::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் ரசிகர்கள் – யூடியூப்பில் கலக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ !

பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் இரசிகர்களால் பின் தொடரப்படும் முதல் நபராக பதிவாகியுள்ளார்.

 

Instagram, Facebook, Twitter, YouTube, மற்றும் சீன சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ரொனால்டோவை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

 

மற்றுமொரு கால்பந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸியை 623 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்வதுடன் பாடகர்களான ஜஸ்டின் பீபர், டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோருக்கும் மில்லியன் கணக்கான இரசிகர்களே உள்ளனர்.

 

இந்தப் பட்டியிலில் இரண்டாமிடத்திலுள்ள செலினா கோமஸ் 690 மில்லியன் இரசிகர்களை தம்வசம் வைத்துள்ளார்.

 

கடந்த மாதம் யூ.டியூபில் இணைந்த ரொனால்டோவை ஒரு வாரத்திற்குள் 50 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடர் தோல்வி – ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி ராஜினாமா !

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அணி நிர்வாகத்துடனான சில கருத்து வேறுபாடுகளும் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி – 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகள் !

2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விவரங்கள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

2027, 2031 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கிண்ண போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

டி20 உலகக் கிண்ண போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும்.

கடைசியாக 2017 இல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.

2024 – 2031 இல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்.

2024 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.

2025 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2026 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2027 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
2028 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2029 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2030 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2031 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.

“விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார் . கைல் ஜேமிசன் அதில் சிக்கவில்லை.” – டிம் சவுத்தி பாராட்டு !

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்திகதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பெங்களூர் அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசியும் அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி தலைவர் கோலி டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், “நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன்.” என மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்று இலங்கை வீரர்கள் !

கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மூவரை தெரிவு செய்துள்ளனர்.

இவர்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து அண்மையில் விலகிய திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் ஆவர்.

Caribbean Premier League 2018: Teams, Squads And Change in Rules |  CricketTimes.com

அண்மையில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் திசர பெரேராவை பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி நிர்வாகமும், இசுரு உதானவை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் , வனிந்து ஹசரங்கவை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி நிர்வாகமும் எடுத்திருந்தன. இவர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் தீவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபிரியன் பிரீமியர் லீக்கில் கிரென் பொல்லார்டின் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானதுடன், அந்த அணி நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் !

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.