மெக்ஸிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் அதிவேகமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகியன முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரச தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இந்நோய் தொற்றாமல் தடுப்பதற்கு சகல சுகாதார நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அரச தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
* பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அது எங்கிருந்து தோற்றம் பெற்றது?
சுவாச உறுப்புகளில் ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவிதமான காய்ச்சலே பன்றிக் காய்ச்சல் ஆகும்.
இக்காய்ச்சல் பொதுவாக பன்றிகளுக்கே ஏற்படும் ஆனாலும் மனிதர்களுக்கும் தொற்றக் கூடிய தன்மை கொண்டது.
இவ்வாறு மெக்ஸிகோவில் பன்றி ஒன்றில் தாக்கி வைரஸ் மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தது இதுவே பன்றிக் காய்ச்சலின் ஆரம்பமாகும்.
* பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து முகமூடிகள் பாதுகாத்துக் கொள்ளுமா?
பன்றிக் காய்ச்சலிலிருந்து முகமூடிகள் அணிவதன் மூலம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளது. இருந்தாலும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குரியது.
* பன்றிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் என்ன?
சாதாரண காய்ச்சலுக்கு எவ்வாறான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அவையே பன்றிக் காய்ச்சலுக்கும் தோன்றும்.
அதாவது இருமல், தடிமன், தலையிடி, உடல்வலி, நடுக்கம், சோர்வு ஆகியவற்றுடன் சில வேளைகளில் வயிற்றுப் போக்கு வாந்திபேதி என்பனவும் காணப்படலாம்.
* பன்றிக் காய்ச்சலுக்குள்ளானவர்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பது தொடர்பாக எவ்வாறு அறிய முடியும்?
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் வசிப்பவராகவோ அல்லது மெக்ஸிகோவிலிருந்து அண்மையில் வந்திருந்தவராகவோ இருந்தால் கட்டாயம் மருத்துவ அறிவுரையை பெற வேண்டியது அவசியம்.
ஆனால், இந்நோய் தோற்றுவதைத் தடுக்காமல் இருக்க நோயாளர் வீட்டை விட்டு வெளியேறாமல் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.
* பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?
ஆம், ரமிபுளு அல்லது ரிலன்ஹா மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் ஆனால், காய்ச்சலுக்கான வழமையான மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியாது.
* பன்றிக் காய்சலுக்கு ஊசி மருந்து உள்ளதா?
இல்லை, ஓர் ஊசி மருந்தினைக் கண்டு பிடிக்க 3 முதல் 6 மாதம் வரையான காலப்பகுதி தேவைப்படலாம்.
* பன்றிக் காய்ச்சலிலிருந்து எம்மை நாமே பாதுகாக்க முடியுமா?
பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதாவது தும்மும் போதோ இருமும் போதோ திசுக்களால் முகத்தை மூடி தும்மியபின் திசுக்களை உடனடியாக வேறு இடங்களிற்கு அப்புறப்படுத்த வேண்டும்.
நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
பன்றிக் காய்ச்சல் தொடர்பாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் அரச தொற்று நோய் தடுப்புப் பிரிவால் பொதுமக்களின் நலன்கருதி வெளியிடப்பட்டதாகும்.