ஆறு திருமுருகனின் துர்க்காபுரத்தில் யுவதி தற்கொலை ! ஆனால் எதுவுமே நடக்காதது போல் தெல்லிப்பளையில் நூல் வெளியிடுகின்றார் – காவி மாபியா !
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான ஆறு திருமுருகனால் நடத்தப்படும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் மாணவியொருவர் கடந்த வியாழக்கிழமை ஏப்பிரல் 24 ஆம் திகதி தற்கொலை செய்துள்ளார். இறந்த யுவதியின் சடலம் யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் ஊடற் கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தெல்லிப்பளையிலுள்ள மகளிர் விடுதியில் 22 வயதான யுவதி தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்ததாகவே பெரும்பாலான ஊடகங்களில் செய்திகள் கசிய விடப்பட்டுள்ளன. ஆனால் இச்சம்பவம் ஆறு திருமுருகனின் அறக்கட்டளையான சிவபூமியால் நிர்வகிக்கப்படும் துர்க்காபுரத்தில் இடம்பெற்றது என்ற தகவலை ஊடகங்கள் வெளியிடவில்லை.
இறந்த யுவதியின் சகோதரியும் தெல்லிப்பளை துர்க்காபுரம் மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆறு திருமுருகனைக் காப்பாற்ற விடுதியின் பெயர் உட்பட ஏனைய விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாக தெல்லிப்பளைப் பிரதேச மக்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதது போல் மறுநாள் முன்னாள் யாழ் பல்கலையின் துணைவேந்தர் சண்முகலிங்கனின் நூலை ஆறு திருமுருகன் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வு யுவதி தற்கொலை செய்து கொண்ட துர்க்கா இல்லத்திற்கு அருகாமையிலேயே நடந்தது. பேராசிரியர் சண்முகலிங்கன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் மலரில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு பேராசிரியரானது தனிக்கதை. யாழ் பல்கலைக்கழகம் தரம்தாழ ஆரம்பித்தன் ஆரம்பப் புள்ளி பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆறு திருமுருகன் சண்முகலிங்கன் கூட்டே.
மலையக இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களை கண்ணியமாக வளர்க்கின்றோம் எனக் கூறி பெரும் தொகையான நிதியை வெளிநாடுகளில் தனிப்பட்டவர்களிடம் இருந்தும் ஆலயங்களில் இருந்தும் பெற்று வருகின்றார் ஆறு திருமுருகன். ஆனால் அண்மையில் இவருடைய துர்க்காபுரத்தில் மலையக மாணவிகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தியது வெளிவந்தது. இது பற்றி தேசம்நெற் விரிவான செய்திகளை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்யுமளவிற்கு துர்க்கா புரம் மகளிர் விடுதியில் என்ன பிரச்சினையுள்ளது. இறந்த யுவதியின் குடும்பப் பின்னணி குறித்தும் எந்தவிதமான உத்தியோக பூர்வ தகவல்களையோ விளக்கத்தையோ துர்க்காபுரம் மகளிர் இல்ல நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை. பொறுப்புக் கூறும் ஆறு திருமுருகன் இந்த விடயத்திலும் வழமை போலவே மௌனம் சாதிக்கிறார்.
ஏற்கனவே மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் குளிக்கும் இடத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவ்வாறான பதிவான காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் அப்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் விசாரணைகளுக்கு உத்தரவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னர் ஆறு திருமுருகனின் அரசியல் செல்வாக்கினால் இந்த விடயம் நீர்த்துப்போக வைக்கப்பட்டது. ஆளுநர் சாள்ஸ்சும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
கடந்த வருடம் கண்காணிப்பு கமரா விடயம் ஒழுங்காக கையாளப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். தெல்லிப்பளை துர்க்காபுரம் அப்பாக்குட்டி தங்கம்மா பராமரிப்பில் இருந்த போது உள்ள நிலமை தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது.
ஆறுதிருமுருகன் போன்ற யாழ் வேளாள இந்து ஆண்மையவாத தலைமைத்துவத்தின் கீழ் ஒரு மகளிர் இல்லம் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர் பெண்ணுரிமைவாதிகள். வேலியை உயர்த்திக் கட்டி பெண்களை அடுப்படியில் இருத்தி யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை எப்படி பாதுகாக்கலாம் என கட்டுரை எழுதியவர் ஆறு திருமுருகன் என்ற பிற்போக்குவாதியாவார்.
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான நன்கொடைகளை ஆறுதிருமுருகன் வசூலிக்கின்றார். பல அறக்கட்டளைகளை நடத்தி வரும் ஆறுதிருமுருகனிடம் குவியும் நிதி நன்கொடைகளுக்கு எந்தவிதமான கண்காணிப்புக்களும் மேற்பார்வையும் கிடையாது.
