியே முகத்துவாரம் பொலிஸ் நிலைய்த்துக்கு சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா, இன்று ( 10) ஸ்தலத்துக்கு சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் பேசிய அவர் ,
கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்.
ஆனால் தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஒரு ஆவணம் அனுப்பப்பட்டதாக அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.
அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என. அவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெறாது எந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை.
அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன் நல்ல உறவாக உள்ளார்கள்.அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள் .
நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் கூட்டாகச் ஏற்படும் போது பல பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்படும்.ஆனால் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.
தற்போது கிடைக்கும் மாதிரிகளின் அடிப்படையில் இலங்கையில் டெல்டா மாறுபாடே 95.8% கொரோனா தொற்றுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலை ஆராய்ந்தமையின் அடிப்படையில் இந்த தகவல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 95.8% தொற்றுகளுக்கு டெல்டா மாறுபாடு காரணமாக இருந்தது என்றும் பல்வேறு மாகாணங்களில் டெல்டா பாதிப்பு 84% முதல் 100% வரை காணப்படுவதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு, இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு SARS-CoV-2 வகைகளின் பரவலைக் கண்டறிவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும், மக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது குறித்து தங்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியான சர்வதேச கவனமும் அழுத்தமும் சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க உதவும் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி கூறியுள்ளார்.
அத்தோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரை கைது செய்து அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அண்மையில் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில், சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இந்த விசாரணைகளை மிக விரைவாக மேற்கொண்டு, அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவுக்கு விற்பனை செய்வதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் அகழ்ந்து செல்லப்படுதாக அறியக்கூடியதாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்தார்.
மாலைதீவில் தீவு ஒன்றை அமைப்பதற்காக இந்த மணல் விற்பனை செய்யப்படுவதாக அறியக்கூடியதாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருவர் இதில் தொடர்புபட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் மாலைதீவிலுள்ள தீவை நிரப்புவதற்கு, இலங்கையில் இருந்து மணல் அனுப்பப்பட்டுள்ளமை நிருபிக்கப்படுமாக இருந்தால், அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தயார் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படவில்லை.” எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இருப்பினும் ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக தாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை என்றும் அவர் சுட்டிக்கானார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பால் அதனுடைய தலைவர் இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமே ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
காந்தியமும் புளொட்டும் அரசியலும் காதலும் – செல்வி உடனான நட்பும் காதலும்
களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!
தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 05 & 06 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 06.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
பாகம் 05 & 06:
தேசம்: கிட்டத்தட்ட 80 ஆம் ஆண்டு காலம் வரைக்கும் காந்தியத்தோடு உங்களுடைய செயற்பாடுகள் இருக்குது. அதுக்குப் பிறகு காந்தியம் எவ்வளவு காலம் இயங்கியது என்று நினைக்கிறீர்கள்?
அசோக்: 82 இல் வவுனியாவில் விமானாப்படைத் தாக்குதல் நடக்குது தானே. அது புளொட்டின்ட தோழர்கள்தான். அற்புதம் இன்னுமொரு தோழரும் சேர்ந்து தான் அந்த விமானப்படை தாக்குலை செய்கின்றார்கள்.
தேசம்: அற்புதம் இப்ப எங்க இருக்கிறார்?
அசோக்: லண்டனில். அதுல ஒரு தோழர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அற்புதம் பிறகு கைது செய்யப்பட்டவர். அதுலதான் காந்தியம் மீதான சந்தேகம் வருது.
தேசம்: எண்பதுகளிலேயே?
அசோக்: இது வந்து 83 ஆரம்பத்தில என்று நினைக்கிறேன். காந்தியம் மீதான போலீஸ் கண்காணிப்பு அதுக்குள்ள தான் வருது. முதலே சந்தேகம் இருந்திருக்கு, இயக்கத்துடன் தொடர்பு இருக்கு எண்டு. இதுல உறுதிப்படுத்தப்பட்டது. கடும் கண்காணிப்பு, அதன் பிறகு 1983 ஏப்ரல் என நினைக்கிறன். உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.
தேசம்: வேறு யார் யார் கைது செய்யப்படுகிறார்கள்?
அசோக்: அந்தக் காலகட்டத்தில் காந்தியத்தில் வேலை செய்த நிறைய பேர்… அதுக்கு முதல் ஒருதரம் சந்தேகத்தின் பெயரில் குமரன் தோழரும் கைது செய்யப்படுகிறார், கோயில்குளம் காந்தீய ஒப்பிசிலிருந்து. அப்பவே சந்தேகம் வந்திட்டு, புளொட்டுக்கு வேலை செய்பவர் குமரன் என்று. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பிறகு விடுவிக்கப்படுகின்றார்.
தேசம்: ராஜசுந்தரம் எல்லாம் இந்த தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுகிறார்கள்?
அசோக்: காந்தியத்துக்கும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆயுத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லி அச்சந்தேகமும் இருந்ததினாலும் தான் உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றவர்களோடு தொடர் என்று கூறி கூறி டேவிட் ஐயாவும் டாக்டர் இராஜசுந்தரமும் கைது செய்யப்படுகிறார்கள்.
தேசம்: காந்தியத்தில் இருக்கும்போது இது தொடர்பில் ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா?
