::விஞ்ஞானம் தொழில்நுட்பம்

::விஞ்ஞானம் தொழில்நுட்பம்

விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புளுட்டோ கிரகம் சிவப்பாக மாறுகிறது: ‘நாசா’ தகவல்

புளுட்டோ கிரகம், சூரியனை 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. இந்நிலை யில் அது பிரகாசமாகவும் சிவப்பாகவும் மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ தெரிவித் துள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையில் இக்கருத்தை ‘நாசா’ தெரிவித்துள்ளது.

புளுட்டோ கிரகத்தில் சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘நாசா’ கூறியுள்ளது.

உலக இதயநோய் தினம் 2009 : இதயத்தோடு இணங்கி செயற்படுவோம். -புன்னியாமீன்

images-heart.jpgஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதய நோய்களும்,  பக்கவாதமும் உலகில் இறப்புகளுக்கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கின்றது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான (2009) உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) தொனிப்பொருள் “இதயபூர்வமாக செயல்படு’ என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத்தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வலைகளை அவிழ்த்துவிட்டுள்ளது.

இதய நோய் பற்றி ஆராய முன்பு ‘இதயம்’ பற்றிச் சிறு விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் முள்ளந்தண்டுளிகளில் காணப்படும்  தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதாகும். இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஒருவித பாய்மம் இருக்கும். இது,  இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் இரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு சோணை அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு இதயஅறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் இரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் இரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன.

வலது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும்.

வலது சோணை அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது சோணை அறைக்குத் திரும்பாமல் ‘முக்கூர் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது சோணை அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது சோணை அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு’ தடுக்கிறது.

வலது இதய அறை  சுருங்கும்போது, அவ் அறையில் இருக்கும் இரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதய அறை  சுருங்கும்போது, பெருநாடிவில்லினூடு செல்லும் இரத்தம் திரும்பிவராமல் தடுக்கும் வால்வுக்கு ‘பெருநாடி அரைமதி  வால்வு’ என்று பெயர்.

உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஒட்சிசன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே இரத்தத்தைத் தரும் இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம்,  இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த இரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.

இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன. முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப்பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும் அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தவுதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த இரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரிரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அட்ரீனலின் – இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் – இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் இரத்தத்தின் அளவைப் பொறுத்தும், இரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு இரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.  இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்) என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 வீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்இ மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.

மாரடைப்பைத்  தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின்வரும் வழிகளை கையாளலாம். 

ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல் : பொதுவாக ஒரு சராசரி மனிதனில் “எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.

சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற்பயிற்சிகள் மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடைவேளைகளில் உலாவுங்கள்.

உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்படுத்துங்கள். பதப்படுத்திய’ உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் இரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடியுரு நாடி செயலிழப்பு,  இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருட காலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்

ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்கமாகும்.

உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம்,  குளுக்கோசு மட்டம்,  இடுப்பு இடை விகிதம்,  உடல் திணிவுச் சுட்டி போன்றவற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வதால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப்பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம். சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.

முன்பு இதய நோய்,  மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சை முறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.

இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய – நுரையீரல் இயந்திரம் (HEART – LUNG MACHINE) செய்யும்.  இம் முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’ ஆகும்.

இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.  இரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.

இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR  சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது.   இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியின்றி, அதிக செலவு பிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR  என்பதன் விரிவாக்கம், Extracorporeal Shock – wave Myocardial Revascularization  என்பது ஆகும்.

இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின் மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது. மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும்கூட,  ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றாமல் டமிஃபுளு உட்கொள்ளக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் தொற்றுவதை தவிர்க்கும் வகையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான டமிஃபுளு மாத்திரையை பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே, இந்த மாத்திரரையை பயன்படுத்தினால், அது வீரியத்துடன் பயந்தரமாட்டாது என்பதே இந்த விடயத்தில் இருக்கின்ற பெரிய அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் காய்ச்சலுக்காக இந்த மருந்து பயன்படுத்தப்படும் 28 தடவைகளில், 12 தடவைகள் காய்ச்சல் தொற்றுவதை தடுப்பதற்காக முன்கூட்டியே அது பயன்படுத்தப்படுகின்றது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதற்குப் பதிலாக பலவீனமான நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அதன் பின்னர் தாமதிக்காமல் இந்த மருந்தை உட்கொள்வதே சிறந்தது என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

