26

26

‘லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள்..? – கோவிந்தன் கருணாகரம் காட்டம் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி – கைதிகளை தங்களுடைய பாதணிகளை நக்குமாறு கூறியும் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து லொஹான் ரத்வத்தயின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டிருந்தது. தமிழர் பகுதிகில் இது தொடர்பில் அதிக எதிர்ப்பு வெளியடப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுஜன பெரமுன கட்சி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் லொஹான் ரத்வத்தையை மட்டக்களப்புக்கு  வரவேற்று நிகழ்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் “எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள்.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின்  அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் சில நாட்களாக இலங்கையிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெயர் அடிபட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் இணைந்து அவரது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நிறை வெறியுடன் சென்று தமிழ் அரசியற் கைதிகளைத் தன் முன் முழந்தாழிட வைத்து தனது கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லெஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது, அவருடன் இணைந்து சந்திப்பை நடத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே பார்க்கின்றேன்.

லெஹான் ரத்வத்தயின் தகப்பனார் அனுரத்த ரத்வத்த நான் பாராளுமன்றத்திலே இருந்த 1989ம் ஆண்டு காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே நான் நினைக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே பிரேமதாசாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு கேட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகச் சென்று சந்தித்தவர்.

தந்தை தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் மகன் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு தமிழ் அரசியற் கைதிகளை அவமானப்படுத்துகின்றார். 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கூட கண்டியிலே பதினொரு முஸ்லீம் இளைஞர்களைச் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் தகப்பன் மகன் இருவரும் சம்பந்தப்பட்டவர்களாகத் தகவல்கள் இருக்கின்றன. அந்த பரம்பரைச் செயல்களினூடாவே அரசியல் நடத்துபவர், தற்போது தமிழ் அரசியற்கைதிகளைத் தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பாதணியை நக்க வைத்துள்ளார்.

நான் பொதுவாக அரசியல்வாதிகளைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பவன் அல்ல. ஆனாலும் நானும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து, அதனூடாக அரசியலுக்குள் வந்தவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கின்றது. அதனால்தான் எனது கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றது. மேற்சொன்னவாறு எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். லொஹான் ரத்வத்த ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிவு அரசியல்வாதி. அந்தக் கழிவு அரசியல்வாதியை மட்டக்களப்பிற்குக் கொண்டு வர வேண்டாம்.

அவருக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவர்கள் இருவர். ஒருவர் பொலிஸிற்குப் பொறுப்பானவர். சரத் வீரசேகர கூறுகின்றார். அவர் கையில் வைத்திருந்தது அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கியாம், அனுமதிப்பத்திரம் வைத்துள்ள துப்பாக்கி என்றால் கொலை அச்சுறுத்தல் விடலாமா? இல்லை கொலை தான் செய்யலாமா?

அவருடன் இணைந்து லொஹானுக்கு ஆதரவு கொடுக்கும் மற்றையவர் விமல் வீரவன்ச. இலங்கையில் முதற்தர இனத்துவேசி. அவர் சிறைச்சாலை அமைச்சராக இருந்து செய்த குற்றத்திற்காகவே அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். அவர் வகிக்கும் ஏனைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டாம் என்கின்றார். அங்கும் ஏதாவது நடக்க வேண்டும். அதன் பின்னர் தான் அதிலிருந்தும் அவரை இராஜினாமா செய்ய வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் நீதி அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே சம்மந்தப்பட்டவர்களிடமும், சம்மந்தப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றார். ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அவர்களது தலைமையில் இந்தச் சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பதற்கான குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மாலை அணிவித்து நீங்கள் அவரை நல்லவராகக் காட்ட முற்படுகின்றீர்கள்.

இது மாபெரும் தவறு என்பதுடன், பன்றியுடன் சேரும் கன்றும் பவ்வி அருந்தும் என்ற பழமொழிக்கேற்றால் போலான வேலையையே செய்துள்ளீர்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திலும் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.

தியாகி திலீபனை நினைவுகூர்ந்தால் பரவும் கொரோனா பண்டாரநாயக்கவை நினைவுகூர்ந்தால் பரவாதா..? – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் கேள்வி !

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது,

“தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது. ஆனால், தமிழர்களான நாம் தியாகி திலீபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிஸாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.அந்த நினைவு கூர்தல் நிகழ்வு பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப் பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“லொஹான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அரசியல்கைதிகளை அச்சுறுத்தியது இனவாதத்தாக்குதல் இல்லையாம்.” – நீதி அமைச்சர் அலி ஷப்ரி விளக்கம் !

இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அனுராதபுரம் சிறைச்சாலையில் தம்மை முழந்தாழிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளதாகவும் லொஹான் ரத்வத்தை, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி ஷப்ரி, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்புபட்ட சம்பவம் சிறைச்சாலையில் இடம்பெற்றது என்பதை யாரும் மறுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லது வேறு தனிநபர்களோ அழுத்தங்களை பிரயோகித்தார்களா என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளிடம் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாரும் தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் கூறியதாகவும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி மேலும் கூறியுள்ளார். ஆகவே இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜடேஜாவின் அதிரடி கைகொடுக்க இறுதி நிமிடத்தில் வெற்றியை ருசித்தது சென்னை !