அசோக் : காந்தியத்தில் இருக்கும்போது நான் கைது செய்யப்படவில்லை. நான் முதன் முதலாக கைது செய்யப்படும்போது புளொட்டில் …
தேசம்: 80க்கு பிறகுதான் அது நடக்குதா
அசோக்: ஓம்
தேசம்: அப்ப அதைப்பற்றி பிறகு கதைப்போம். இப்ப நீங்கள் பதின்ம வயதில் இருக்கிறீர்கள் அரசியல் துடிப்பு அதெல்லாம் சரி. காதலின் பருவமும் இதுதான். அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். பிற்காலத்தில் நாங்கள் எல்லாரும் அறிந்த உங்களுக்கும் செல்விக்குமான உறவு. அது எப்படி உருவாகிற்று?
அசோக்: இளம்வயது கோளாறுகள் எல்லோருக்கும் இருக்கும் தானே. அது நிறைய நடந்திருக்கு. செல்வியின் உடனான தொடர்பு எப்படியென்றால். அந்த நேரம் பேனா நட்பு என்ற ஒன்று இருந்தது. பத்திரிகைகளில் பேனா நண்பர்களின் முகவரி வரும்.
தேசம்: அது என்ன என்று சொல்ல முடியும் என்றால் நல்லா இருக்கும்.
அசோக்: பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பேனா நண்பர் பகுதி என்று ஒன்று வரும். அதில பேனா நட்புக்களை விரும்புகின்றவர்களின் பெயர் முகவரி அவர்களின் விருப்பங்கள் ஈடுபாடுகள் பொழுது போக்குகள் பற்றிய விபரங்கள் இருக்கும். உதாரணமாக நான் அசோக் என்றால்… அசோக் வயது போட்டு எனக்கு விருப்பமான துறை, கவிதை, கட்டுரை, இலக்கியம், விளையாட்டுத்துறை என்று எல்லாம் வரும். அப்ப அதில் ஈடுபாடு கொண்டவங்க எல்லாம் பென் ஃப்ரெண்ட் ஆவார்கள். கடிதத் தொடர்புதான்.
தேசம்: அந்த முகவரிகள் பத்திரிகையில் வரும். அதுல இருந்து உறவுகள் ஏற்படும்.
அசோக்: அந்த உறவினால் என்ன நடக்கும் என்று கேட்டால் உங்களுக்கு இடையே ஆழமான ஒரு கருத்து பரிமாற்றத்தை உரையாடலை அது கொண்டுவரும். ஏனென்றால் உங்களுடைய துறை சார்ந்த நபருடன் தானே நீங்கள் தொடர்பு கொள்வீர்கள்..
தேசம்: ஃபேஸ்புக்கும் முதல் வந்த வடிவம்…
அசோக்: பேஸ்புக் என்றது வேறு உலகம். பேனா நட்பு என்பது இது ஆரோக்கியமான உலகம். அது உண்மையில ஆழ்ந்த நட்புக்கான ஒரு வெளி. எழுத்துக்கூடாக நீங்க பல்வேறு சர்ச்சைகள் கருத்துக்களை கதைப்பீங்க. உரையாடல், விமர்சனப் பண்பை வளர்த்துக் கொள்வீங்க… அப்படித்தான் எனக்கு நிறைய பென் பிரண்ட் இருந்தது. அப்படியொரு பென் பிரண்ட் தான் செல்வியும்…
தேசம்: எந்த வயசு கட்டத்துல வந்தது… ?
அசோக்: நான் நினைக்கிறேன், 16 17 வயசுல வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது இளந்தளிர் வாசகர் வட்டம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம் என நினைக்கிறன்… அந்த காலகட்டத்திலேயே தான் தொடர்பு வருகிறது. பிறகு நான் காந்தியத்துக்குள்ள வரேக்க செல்வி காந்தியத்துக்கும் வாரா என்ட தொடர்பில. நான் சந்திக்க முதல், செல்வியைச் சந்தித்தது என்னுடைய நண்பர்கள்தான். செல்வியை சந்திக்கிற என்னுடைய நண்பர்கள் செல்வி தொடர்பாக அவர்கள் தாற அபிப்பிராயம் செல்வி மீதான பெருமதிப்பை ஏற்படுத்துது.
தேசம் : உங்களுக்கு 16,17 வயசுல நீங்க தொடர்புகொண்டா அவாவுக்கு எத்தனை வயசு அப்ப?
அசோக்: செல்வி என்னை விட 3 வயது இளமை.
தேசம்: அப்ப அவாவுக்கு கிட்டத்தட்ட 14 வயசு இருக்கும். அப்ப இது பேனா நட்பு என்ற ரீதியில் தான் உருவானது. எப்ப இது நீங்க காதலியாக அல்லது…
அசோக்: அது நீண்ட காலம். காந்தியத்துக்குள்ள வந்ததுக்கு பிறகு தோழர்கள் நிறைய பேர் செல்வியை சந்திக்கினம். செல்வி காந்தியத்துக்குள் வந்து வேலை செய்கிறார். பிறகு புளொட்டுக்கு வாறா. புளொட்டின் ஆரம்ப காலத்தில் தான் அந்த நட்பு உருவாகிறது.
தேசம்: அது எந்த ஆண்டு காலகட்டமாக இருக்கும்?
அசோக்: 83இல் அதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். அதுக்கு முதல் நெருக்கமான பென் பிரண்ட் தான். நேரடியாக சந்தித்த பிறகுதான் அந்த லவ் எனக்கு உருவாகுது.