நிலநடுக்கம் வருவதை எச்சரிக்கும் கருவி – தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

190909computer.jpgநில நடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவி ஒன்றை தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லெப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இதை லிப்ட்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ யி மின் கூறுகையில் :-

இந்தக் கருவி நில நடுக்கத்தின் போது ஏற்படும் குறுக்கலை, நெட்டலைகளை அடையாளம் காணும் நில நடுக்கம் தரைமட்டத்துக்கு வரும் முன்பே அலைகளை இந்தக் கருவி கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் 15 வினாடிகள் முன்னதாக நில நடுக்கம் ஏற்பட போவதை அறிந்து கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றார்.

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே பாறையிலான முதல் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் விஞ்ஞானி களுக்கு இருக்கிறது- இதனால் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்பதை கண்டு பிடிப்பதற்கான தேடும் படலத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

சூரிய மண்டலத்துக்கு வெளியே 300க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அவை உறுதியில்லாதவை. உயிரினம் உயிர் வாழ வேண்டுமானால் உறுதியான தரைப்பகுதி இருந்தால்தான் முடியும். 300க்கும் மேற்பட்ட கிரகங்களும் வெறும் வாயுவால் ஆனவை.

சமீபத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உறுதியான பாறை வடிவிலான ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள முதல் பாறை கிரகம் ஆகும். பாறை வடிவிலான கிரகம் கண்டுபிடித்து இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு கோரோட் – 7 டி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. நாம் கண்டுபிடித்த கிரகங்களிலேயே பூமி மாதிரி இருப்பது இந்த கிரகம் தான் என்று ஜெர்மனியில் உள்ள துரிங்கர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் டைரக்டர் ஆர்ட்டி ஹார்ட்செஸ் தெரிவித்தார்.

மேற்குலகின் காடுகள் – இணையத்தளம் – பாதுகாப்பற்றது. : த சோதிலிங்கம்

புதிதாக அண்மையில் IMF-X-Force வெளியிட்ட அறிக்கையில் மேற்குலகின் காடுகள் என வர்ணிக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் உள்ளாகாமல் 20 000 வைரஸ்கள் உலாவி வருவதாகவும், இவை எந்நேரமும் தாக்கும்திறன் கொண்டவைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இணையத்தளங்கள் யாரும் நம்ப முடியாத ஒரு பாரிய காடு போன்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் போன்ற ஆபத்துக்களும் நிறைந்தனவாக இருப்பதாயும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள், தளங்களின் மூலங்கள், இணையத்தள சேவைகள் அளிப்போர், சேவைகளை பராமரிப்போர் இவைகள் யாவுமே சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இல்லை என்பது இங்கு மிக முக்கியமான விடயம். காரணம் இவைகள் இன்னோர் software அறிவாளியால் தாக்கப்படும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

IBM-X force வெளியிட்ட ஆய்வின்படி களவாக பாவிக்கப்படும் software மட்டுமல்ல பல உரிமைமீறல்களும் இந்த உலகு என்றுமே கண்டிராத அளவிலும், இந்த உலகின் மிகப் பெரும்பான்மையினரின் சாதாரண அறிவிற்கு புரியாமலும் நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது.

இணையத்தளத்தில் பாதுகாப்பு என்று ஒன்று இல்லை. இணையத்தளம் பாவிப்போர் எப்போதும் இணையத்தள சேவைகள் தருவோர் பராமரிப்போர் மீது சந்தேகத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது.