ஆறுதிருமுருகனால் திரட்டப்படும் பணத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திற்கு செலவு செய்வதைக்காட்டிலும் சிவபூமி மற்றும் திருக்குறள் வளாகம் என பகட்டுக்கு விரையமாக்கப்படுகிறது. கலாச்சாரம், பண்பாடு மற்றும் சமயத்தை வளர்க்கிறோம் என மக்கள் பசிபோக்க வேண்டிய பணம் விரையமாக்கப்படுகிறது.
யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களுடன் நெருக்கத்தை ஆறு திருமுருகன் ஏற்படுத்திக் கொள்வார். அதன் மூலம் தன்னுடைய ஊழலை மறைத்துக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வார். அந்த வகையில் தற்போதைய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடனும் ஆறுதிருமுருகன் நெருக்கம் காட்டுகிறார். கடந்த வருடம் மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் திறப்பு விழாவில் ஆளுநரும் வடக்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரத்தில் உயர்மட்டங்களில் உள்ளவர்கள் இவ்வாறான சந்தேகநபர்களை வளர்த்துவிடுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்திப் பிரதிநிதிகள் ஆறுதிருமுருகன், சிவபூமி அறக்கட்டளை விடயங்களில் விலத்திச் செயற்படுவது மிக அவசியம்.
துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளமையை சந்தேக மரணமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை விவகாரத்தில் சுயாதீனமான விசாரணைகள் எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் முன்னெடுக்கப்பட வேண்டும். துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும் .
நாட்டின் எப்பாகத்திலும் இயங்கும் சிறுவர், பெண்கள் மற்றும் முதியோர் விடுதிகள் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசாங்கத்தின் நேரடியான கண்காணிப்பு முகாமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். தான்தோன்றித்தனமாக பராமரிப்பு விடுதிகளை யாரும் விதிமுறைகளுக்குட்படாமல் நடத்த அனுமதிக்க கூடாது. அந்த வகையில் தெல்லிப்பளை துர்க்காபுரம் இல்ல இளம்யுவதியின் தற்கொலையின் பின்னணி மற்றும் காரணம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் சிவபூமி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் வயோதிபர்கள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை, அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் தேசம்நெற்க்கு தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு பராமரிக்கப்படுபவர்கள் இலவசமாக சேவைகளைப் பெறவில்லை. அவர்களிடமிருந்து அவர்களுடைய ஓய்வூதியப் பணம் மற்றும் புலத்திலிருந்து அவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் பணம் பெற்றே இந்த வயோதிபர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுடைய சொத்துக்களையும் ஆறு திருமுருகன் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து உரிமைமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
சிவபூமி அறக்கட்டளை ஆறு திருமுருகனின் நெருங்கிய குடும்பத்தவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. கல்லாநிதியான இவர் ஸ்கந்வரோதயாக் கல்லூரி அதிபரானதும் கலாநிதிப் பட்டம் பெற்றதும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அணைவினாலேயே. அதன் பின் அதிபர் பதிவியிலிருந்தும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு வெளியேறினார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்புப் பற்றிய கேள்விகளும் தற்போது எழுப்பப்டுகின்றது. காவி மாபியா ஆறு திருமுருகனின் சிவபூமி துப்பரவு செய்யப்பட வேண்டும்.
தன்னுடைய கால் ஏக்கர் காணிக்காக செஞ்சோலையை நடத்தும் குமரன்பத்மநாதனுக்கு எதிராகவும் அங்குள்ள குழந்தைகளுக்கு எதிராகவும் அபாண்டமான பழியை ஒரு பெண் வெளியிட்ட போது அனைத்து ஊடகங்களும் அதனைப் பிரசுரித்தன. செஞ்சோலையை நித்தியானந்தாவின் கைலாஸ்க்கு ஒப்பிட்டு அங்கு தங்கியுள்ள குழந்தைகளைக் கொச்சைப்படுத்தினார் அக்காணிச் சொந்தக்காரி. ஆனால் குளியல் அறையில் குளிக்க விடாமல் வெட்டவெளியில் நீராடவிட்டு சிசிரிவி இல் அதனைப் பதிவு செய்தது பற்றியோ இளம் யுவதி தற்கொலை செய்தது பற்றியோ யாழ் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிடவில்லை. யாழ் உதயன் பத்திரிகை மட்டும் ஒரு சிறு பதிவைப் வெளியிட்டு இருந்தது. ஆறு திருமுருகனையும் துர்க்கா புரத்தையும் சிவபூமி அறக்கட்டளையையும் தொடர்ந்தும் குற்றங்களை இழைக்க இந்த ஊடகச்செயற்பாடுகளும் துணை போகின்றன.