தேசம்: எப்ப நேரடியாக சந்திச்சனீங்கள்?
அசோக்: 82 நேரடியா சந்தித்திருப்போம்.
தேசம்: நீங்கள் காந்தியத்துக்குள்ள வேலை செய்யும்போது வவுனியாவுக்கு போறீங்க. வவுனியாவில் தான் அந்த சந்திப்பு ஏற்படுதா?
அசோக்: ஓம். நான் முதன்முதல் சந்தித்தது சேமமடுவில. செல்வியின்ர வீட்டில. அண்ணி யாழ்ப்பாண யூனிவசிற்றில படித்துக்கொண்டிருந்தவ. அப்ப செல்வி, யாழ்ப்பாணத்திலே அண்ணியைச் சந்திச்சு இருக்காங்க. அப்ப அண்ணி சொன்னா “செல்வி வந்தது. யாழ்ப்பாணம் வந்தனீ, செல்வியை சந்தித்துவிட்டு போ” என்று.
தேசம்: அப்ப நீங்க வவுனியாவில் சந்திக்கவில்லையா ?
அசோக்: வவுனியாவில் சேமமடுவிலதான் தான் சந்திச்சன். செல்வி யாழ்ப்பாணத்தில் ரியுசன் சென்டரில படித்துக் கொண்டிருந்தவ. அப்ப நான் யாழ்ப்பாணம் வர, செல்வி போயிற்றாங்க சேமமடுவுக்கு. அப்ப அண்ணி சொன்னா, “செல்வி சேமமடுவுக்கு போயிட்டுது, வேணும்டா அங்க போய் சந்தித்துவிட்டு போ” என்று. அப்ப நான் வவுனியா போகும் போது, ஓமந்தையில் இறங்கி , சேமமடுவுக்கு போய் சந்திச்சிட்டுத் தான் ஊருக்கு போனான்.
தேசம்: அப்போ உங்களுக்கு…
அசோக்: லவ் எல்லாம் இல்லை. பிரெண்டாதான் இருந்தது.
தேசம்: இது எத்தனையாம் ஆண்டு நடந்தது ?
அசோக்: 83ஆக இருக்க இயலாது . 82 நடுப்பகுதியாக இருக்கலாம்.
தேசம்: செல்வியின் அரசியல் மாற்றம் என்பது காந்தியத்திலிருந்து புளொட்டுக்குப் போக… நீங்கள்தான் செல்வியையும் காந்தியத்துக்கு கொண்டு வாறீங்கள்…
அசோக்: ஓம் என்ட பிரண்ட் என்டதும் நிறைய பேர் சந்திக்கினம். அப்ப காந்திய ஈடுபாடுகள் வருது. சேமமடு பக்கத்தில காந்திய வேலைத்திட்டங்கள் எல்லாம் இருந்தது. அப்ப காந்திய கருத்தரங்குகளிலும் செல்வி கலந்துகொண்டார்.
தேசம்:அப்ப நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களா? பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது காந்தியத்தில்?
அசோக்: காந்தியத்தின் சிறுவர் பாடசாலைகள் முழுக்க பெண்கள் தானே ஆசிரியர்கள். வொலன்டியேர்ஸில குடியேற்றத் திட்டங்கள் போன்ற வேலைகளுக்கு ஆண்கள் ஈடுபட்டார்களேயொழிய கல்வி, சுகாதாரம் சார்ந்த விடயங்களில் எல்லாம் பெண்கள்தான் ஈடுபட்டார்கள். கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் அவற்றுக்கு பொறுப்பாக இருப்பார்கள். அப்ப செல்வி வந்து இதுல இல்ல. செல்வி வொலன்டியராக கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுற ஆளாத்தான் இருந்தா.
பாகம் 06:
தேசம்: காந்திய இயக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மற்றவர்களுடனான உறவுக்கும், அவருடனான உறவுக்கும், எப்படி அது உங்களுக்கான காதல் என்ற நிலைக்கு போச்சுது ?
அசோக்: பேனா நட்பு என்ற உறவு வரும் போது அது இலக்கிய உறவு மாத்திரமல்ல. எங்களுக்கு அரசியல் ஆர்வம் இருந்ததால, அது ஒரு அரசியல் சார்ந்த உறவாகவும் இருக்கும்தானே. ஒரு ஆழமான உரையாடலாக இருக்கும். எங்கட விருப்புக்கள் இதனை தீர்மானிக்கும். அத்தோட பேனா நட்பு பரஸ்பரம் ஆழமான புரிதலை நேசிப்பை அன்பை உருவாக்கும். ஆணும், பெண்ணுமாக இந்த நட்பு இருக் கிற பட்சத்தில love வருவதற்கான சாத்தியம் நிறைய இருக்கு. அப்படித்தான் எங்களுக்குள்ள love வந்தது.
தேசம்: நீங்க அந்த உறவு வருவதற்கு முதல் நீங்கள் புளொட்டில் இணையவில்லை. காந்திய இயக்கத்தில் தான் இருக்கிறீர்கள்.
அசோக்: இரண்டிலும் இருக்கிறேன். அதற்குப் பிறகு செல்வி எங்களோட வந்த வேலை செய்யத் தொடங்குகிறா. காந்தியத்திலும் ஆண், பெண் உறவு என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. தோழமையுடன் இருந்தது. காதல்களும் இருந்தது. காதல்களும் கூட ஆரோக்கியமான உறவாகதான் இருந்தன.