இணையத்தளங்களில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தினமும் 20 000 தடவைகளுக்கு மேல் உடைக்கப்படும் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றது என்றும் இதில் adults only இணையத்தளங்கள் தமது இணையத்தளங்களை பார்வையிடுவோர், பாவிப்போர்களது கணணிகளை உளவு பார்ப்பதாகவும் அதிலிருந்து தரவுகளை திருடுவதாகவும் தெரிவிக்கிறது.

adults only இணையத்தளங்களில் 75 சதவிகிதமானவைகள் சமூகத்திற்கு உதவாத சேவைகளை வழங்குவதுடன் அதேநேரத்தில் வைரஸ் பரப்பும் தளங்களாக இருப்பதாகவும் இவ்வருடத்தின் கடந்து 6 மாத காலப்பகுதிகளில் இணையத்தளங்கள் அளவுமீறிய வரையறைகளை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் விக்கிப்பீடியா – முனைவர் மு. இளங்கோவன்

ilnco.jpgகலைக்களஞ்சியம் என்பது எழுத்துவடிவிலான அறிவுத்தொகுப்பு என்பர். ஒவ்வொரு மொழியிலும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுளன. இக்கலைக்களஞ்சியங்கள் அம்மொழியின் அறிவுச்செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைகிறது. இம்முயற்சி உலகெங்கும் நடைபெற்று வருகிறது. பிரஞ்சுமொழியில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அந்த நாட்டில் வழங்கிய பழைய கலைகளைப் பதிவு செய்தன. பிரான்சில் மக்கள் புரட்சி ஏற்படவும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்புரட்சி ஏற்படவும் கலைக்களஞ்சியங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

ஒரு மொழியில் உள்ள சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி ஆகும். அகராதியில் சொல்லுக்கு உரிய பொருள், சிறு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு சொல்லின் அனைத்து விவரங்களையும் பெற இயலாது. ஆனால் கலைக்களஞ்சியங்களில் அனைத்து விவரங்களையும் பெற்றுவிடலாம். அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் அகரவரிசையில் சொற்களுக்கு விளக்கம் தருகின்றன. ஒரு பொருள் சார்ந்தும் துறை சார்ந்தும் கலைக்களஞ்சியங்கள் உருவாக்கும் முயற்சி அறிவார்வம் நிறைந்த சமூகத்தில் இயல்பாகவே உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியம் பல்லாண்டுகளுக்கு முன் வந்தாலும் அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் நமக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்று இசைக்கு ஒரு கலைக்களஞ்சியத்தை முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வழியாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பிரெஞ்சு மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட டெனிஸ் டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார். கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந்தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் சேவையாகவும் இது அமையும்.(விக்கிப்பீடியா மேற்கோள்)

அச்சு வடிவில் அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கிய நிலையிலிருந்து வளர்ந்து இன்று மின்னணு ஊடகங்களின் வழியாக அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன. ஒவ்வொரு கணிப்பொறி நிறுவனமும் இணையத்தளங்களும் தங்கள் மென்பொருளில் அகராதியைப் பார்வையிடும் வசதியை வைத்துள்ளன. அதுபோல் இணையத்தில் கலைக்களஞ்சியங்களைப் பார்வையிடும் வசதியையும் வைத்துள்ளன. இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் தமிழ்க் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா (wikipedia) என்ற கலைக்களஞ்சியம் உள்ளது.

விக்கி (Wiki) என்னும் அவாய்மொழிச் சொல்லுக்கு “விரைவு’ என்னும் பொருள் உண்டு. விரைவாகத் தகவல்களைத் தொகுப்பது என்ற அடிப்படையில் விக்கி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. விக்கி (wiki)+ என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்து விக்கிப்பீடியா (wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் திட்டத்தை விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனம் தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு சனவரியில் ஆங்கில மொழியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர் பல மொழிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. விக்கிப்பீடியா தொழில் நுட்பம் உலகப்போக்கு உணர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகள் தாங்கி முதல் இடத்தில் உள்ளது. தமிழ்மொழி 18,226 கட்டுரைகள் கொண்டு உலக அளவில் 68 வது இடத்தில் உள்ளது.

