இலங்கையில் காணப்படும் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக புலம்பெயர் தமிழர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சண்டே ஒப்சேவரிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
எங்களிடம் பாரபட்சம் என்பது இல்லை. அரசாங்கம் குறித்து எவருக்காவது தவறான கருத்து காணப்பட்டால் அந்த விடயங்களிற்கு தீர்வை காண்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தை மேசைகளிற்கு வரத்தயார்.
கட்சி என்ற அடிப்படையிலும் அரசாங்கம் என்ற அடிப்படையிலும் இன மத பாகுபாடின்றி அனைத்து இனத்தவர்களையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எங்களிற்கு உள்ளது. நாங்கள் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கின்றோம். 2009 இல் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததன் மூலம் நாங்கள் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரம் பாதுகாக்கவில்லை நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்துள்ளோம்.
விடுதலைப்புலிகள் மோதலில் ஈடுபட்டவேளை சில வேளைகளில் தமிழர்கள் சிங்களவர்களை விட அதிக துயரங்களை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.