தேசம்: ஆரோக்கியமான காதல் எனும் போது ? நீங்கள் எதைக் குறிப்பாக சொல்லவாறீங்கள்?
அசோக்: ஒரு பரஸ்பரம் சமநிலை. இப்ப நாங்க சொல்றோம் தானே ஒரு ஆணாதிக்கத்தனம் இல்லாமல் பரஸ்பரம் உரிமைகளை கொண்ட, சமநிலையில் தோழிகளாக பார்த்தல், ஒரு ஆரோக்கியமான சமநிலை உரையாடல். சமத்துவம். ஒரு சிக்கல் இருக்கு தானே, காதலுக்குள்ள. காதல் என்றாலும் கூட ,அதுக்குள்ளேயும் ஒரு ஆணாதிக்கத்தனம், ஆளுமை ஒன்று இருக்கும். அதிகாரம் ஒன்று இருக்கும். அந்த அதிகாரமற்ற முறையில் சுதந்திரமான உண்மையான நேசிப்பு கொண்ட காதல் ஒன்று உருவாகுவதற்கான சாத்தியம் இருந்தது.
தேசம்: பொதுவாகவே காதல் சம்பந்தமான விஷயங்கள் அது மலரேக்க தனிப்பட்ட எதிர்காலம் சம்பந்தமாக தான் கூடுதலாக கதைக்கிறதா இருக்கும். தாங்கள் எப்படி எதிர்காலத்தைக் கொண்டு போவது. இது வந்து முற்றிலும் மாறுபட்ட சூழலாக இருந்திருக்கும். ஏனென்றால், ரெண்டு பேருமே சேர்ந்து அரசியலில் ஈடுபடுகின்றீர்கள். அப்ப உங்களுடைய உரையாடல் பொதுவாகவே அரசியல் சார்ந்து தான் இருக்குமா அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்து கதைக்கப்படுமா ?
அசோக்: ஆரம்ப காலத்தில பேனா நட்பில இருக்கக்க தனிப்பட்ட எங்களின் எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் விருப்பங்கள் என்று என்னவெல்லாமோ கதைத் திருக்கிறம். காதல் என்று வரும் போதும் தனிப்பட்ட விஷயங்கள் கதைத்திருப்பம். எதிர்கால இருவரின் இணைந்த வாழ்வு பற்றி நிறைய கதைத்திருக்கிறம். செல்வி மீது செல்வியின்ர அம்மம்மா, அம்மா எல்லோரும் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தாங்க. செல்விக்கு அப்பா இல்ல. எங்க love செல்வியின்ர அம்மாவுக்கு தெரிய வந்த போது, செல்வியின்ர அம்மா எனக்கொரு கடிதம் எழுதி இருந்தாங்க. கடிதம் ஒரு தாயின்ர நியாயத்தை கொண்டிருந்தது. அது எனக்கு கவலைய வேதனைய கொடுத்திச்சி. படிக்க வேண்டிய வயதில் காதலா என்ற குற்ற உணர்வை என்னில வந்தது. செல்வியின்ர எதிர்கால நல்வாழ்வு என்னால வீணாகிவிடுமோ என்றெல்லாம் நான் அப்ப யோசிச்சி இருக்கிறன்.
தான் கடிதம் எழுதினது பற்றி செல்வியிற்ற சொல்ல வேண்டாம் என அம்மா கேட்டிருந்தா. நான் அத பற்றி செல்வியிற்ற சொன்னதில்ல. நானும் செல்வியும் அம்மாவை ஏமாற்றிவிட்டோமோ என்று இப்ப நினைக்கிறன்.
இயக்கத்துக்கு வந்தபிறகு முழுக்க முழுக்க இயக்கம் சார்ந்த உரையாடல்களாகத் தான் இருந்தது. அடுத்தது இயக்கத்துக்கு வந்ததுக்கு பிறகு இரண்டு பேரும் பிஸியாகிட்டம். அப்ப சந்திக்கிறதும் குறைவு. நாங்க கூடுதலாக சந்திக்க தொடங்கினது யாழ்ப்பாணம் வந்த பிறகுதான்.
தேசம்: உங்கள் அரசியல் தெளிவு மற்ற தோழர்களிடம் இருந்ததா?
அசோக்: இருந்தது ஏனென்றால் வாசிப்பும், அரசியல் அறிவூட்டல்களும் நிறைய நடந்தது. காந்தியத்தில் வேலை செய்த நிறைய தோழர்களைப் பார்த்தீர்கள் என்றால் நான் சந்தித்த தோழர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்தாக்கள் தான். அதற்குக் காரணம் பின்புலம் புளொட் இருந்தது. புளொட்டுக்குள்ள வந்த தோழர்களை பார்த்தீர்களென்றால் ஏதோ ஒரு வகையில் ஒரு சித்தாந்த ரீதியாக வளர்ச்சி அடைந்து தோழர்களாக தான் இருந்திருப்பார்கள். தலைமையை விடுங்கள், தலைமை தொடர்பா எங்களுக்கு நிறைய விமர்சனம் இருந்தது. அதுக்கு கீழ வந்த தோழர்களைப் பார்த்தீர்களென்றால் அவங்க கருத்தியல் ரீதியாக வளர்ச்சியடைந்து தான் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறார்கள். புளொட்டை தேர்வு செய்வதற்கான அரசியல் தெளிவு ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்துள்ளது.