அமெரிக்க இணையத்தொழில் வல்லவரான ஜிம்மி வேல்சு என்பவரும் அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் அவர்களும் இணைந்து இந்தக் களஞ்சியப் பணியை தொடங்கினர். ஜிம்மி வேல்சு முன்பு நூப்பிடியா என்ற களஞ்சியம் நடத்தியவர். அந்தக் களஞ்சியத்தில் வரையறை உண்டு. முழுக்கட்டுப்பாடும் அவரிடம் இருந்தது. பின்னாளில் உருவாக்கிய விக்கிப்பீடியா கட்டற்ற தளமாகத் திறந்துவிடப்பட்டது. அனைவரும் பங்கேற்கும் கூட்டு முயற்சித் தளமாக இது உலகுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மொழியினரும் தங்கள் மொழியில் உள்ள அறிவுத்துறைச் செய்திகளை எழுதி விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். இதற்குக் காலம் எல்லை கிடையாது. அறிவு வேறுபாடும், துறை சார்ந்த பேரறிவும் இருக்கவேண்டிய தேவை இல்லை. நமக்குத் தெரிந்த செய்திகளை எழுதி நாமே விக்கிக் கலைக்களஞ்சியத்தில் இணைக்கலாம். பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய,விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம். இத்தகு வசதியுடைய விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தமிழ் முயற்சி 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கில இடைமுகத்துடன் வெற்றிடமாகவே முதல் பதிவு ஒரு சோதனை முயற்சியாக இருந்தது.

2003 நவம்பர் மாதம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயூரநாதன் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் தன்னந்தனியாக உழைத்துப் பல கட்டுரைகளை உருவாக்கி விக்கியின் தமிழ்ச்சேவையை வளப்படுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் இவர் தமக்கு அமையும் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்திப் பல துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கித் தமிழ்விக்கிப் பகுதிக்குப் பங்களிப்பு செய்தார்.இவர் இதுவரை 2760 கட்டுரைகள் வரைந்துள்ளார்.

இந்திய மொழிகளில் தெலுங்கு(42,918), இந்தி(32,681), மணிப்புரி(23,414), மராத்தி(23211) என்ற அளவில் கட்டுரைகள் உள்ளன. தமிழில் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் தரமுடையதாகவும், செறிவுடையதாகவும் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிறமொழிக் கலைக்களஞ்சியங்களில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் அவை தானியங்கி முறையில் எண்ணிக்கை மிகுத்துக்காட்டப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. அதுபோல் சிறு, சிறு குறிப்புகளும் கட்டுரைகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனவாம்.

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு அயலகத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் மிகுதியான கட்டுரைகளை வழங்கியுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் 9000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனால் அனைவரும் தமிழ் விக்கி வளர்ச்சிக்கு எழுதுவதில்லை. குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்பவர்களாக ஐம்பது பேர் தேறுவர். இதிலும் தீவிரமாக எழுதுபவர்கள் சற்றொப்ப இருபத்தைந்து பேர் இருப்பர்.

தமிழ் விக்கியில் பலர் பங்களிப்பு செய்தாலும் குறிப்பிடத்தக்க சில முன்னோடிகளை நன்றியுடன் நினைவுகூர்வது பொருத்தமாகும். திருவாளர்கள் மயூரநாதன், சொ.இல.பாலசுந்தரராமன், நற்கீரன், இரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனகசிறீதரன், பேரா.செல்வக்குமார், பேராசிரியர் வி.கே,குறும்பன், கார்திக் பாலா, டானியல் பாண்டியன்,தேனி எம்.சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி (பட்டியல்நீளும்) ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பல்வேறு துறைகளில் பேரறிவு பெற்றவர்களாக விளங்குகின்றனர். தகவல் தொழில் நுட்ப அறிவு மிகுதியானவர்களாகவும் உள்ளனர். தமிழுக்கு உழைக்க வேண்டும் எனவும் தமிழ் உலகின் பிறமொழிகளுக்குத் தாழ்ந்தது இல்லை என நிறுவும் வேட்கை கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர். எனவே இவர்களின் முயற்சியில் பல துறை சார்ந்த கட்டுரைகள் தமிழில் மிகுந்துள்ளன. விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவதால் யாரும் எழுதலாம். குறிப்பிட்டவர்கள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தப் பொருள் பற்றியும் எழுதலாம். எனவே இன்று தமிழ் விக்கியில் தகவல் தொழில்நுட்பம், கணினித்துறை, கணக்கு, மின்னியல், கட்டடக்கலை, உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த பலர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற துறைகளில் இன்னும் மிகுதியான கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விக்கிப்பீடியாவில் அனைவரும் பங்களிப்பு செய்தால் அனைத்துச் செய்திகளும் ஓரிடத்தில் கிடைக்கிறது என்ற நிலை உருவாகும். எனவே பங்களிப்போரும் பயன்படுத்துவோரும் அதிகமாவர். எனவே துறை சார்ந்த செய்திகள் என்றில்லாமல் ஊர் பற்றியும், உறவு பற்றியும், பண்பாடு, பழக்கவழக்கம்,தெய்வ வழிபாடு, விளையாட்டுகள், நம்பிக்கைகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள்,சடங்குகள், மனக்கணக்குகள் என எதனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். கட்டுரைகளாக இருப்பவை கலைக்களஞ்சியத்திலும் பாடல், பழமொழிகள் இவற்றை மூலம் என்ற விக்கி பகுதியிலும் பதிவு செய்யலாம்.