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைவன் மோர்கன் டாஸ் வென்று  துடுப்பெடுத்தாட்டத்தைச் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சாம் கர்ரன் இடம் பிடித்தார். கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 172 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ஓட்டங்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10ஓட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 11 ஓட்டங்களிலும், டோனி 1ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
கடைசி 2 ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 22ஓட்டங்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ஓட்டங்கள் அடித்தார். 5-வது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். கடைசி பந்தில் தீபக் சாஹர் ஒரு ஓட்டங்கள் அடிக்க சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் பிளே-ஓப் சுற்றுக்கு இலகுவாக முன்னேறியது சென்னை சூப்பர்கிங்ஸ் அணி !

“சர்வதேச சமூகம் தலிபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும்.” – ஐ.நாவில் பாக்.பிரதமர் இம்ரான்கான் !

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ம் திகதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர். அதனை தொடர்ந்து,  புதிய இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.  தலிபான்களின் இந்த புதிய அரசை உலக நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஐ.நா.வும் தலிபான்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.
அதேசமயம், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதலே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு தலிபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா, பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
இப்போது அனைத்து சர்வதேச சமூகமும் முன்னோக்கிச் செல்லும் வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். நாம் செல்லக்கூடிய 2 பாதைகள் உள்ளன. நாம் இப்போது ஆப்கானிஸ்தானை புறக்கணித்தால் அது அந்நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையும். ஐ.நா. அறிக்கையின்படி பாதி ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்வார்கள். ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நம் முன்னால் உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்வதேச சமூகம் தலிபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

“மாதம் அரசாங்க சம்பளம் வாங்குவோர் நாட்டை மூடுமாறு கோஷமிடுகின்றனர்.” – அமைச்சர் கெஹலிய

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது,

“உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது.

நாட்டை மூடுமாறு சிலர் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு மாதம் அரசாங்க சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் நாட்கூலி பெறுபவர்களின் நிலைமை? அத்துடன், நாடு தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு அல்லாஹ்தான் முழுக்காரணம் எனக்கூறிய ஞானசார தேரரை கைது செய்யுங்கள்.” – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !

ஞானசார தேரர் அண்மையில் சிங்கள தனியார் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந்த நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் , முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறை தலைமையகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஞானசார தேரரின் கருத்தால் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொதிப்படைந்துள்ளனர். தாம் வணங்கும் இறைவனை நிந்திக்கும் இந்தக் கருத்து பாரதூரமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்வாறான கருத்தைத் தெரிவித்த ஞானசார தேரரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவற்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,

“கடந்த காலங்களில் ஞானசார தேரர் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டதற்கு அமைய சட்ட ரீதியாக அணுகி அவர் தண்டிக்கப்பட்டார். அதேபோன்று இவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் நாட்டின் முக்கிய உலமாக்கள், சட்டத்துறை விற்பன்னர்கள், சமூக நலவாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடினோம். அவர்கள் கூறிய ஆலோசனை இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் கடுமையான முறையில் விவாதிக்கும்போது ஞானசார தேரருக்குச் சார்பாக சிங்களப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பாரிய சிங்கள – முஸ்லிம் குழப்பத்துக்குக் கொண்டுபோகச் செய்வார்கள். எனவே இவ்வாறான சூழ்நிலையை விட இறைவனுக்குச் செய்த நிந்தனையையும் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தலாகச் செயற்படும் ஞானசார தேரரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதற்கமையவே மிக நிதானமாகவும் சமூகப் பொறுப்புடனும் இவருக்கு நடவடிக்கை எடுக்க காவற்துறையினரை அணுகியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவைச் சந்தித்தும் பேசியுள்ளோம். ஞானசார தேரருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதுடன் அதற்கான துரித நடவடிக்கை எடுக்கப் காவற்துறையினரைப் பணிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், நாடு திரும்பியவுடன் ஜனாதிபதியை நேரில் சந்தித்து ஞானசார தேரர் இந்த நாட்டில் சமூகங்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.

“விடுதலைப்புலிகளால் சிங்களவர்களை விட தமிழர்களே அதிக துயரங்களை எதிர்கொண்டார்கள்.” – அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன

இலங்கையில் காணப்படும் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக புலம்பெயர் தமிழர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சண்டே ஒப்சேவரிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

எங்களிடம் பாரபட்சம் என்பது இல்லை.  அரசாங்கம் குறித்து எவருக்காவது தவறான கருத்து காணப்பட்டால் அந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தை மேசைகளிற்கு வரத்தயார்.

கட்சி என்ற அடிப்படையிலும் அரசாங்கம் என்ற அடிப்படையிலும் இன மத பாகுபாடின்றி அனைத்து இனத்தவர்களையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எங்களிற்கு உள்ளது. நாங்கள் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கின்றோம். 2009 இல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததன் மூலம் நாங்கள் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரம் பாதுகாக்கவில்லை நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்துள்ளோம்.

விடுதலைப்புலிகள் மோதலில் ஈடுபட்டவேளை சில வேளைகளில் தமிழர்கள் சிங்களவர்களை விட அதிக துயரங்களை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதிகரிக்கவுள்ள வாழ்க்கை செலவு.”- எதிர்கொள்ள தயாராகுமாறு இலங்கை மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை !

வாழ்க்கை செலவு அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கப்போகின்றது என அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதில் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பால்மா உள்நாட்டு எரிவாயு கோதுமா உட்பட பல பொருட்களின் விலைகள் உள்நாட்டில் அதிகரிக்கவுள்ளன.
அமெரிக்க டொலர்கள் தொடர்பில் நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் என்பதை நாங்கள் மறைக்கவிரும்பவில்லை. சர்வதேச சந்தையிலும் விலைகள் அதிகரிக்கின்றன. மேலும் சலுகைகளை வழங்கமுடியாது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.