ஏனென்றால், அந்த கால கட்டங்களில் தோன்றிய இயக்கங்கள் தொடர்பாக புலிகள் தொடர்பான விமர்சனம் இருக்கு அவங்களுக்கு. மார்க்சிய ஐடியோலொஜி கொண்ட இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளொட் இருக்கு. அப்ப அவர்கள் புளொட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் புளொட் மக்கள் மத்தியில் வேலை செய்யுது. அவர்களைப் பொறுத்த வரைக்கும் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டுமென்ற அபிலாசை இருக்கின்றபடியால் அவங்கள் புளொட்டைத் தேர்ந்தெடுக்கிறாங்க. புளொட்டுக்கு வந்ததுக்கு பிறகு நான் சந்தித்த தோழர்கள் முழுப் பேரும் அரசியல் வளர்ச்சி கொண்டவர்களாக இருந்தாங்க. மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஆர்வமும், அபிலாசையும் கொண்டவர்களாக இருந்தாங்க.
தேசம்: யாழ்ப்பாண நிலையும் இப்படித்தான் இருந்ததா?
அசோக் : 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான், யாழ்ப்பாணத்தில புளொட்டினுடைய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதற்கு முயல்கிறோம். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் அமைப்புகள் இருக்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியும், தோழர் குமரனும் தான் அங்க முக்கியமான ஆட்களாக இருந்தவை. சத்தியமூர்த்தியும், ரிங்கோ கேதீஸ்வரனும் யாழ்ப்பான யுனிவர்சிட்டியில் இருந்தபடியால், அங்கு பெரிதாக வேலை செய்ய முடியவில்லை. புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அவ்வளவுதான்.
எனக்கு தெரிஞ்சு யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அண்டர்கிரவுண்டுல சுழிபுரத்தில் ஒரு சில தோழர்கள் வேலை செய்தார்கள். சிவசண்முகமூர்த்தியுடன் சுந்தரத்துடன் இயங்கியவர்கள் அவர்கள்.
வெகுஜன மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை. அந்த காலகட்டத்தில் பலம் வாய்ந்த அமைப்பாக EPRLF இருந்தது. எல்லா வகையிலும் அவங்கள் பலமான அமைப்பாக இருந்தவங்க. கருத்தியல் சார்ந்தும் நிறைய வளர்ச்சி அடைந்த தோழர்கள் அவங்களிட்ட இருந்தாங்க. எங்களுக்கு அப்படி இல்ல. அடுத்தது பொலிஸ் நெருக்கடி ,கண்காணிப்புக்கள் இருந்தபடியால யாழ்ப்பாண பொறுப்பாக இருந்த குமரன் தோழரால் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது. அதால குமரன் 83 க்கு முன்னர் முல்லைத்தீவு, வவுனியாவில் எங்களுடன் தான் வேலை செய்தவர். 83 யூலை கலவரத்திற்கு பிறகுதான் மக்கள் அமைப்பு அரசியல் வேலைத்திட்டம் என்று யாழ்ப்பாணத்தில் தொடங்குகிறம்.
தேசம்: இந்த காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது? எவ்வளவு தூரம் பெண்கள் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள்? அரசியலை நோக்கி அல்லது பெண்களை அரசியலை நோக்கி கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?
அசோக்: காந்தியத்தில் வேலை செய்த பெண்கள் பலரும் புளொட்டில் இணைகின்றனர். நிறைய பெண் தோழர்கள். சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் 83க்கு முன்னர் நிறைய பாசறைகள் நடந்தது.
தேசம்: 83 ஜூலைக்கு முதலே இந்த அரசியல் வகுப்புகள் தீவிரமாக நடக்கிறது…
அசோக் : ஓம், தீவிரமாக நடந்தது. யாழ்ப்பாணத்தில நடக்கேலையேயொழிய, அங்கால நிறைய நடந்தது. வவுனியாவில சமணர்குளம் என்ற இடத்தில தொடர்ச்சியாக அரசியல் பாசறைகள் நடந்தது. தங்கராஜா என்ற தோழர் பழைய JVP தோழர் அரசியல் வகுப்புக்கள் எடுத்தவர். பாசறைகள் வகுப்புகள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து நடக்கும். தோழர் கேசவன் எல்லாம் வந்து வகுப்பு எடுப்பார்கள். எல்லா தோழர்களுக்குமான ஒரு அரசியல் வகுப்பாக தான் இருந்தது அது.
தேசம்: அந்தக் காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் கூடுதலாக அரசு எதிர்ப்பு ஊர்வலங்கள் அப்படியான சம்பவங்கள் கூட நடந்திருக்கும்.
அசோக்: நடந்தது. புளொட் ஆரம்ப காலத்தில் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பு. ஒரு அண்டர் கிரவுன்ட் அமைப்பாக இருக்கேலதானே. அந்த நேரத்தில் உண்ணாவிரதம், கிராமங்களில் கருத்தரங்குகள் நடத்தி இருக்குறம். 82இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போராளிகளை, மக்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டங்கள் நிறைய இடங்களில் நடத்தியிருக்கிறோம். 81ம் ஆண்டும் 82ம் ஆண்டும் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் மே தினக் கூட்டம் நடத்திஇருக்கிறம். அதால தான் நாங்கள் வெகுஜன அமைப்பாக பரவலாக பார்க்கப்பட்டோம்.