விக்கிப்பீடியாவில் தமிழ்ச்செய்திகளை எப்படி உள்ளிடுவது?

விக்கிப்பீடியாவில் செய்திகளை உள்ளிடப் பல வழிகள் உள்ளன. முதலில் நமக்கு என விக்கி பக்கத்தில் ஒரு பயனர் கணக்கு தொடங்க வேண்டும். நமக்கு என ஒரு கடவுச்சொல்லும் தருதல் வேண்டும். விக்கியின் முகப்புப் பக்கத்தில் நாம் உள்ளிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட்டால் அந்தச் சொல் பற்றி முன்பு விளக்கம் இருந்தால். அதனை விக்கி காட்டும். அதன் வழியாகச் சென்று புதிய விளக்கம் திருத்தம் செய்யலாம். பயனர் கணக்கு இல்லாமலும் ஒருவர் எழுதிய கட்டுரையைத் திருத்தலாம். அவ்வாறு செய்பவர்களின் கணிப்பொறி ஐ.பி.எண் விக்கியின் வரலாற்றுப்பகுதியில் பதிவாகும். எனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளிட்டாலும், திருத்தங்கள் மேற்கொண்டாலும் அதன் துல்லியமான பதிவுகள் நம்மையறியாமலே பதிவாகிவிடும்.

நாம் தேடும் சொல்லுக்குரிய விளக்கம் அல்லது கட்டுரை இல்லை என்றால் இந்தத் தலைப்பில் கட்டுரை வரைய விருப்பமா என்ற ஒரு குறிப்பு இருக்கும். ஆம் என நாம் நினைத்தால் அங்குத் தோன்றும் அந்தப் பெட்டியில் கட்டுரைக்குரிய செய்தியை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுப் பக்கத்தைச் சேமிக்கவும் என்றால் நாம் எழுதிய கட்டுரை விக்கியில் இணைந்துவிடும்.இவ்வாறு வெளியிடும் முன்பாக இணைப்பு வழங்கவும், படங்கள்,அட்டவணைகள் இணைக்கவும் வசதிகள் உள்ளன. மேலும் நாம் தட்டச்சு இட்டதை வெளியிடுவதற்கு முன்பாக வடிவமைப்பு, எழுத்துப் பிழைகளைச் சோதித்துக்கொள்ளவும் முடியும். அங்குத் தோன்றும் பெட்டியில் உள்ள அடையாளக் குறிகளை அழுத்தி உரிய தேவைகளைப் பெறலாம்.

முதலில் பழகுபவர்கள் அங்கு உள்ள மணல்தொட்டியில் பழகிப் பின்னர் நம் பதிவுகளை முறையாக இடலாம். சிறு தவறுகளுடன் வெளியிட்டால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்று யாரும் தாழ்வுமனப்பான்மையடைய வேண்டாம். மூத்த பயனாளர்கள் நாம் செய்துள்ள தவறுகளைத் திருத்தி அந்தக் கட்டுரைகளை மிகச்சிறந்த கட்டுரைகளாக மாற்றவும் வாய்ப்பு உள்ளது.

விக்கியில் கட்டுரைகள் வரைபவர்கள் பல தரத்தினர். திறத்தினர். சிலர் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுவார்கள். சிலர் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வரைவார்கள். சிலர் பிறர் வரைந்த கட்டுரைகளை அனுமதி பெற்று அல்லது பிறர் விருப்பத்திற்கு இணங்க விக்கியில் வெளியிடுவர். அவ்வாறு பிறர் கட்டுரை என்பதற்கு இணைப்பு வழங்கியோ அவர் பெயர் குறித்தோ பெருந்தன்மையாக நடந்துகொள்வர். பதிப்புரிமை விக்கியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் மாற்றவும் திருத்தவும் செய்வர். விக்கியின் கட்டுரைகள் தரமுடையனவாக இருந்தாலும் பார்வைக்கு,தகவல் அறிய உதவுமேயல்லால் ஆதாரப்பூர்வ சான்றாகக் காட்ட இயலாது.