தேசம்: இன்னும் ஒரு விஷயம் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் குறிப்பாக மட்டக்களப்பில் மூன்று சமூகங்களுமே கிட்டத்தட்ட சரி சமமான நிலையில் இருக்கிறது. முதல் உரையாடலில் சொல்லி இருந்தீர்கள், ஜேவிபியின் அரசியல் வகுப்புகள் எடுக்க வந்தவர்களில் முஸ்லிம் தோழர்களும் இருந்தார்கள் என்று. தமிழ் முஸ்லிம் உறவு எப்படி இருந்தது அந்தக் காலத்தில்.
அசோக்: மிக நெருக்கமாக இருந்தது. புளொட்டில் முஸ்லிம் தோழர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முஸ்லிம், தமிழர் உறவுகள் ஒரு சிக்கலான விஷயமாக போய்விட்டது பிற்காலத்தில்.
மட்டக்களப்பில் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் தோழர்கள் இருந்தார்கள். உதாரணமாக நாக படையின் உருவாக்கம் எப்படி நடந்தது தெரியும்தானே… புளொட் வெகுஜன அமைப்பு வேலையைத்தான் கூடுதலாக செய்துகொண்டிருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அப்ப புலிகள் வேலை செய்ய தொடங்கி விட்டார்கள். ஒரு சில தோழர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு ஒன்று இருந்தது.
புளொட்டுக்கு ஆரம்ப காலத்தில் எங்களுட்ட அந்த ஐடியா இருக்கேல. நாங்கள் வெகுஜன மக்கள் மத்தியிலும், காந்தியத்தோடையும் இருந்தபடியால், மக்கள் மத்தியிலான வேலைத்திட்டமாகத்தான், தொடர்பாகதான் எங்களுடைய கொள்கை இருந்தது. அரசியல்மயப்படுத்தல், மக்களை அணிதிரட்டல், அதற்கு ஊடாக மக்கள் யுத்தத்தை கொண்டு வருதல் என்பதுதான் புளொட்டின் கோட்பாடாக இருந்தது. அந்த நேரத்தில இந்த தோழர்கள் மிகத் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொல்லி, முடிவெடுத்து அப்படி செயற்படவும் தொடங்கிவிட்டனர். தயா, சிறிபத்மன் கொஞ்சத் தோழர்கள் மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதுல ஜூனைதீன் இரண்டு மூன்று முஸ்லிம் தோழர்ககளும் இருந்தவர்கள்… இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த நாக படையை உருவாக்கினாங்க… அது கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் வந்தது. நாங்கள் தீவிரமாக இல்லை என்று சொல்லி, அவர்கள் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட வெளிக்கிட்டாங்க.
தேசம்: அப்படி என்றால் என்ன கொள்ளை போன்ற சம்பவங்களா?
அசோக்: கொள்ளை இல்லை. மட்டக்களப்பு மாலா ராமச்சந்திரன். அந்தக் கொலை அவங்கதான் செய்தது.
தேசம்: இது கழுகு படையா? நாக படையா?
அசோக்: நாக படை. இந்த நாக படைக்கு ஊடாகத்தான் மாலா ராமச்சந்திரன் கொலை நடக்குது. நாகேந்திரன் என்றவர் சுடப்பட்டு அவர் தப்பிவிட்டார்… அப்ப ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம். யுஎன்பி கட்சியை சேர்ந்தவர்களை சுடுவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது. நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் மட்டக்களப்பில பலரை சுட்டிருப்பாங்க. எந்தவொரு அரசியல் தெளிவும் இவங்ககிட்ட இருக்கல்ல. அப்ப நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளர். இவங்க வாசுதேவாவின் தனிப்பட்ட உறவை வைத்துக் கொண்டு தன்னிச்சையாக இயங்க வெளிக்கிட்டாங்க. இது வாசுதேவாவுக்கும் சிக்கலாகி விட்டது. அது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்துட்டது.
ஏனென்றால், இவங்கள் புளொட் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆட்கள். ஒரு தனி இயக்கமாக நாக படை என்று உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டாங்க… அது எங்களுக்கு பெரிய சிக்கலாக வந்தது. பிறகு அவர்களை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி. பிறகு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமான தோழர்கள் எல்.ரீ.ரீக்கு போயிட்டாங்க.
தேசம்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவ்வளவு தூரம் தீவிரவாத இயக்கமாக இல்லாதபடியால்… அதுல இருந்த முஸ்லிம் தோழர்களுக்கு பிறகு என்ன நடந்தது ?
அசோக்: ஜூனைதீன் என்ற தோழர் புலிகளோடு சேர்ந்து பிறகு லெப்டினட் கேணலாக இருந்து , பிறகு இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். முக்கியமான பதவியில் இருந்தவர். மற்ற முஸ்லிம் தோழர்களின் பெயர் மறந்து போயிட்டேன். அவங்களும் எல்.ரீ.ரீ தான்.