விக்கியில் தமிழ்க் கட்டுரைகள் பல துறை சார்ந்து வெளிவருவதால் புதிய கலைச்சொற்கள் நமக்குக் கிடைத்துள்ளன. முன்பு ஒருவர் ஒரு கலைச்சொல்லை உருவாக்கினால் அந்தச் சொல் வெளியில் தெரிவதற்கும் பயன்பாட்டுக்கு வருவதற்கும் பலகாலம் ஆகும்.ஆனால் இன்று புதிய கலைச்சொற்கள் அறிமுகமானால் அதுபற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் உடன் நடந்து திருத்தம் தேவை என்றால் திருத்தத்துடன் அல்லது சரியான சொல் என்றால் உடன் வழக்கிற்கு வந்துவிடுகின்றன. அந்த வகையில் இற்றைப்படுத்தல், ஒருங்குகுறி, சுட்டி, மென்பொருள், வன்பொருள், குறுவட்டு, உலாவி, இணையம், வலைப்பூ, திரட்டி, பயனர், கடவுச்சொல் என்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம்.

உயர்கல்வியில் தமிழ் நடைமுறைக்கு வரும்பொழுது மிகச்சிறந்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் வெளிவர வாய்ப்பு உண்டுஅதுபோல் ஆட்சியிலும் அலுவலிலும் தமிழ் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது அனைவரின் பயன்பாட்டுக்கு உரியதாக விக்கி மாறும்.

கற்றவர்கள் விக்கியில் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டும் நம் கடமை என நினைக்க வேண்டாம். முன்பு எழுதிய கட்டுரைகளை நாம் திருத்தலாம். எழுத்துப்பிழை, தொடர்ப்பிழை,பொருட்பிழைகளைக் களையலாம். படங்கள், புள்ளி விவரங்களை இணைக்கலாம். விக்கியில் கட்டுரை எழுதுவதைக் கல்வி நிறுவனங்களில் ஒரு பாடமாக அல்லது செய்முறைப் பயிற்சியாக மாற்றலாம்.

விக்கிப்பீடியா களஞ்சியமாக மட்டும் இல்லாமல் விக்சினரி என்ற பெயரில் அகரமுதலியாகவும் உள்ளது. விக்கி செய்திகள் என்ற பகுதியில் செய்திகளைக் காணலாம். விக்கி மேற்கோள் என்ற பகுதியில் சிறந்த மேற்கோள்களின் தொகுப்பு காணப்படும். விக்கிமூலம் என்ற பகுப்பில் பல்வேறு மூல ஆவணங்கள் இருக்கும். விக்கி மேப்பியா என்ற வசதியைப் பயன்படுத்திப் புவி அமைவிடம் விளக்கும் படங்களைக் காண முடியும். நாம் இருந்த இடத்திலேயே நாம் பார்க்க நினைக்கும் இடத்தைப் பார்த்துவிட முடியும். விக்கி கட்டற்றக் கலைக்களஞ்சியம் என்னும் தன் பெயருக்கு ஏற்ப கட்டற்ற தகவல்களைத் தாங்கி நிற்கிறது.

விக்கிக்கு எனச் சில நெறிமுறைகள் உள்ளன. கலைக்களஞ்சிய வடிவில் இருத்தல், கட்டுரைகள் நடுநிலையுடன் இருத்தல். கட்டற்ற உள்ளடக்கம், அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், இறுக்கமான சட்டத் திட்டங்கள் இல்லாமை என மயூரநாதன் இதனை நினைவுகூர்வார்.