தேசம்: அந்தக் கால கட்டங்களில் 80களின் ஆரம்பம் 83 ஜூலை முதல் மட்டக்களப்பு அல்லது கிழக்கு மாகாணத்தில் எப்படி இந்த வெவ்வேறு இயக்கங்களின் செயற்பாடுகள் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரியான வளர்ச்சி நிலையில் இருந்தினமா? அல்லது…
அசோக்: இல்லை எல்.ரீ.ரீ .ஈ மிகக் குறைந்த அளவில் தான் இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் நிறைய பேர் வேலை செய்தவர்கள். ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் எங்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. எல்.ரீ.ரீ . ஈ ஆட்களோடும் உறவு இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வந்த போது மிகப் பெரிய அதிர்ச்சி எனக்கு இருந்தது. ஏனென்றால் யாழ்ப்பாணத்தில பெரிய முரண்பாடு இயக்கங்களுக்குள்ள. அது மட்டக்களப்பில் இருக்கேல.
எல்.ரீ.ரீயில வேலை செய்த தோழர்கள் எல்லாம் நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். வேணுதாஸ் அண்ணர் எல்லாம் எல்.ரீ.ரீயில் மிக முக்கியமான ஆள். ரஞ்சன் கனகரட்ணம் என்ட ஃப்ரெண்ட். பரமதேவா என்ற ஃப்ரண்ட். புளொட் வாசு தேவாவின் தம்பி. எங்களுக்குள்ள நெருக்கம் ஒன்று இருந்தது. ரஞ்சனும், நானும் பரமதேவாவும் ஜெயிலில் ஒன்றாக இருந்தம். அப்ப அவர்களுக்கு புளொட்டுக்கு வாற ஐடியா இருக்கேல. எல்.ரீ.ரீக்கு போற ஐடியா இருந்தது. அப்புறம் நாங்க வெளில வந்தும் மிக நெருக்கமாகத் தான் இருந்தம்.
தேசம்: யாழ்ப்பாணத்தில் இயக்கங்களுக்கு இடையிலான வன்முறை மிகக்கூர்மையாகவும், மட்டக்களப்பில் நட்பு ரீதியாகவும் இருந்ததற்கு காரணம் என்ன?
அசோக் : யாழ்ப்பாணத்தில் அதிகாரப் போட்டி ஒன்று இருந்ததாக தெரிஞ்சது. நாங்க பிறகு கதைக்கலாம் இதைப் பற்றி. நான் யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த உறவுகள் எனக்கு நீடித்தது. அப்ப இறைகுமாரன், உமைகுமாரன் யாழ்ப்பாணத்தில கொலை செய்யப்பட்டபோது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. இக் கொலைகளை யார் செய்தது என்று உண்மையாக எங்களுக்கு தெரியாது. இறைகுமாரன் வாசுதேவாவின் ஃப்ரண்ட். எனக்கும் தெரியும் இறைகுமாரனை. வாசுதேவவோட இளைஞர் பேரவையில் இருந்து பிரண்ட்.
அப்ப நாங்கள் மட்டக்களப்பில் இறைகுமாரனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினாங்கள். அதற்குப்பிறகுதான் வேணுதாஸ் அண்ணை என்னை கூப்பிட்டு சொல்கிறார் அசோக் உங்கட இயக்கம்தான் செய்தது என்று சொல்லி. உனக்கு தெரியாதா என்று.
அசோக்: ஓம். இரண்டு வாரத்திற்கு பிறகு பிறகு மட்டக்களப்பில் ஒரு ஒரு கூட்டம் நடந்தது. அதற்கு அமிர்தலிங்கம் வந்தவர். அப்பதான் அவர் ஓப்பினா பேசினார் கொலை செய்து போட்டு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துகிறார்கள் என்று. எனக்கும் வாசுதேவாவுக்கும் பயங்கரப் பேச்சு. அப்பதான் வெளில தெரியும் எல்லாருக்கும் புளொட் தான் செய்தது என்று சொல்லி. அதற்கிடையில் வாசுதேவா புளொட் தான் செய்தது என்று தெரிஞ்ச உடனே யாழ்ப்பாணம் போனார். போயிட்டு வந்து சொன்னார் உண்மையிலேயே புளொட் தான் செய்தது என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
தேசம்: அதுக்கான காரணங்கள் விளக்கங்கள் தரப்பட்டதா உங்களுக்கு…
அசோக்: அதற்குப் பிறகு சென்டர் கமிட்டில அதெல்லாம் கதைக்கப்பட்டது. தன்னிச்சையாக சில பேர் செய்ததாக. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கல்ல.
தேசம்: இந்த கொலைகளில் சந்ததியாருக்கு தொடர்பு இருக்கின்றதா?
அசோக் : இல்ல. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தோழர் சந்ததியாரால் அமைப்புக்கு வந்தவங்க. சந்ததியாருக்கு மிகவும் தெரிஞ்சவங்க. இதனால்தான் அப்படி சந்தேகம் பலருக்கு வந்தது. உண்மையிலே தன்னிச்சையான செயற்பாடுதான் இந்த கொலைகள்.
தேசம்: இதெல்லாம் புளொட் ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு முதல் நடந்த சம்பவங்களா அல்லது அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களா… ?
அசோக்: இந்த கொலைகள் நடக்கும் போது யாழ்ப்பாணத்தில் புளொட் கட்டமைப்பு உருவாகல்ல. ஏனைய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இது சுந்தரம் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையான சுந்தரத்தின் விசுவாசிகளால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. புளொட்டின் கட்டமைப்பு பார்த்தீர்களென்றால் 79 ஆண்டு நவம்பர் புளொட்டின் உருவாக்கமே வருது. தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பெயர் வைக்கப்படுகிறது. அதற்கு முதல் புதியபாதை என்ற அமைப்பு தான் இருந்தது. புதியபாதை என்ற அமைப்பு பிறகு புளொட் என்ற பெயருடன் உருவாக்கப்படுகிறது.
உருவாக்கப்பட்ட மத்திய குழுவில் இருந்தவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். உமா மகேஸ்வரன், சந்ததியார், ஐயர், சாந்தன், சுந்தரம். இதில ஐயரும், சாந்தனும் பிரபாகரனோடு சேர்ந்து புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் முக்கியமானவர்கள். 79 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட மத்திய குழுவின் பிற்பாடு அவங்களுக்குள்ள ஒரு முரண்பாடு வருகிறது .ஏனென்றால் தன்னிச்சையான போக்கு நடக்குது.
தேசம்: இந்த காலகட்டத்தில் நீங்கள்…
அசோக் : புளொட்டில இல்லை நான். இது காலப்போக்கில் கேள்விப்பட்ட விஷயங்கள். என்ன முரண்பாடு வருது எப்படி என்றால். இவங்கள் எப்படி புலிகளில் என்னென்ன தவறு நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அதெல்லாம் இங்க நடக்குது. முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவது. பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து தான் இருந்தது. பிறகு மத்திய குழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் இவங்கட ஆதிக்கம் மேலோங்க கருத்து முரண்பாடு வருகின்றது. பிறகு சுந்தரம் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் சேர்த்து தன்னிச்சையான போக்குல ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி ஐயரும், சாந்தனும் முரண்படுகின்றாங்க. பிரச்சனை வரும்போது சாந்தனும் ஐயரும் அந்த கமிட்டியை விட்டு போகிறாங்க… அதுல மிஞ்சினது சந்ததியாரும், உமாமகேஸ்வரனும், சுந்தரமும் தான். இப்ப பார்க்கும்போது தெரியுது என்னவென்றால், புலிகளின் அதே அரசியலுடன் தான் இவர்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறங்க என்று. ஏனென்றால் மத்திய குழுவுக்குள்ள ஜனநாயகம் எதுவும் இருக்கல்ல.
மக்கள் போராட்டம், தேசிய விடுதலைப்போராட்டம், வர்க்க அணி திரட்டல் எந்த அரசியல் தெளிவும் இவர்களிடம் இருக்கல்ல. அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்ற புளொட் வாசகம் எம்மைப் போன்றவங்கள உள்வாங்க பயன்படுத்தபட்ட கோசம் என்பது இப்ப நினைக்கக்குள்ள விளங்குது.
தேசம்: இதே காரணங்களுக்காகத்தானே பிரபாகரனோடு முரண்பட்டு ஐயர் வெளியேறியவர்…
அசோக் : ஓம். அப்போ ஐயரோடு சாந்தன், நாகராஜா, குமணன் போன்றவர்கள் வெறியேறுகிறாங்க. பிரபாகரனோடு ராகவன், மாத்தையா, செல்லக்கிளி போன்றவர்கள் இருக்கிறாங்க.
தேசம்: இதில பார்க்கும் போது இதில ஓரளவு சமப்படுத்தப்பட்ட பலம் ஒன்று சந்தததியார், உமா மகேஸ்வரன், சுந்தரத்துக்கு ஒரு ஈகுவலான பலம் இருந்திருக்கு. அதில சந்ததியாரும் சுந்தரமும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள்…
அசோக்: உமாமகேஸ்வர் கட்டுவன். ஐயர் புண்ணாலைக்கட்டுவன்.
தேசம்: சாந்தன்…
அசோக்: தெரியல்ல.
தேசம் :இது ஒரு லூசான கட்டமைப்பா…
அசோக்: பெயரளவில்தான் மத்திய குழுவே தவிர அரசியல் இயக்க கட்டமைப்புக்கான எந்த அரசியல் அமைப்பு வடிவங்களை விதிகளை புளொட் கொண்டிருக்கல்ல. இவங்கள் வெளியேறினதுக்கு பிறகு நான் நினைக்கிறேன் அதுக்குள்ள பிறகு கண்ணனும், ராஜனும் சேர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்குப் பிறகு சென்றல் கமிட்டி என்று உருவாக்கப்படவில்லை. அப்படியேதான் இயங்கிக்கொண்டிருந்தது. பிறகுதான் பூரணமான சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் உருவாக்கப்படுது 83 ஜூலைக்கு பிற்பாடு.
தேசம்: ஆம் ஆண்டு ஜூலை வரைக்கும் இப்படியான ஒரு கட்டமைப்புதான்?
அசோக்: இப்படியான கட்டமைப்புதான். ஆனா யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில மாவட்ட நிருவாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன அந்த நேரத்தில். மாவட்ட அமைப்பாளராக நாங்கள் இருந்தோம். மாவட்ட அமைப்பாளர் கூட்டம் வவுனியாவிலும் மற்ற இடங்களிலும் நடக்கும். ஒரு உத்தியோகபூர்வமான அமைப்பா மாவட்ட அமைப்புக்கள் இருந்தது. மாவட்ட அமைப்பாளருக்கு கீழ கிராமிய அமைப்பாளர்கள் எல்லாம் இருந்தாங்க. மட்டக்களப்பு ஜெயில் விரெக் நடந்து பின்தளம் சென்ற பின்னதான் சென்ட்ரல் கமிட்டி பிற்காலத்தில் பூரணமாக உருவாக்கப்படுது.