தமிழ் வளர்ச்சிக்கு உதவும் விக்கியைத் தமிழர்கள் அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் இன்று தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் விக்கிப்பீடியா பயிலரங்கம் நடைபெறுகிறது. தொழில் நுட்பம் அறிந்தவர்கள் விக்கியின் பல்வேறு பயன்களை விளக்கி விக்கியில் கட்டுரைகள் உள்ளிடும் முறையைப் பயிற்றுவிக்கின்றனர். படங்கள், விவரங்கள், இணைப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கும் முறையையும் ஆர்வமுள்ளவர்களுக்கு விளக்கி வருகின்றனர். கலைக்களஞ்சியங்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் பல்லாயிரம் செலவாகும். பாதுகாக்க இடவசதி வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இந்த அறிவுக்கருவூலத்தை அனைவரும் பயன்படுத்துவோம். பலதுறை அறிவு பெறுவோம்.

http://muelangovan.blogspot.com/

பன்றிக் காய்ச்சல் அபாயம் இலங்கையும் முன்னெச்சரிக்கை

swine-flue.jpgமெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரச தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்நோய் தொற்றாமல் தடுப்பதற்கு சகல சுகாதார நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

* பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அது எங்கிருந்து தோற்றம் பெற்றது?

சுவாச உறுப்புகளில் ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவிதமான காய்ச்சலே பன்றிக் காய்ச்சல் ஆகும்.

இக்காய்ச்சல் பொதுவாக பன்றிகளுக்கே ஏற்படும் ஆனாலும் மனிதர்களுக்கும் தொற்றக் கூடிய தன்மை கொண்டது.

இவ்வாறு மெக்ஸிகோவில் பன்றி ஒன்றில் தாக்கி வைரஸ் மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தது இதுவே பன்றிக் காய்ச்சலின் ஆரம்பமாகும்.

* பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து முகமூடிகள் பாதுகாத்துக் கொள்ளுமா?

பன்றிக் காய்ச்சலிலிருந்து முகமூடிகள் அணிவதன் மூலம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. இருந்தாலும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குரியது.

* பன்றிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சலுக்கு எவ்வாறான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அவையே பன்றிக் காய்ச்சலுக்கும் தோன்றும்.

அதாவது இருமல், தடிமன், தலையிடி, உடல்வலி, நடுக்கம், சோர்வு ஆகியவற்றுடன் சில வேளைகளில் வயிற்றுப் போக்கு வாந்திபேதி என்பனவும் காணப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பது தொடர்பாக எவ்வாறு அறிய முடியும்?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது மெக்ஸிகோவிலிருந்து அண்மையில் வந்திருந்தவராகவோ இருந்தால் கட்டாயம் மருத்துவ அறிவுரையை பெற வேண்டியது அவசியம்.

ஆனால், இந்நோய் தோற்றுவதைத் தடுக்காமல் இருக்க நோயாளர் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.

* பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?

ஆம், ரமிபுளு அல்லது ரிலன்ஹா மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் ஆனால், காய்ச்சலுக்கான வழமையான மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது.

* பன்றிக் காய்சலுக்கு ஊசி மருந்து உள்ளதா?

இல்லை, ஓர் ஊசி மருந்தினைக் கண்டு பிடிக்க 3 முதல் 6 மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம்.

* பன்றிக் காய்ச்சலிலிருந்து எம்மை நாமே பாதுகாக்க முடியுமா?

பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதாவது தும்மும் போதோ இருமும் போதோ திசுக்களால் முகத்தை மூடி தும்மியபின் திசுக்களை உடனடியாக வேறு இடங்களிற்கு அப்புறப்படுத்த வேண்டும்.

நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரச தொற்று நோய் தடுப்புப் பிரிவால் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடப்பட்டதாகும்.

பூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் கண்டுபிடிப்பு

new_world.pngபூமியை விட இரு மடங்கு பெரிதான புதிய கோள் ஒன்றை எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக சிலி விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைநோக்கி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தயாரான “ரோபோ” சர்வதேச கண்காட்சியில் முதலிடம் மொறட்டுவ பல்கலை மாணவர்கள் சாதனை

இந்தியாவின் மும்பை நகரில் அண்மையில் நடந்த “ரோபோ” போட்டியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பிரிவே இந்த ரோபோவைத் தயாரித்தது.

இந்த ரோபோவின் வேகம் மற்றும் தடை அறிந்து வழியைமாற்றிக்கொள்ளும் சக்தி போன்ற சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ரோபோவிற்கு முதலிடம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய தொழில் நுட்ப நிறுவனமே இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.