கோவிட் 19 இன் மீள்வருகையா ? கடந்து வந்த காலங்கள் !
உலனத்தின் பெரும்பாலான மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் அழிவுகளைத் தொடர்ந்தே உருவானது. இன்று நாங்கள் அனுபவிக்கின்ற தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறையும் இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவு. இன்று பெண்கள் அனுபவிக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவு தான்.
COVID-19 ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கற்றுத்தந்து முன்னேற்றங்கள் தொலைவேலை (Work from Home) ஒரு புதிய பணியாற்றும் முறை என அறிமுகமானது. ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் சுகாதார சேவைகள் முக்கியத்துவம் பெற்றன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டனர்.
இருப்பினும் தற்போது covid 19 மீண்டும் பரவ ஆரம்பித்து உள்ளமை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வருமுன் காப்பதே பொருத்தமானது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கோவிட் 19 மீண்டும் தலையெடுக்கின்றதா எனப் புருவங்கள் உயர்கின்றது.
மனித இனத்தின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களில் ஒன்றாக COVID-19 (கொரோனா வைரஸ் நோய்) கருதப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊஹான் நகரில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகெங்கும் பரவிய இந்த நோய், கோடிக்கணக்கான மக்களின் உயிரை வாங்கி அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு துறையையும் மாற்றியமைத்தது.
சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல், சுவை மற்றும் மணம் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தான நிலைகளையும் உருவாக்குகிறது. வைரஸின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு, சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.
COVID-19 வைரஸ், மருத்துவ ரீதியில் “SARS-CoV-2” என அழைக்கப்படுகிறது. இது முதலில் விலங்குகளில் இருந்த வைரஸாக இருந்து, மனிதர்களிடம் பரவ ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு சிறுநீரகம், இருமல், தொடுதல் போன்ற வழிகளில் பரவுகிறது.
அதிக வேகத்தில் பரவும் தன்மை காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 மார்ச்சில் இதனை “பாண்டமிக்” என அறிவித்தது. அதன் பின்பு உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்த தொடங்கின.
மிகவும் மோசமான நிலைமையில், இது குருதிச்செறிவு, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பரிதாப நிலைகளுக்கு வழிவகுக்கும்.உலகெங்கும் இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
COVID-19 உலகின் இயங்கும் முறைமைகளைத் தற்காலிகமாக முடக்கி வைத்தது. தொழில்கள் மூடப்பட்டன, பணியிழப்பு ஏற்பட்டது, பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்தது. கோடிக்கணக்கான உயிர்கள் இழந்தன. பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஆன்லைன் கல்விக்கே மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பின. மருத்துவர், செவிலியர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.
தனிமைப்படுத்தல், பயம், நோயிழப்பு போன்ற காரணங்களால் மக்களில் மன அழுத்தம், கவலை, மன உளைச்சல் போன்ற மனநிலைச் சிக்கல்கள் அதிகரித்தது.
COVID-19 ஐ கட்டுப்படுத்தும் மிக முக்கியமான வழியாக தடுப்பூசி விளங்கியது. Pfizer-BioNTech, Moderna, AstraZeneca, Covaxin, Covishield ஆகியவை முன்னிலை பெற்ற தடுப்பூசிகளாகும். தடுப்பூசி பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் நோயின் தாக்கம் குறைக்கப்பட்டு, மரண விகிதமும் குறைந்தது.
2025 ஜூன் 4 ஆம் தேதியின்படி, இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் நிலைமை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலவரப்படி 4,302 பேருக்கு நோய் தொற்று அடையாளம் காணப் பட்டு உள்ளது. 24 மணி நேரத்தில் 864 பேருக்கு தொற்றியுள்ளது. மொத்தமாக 44 பேர் உயிரைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது. முக்கியமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக கேரளாவில் 1,373 நோயாளிகள், மகாராஷ்டிரா 510, குஜராத்: 397, டெல்லி: 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது பரவி வரும் COVID-19 வைரஸ் வகைகள்: LF.7; XFG; JN.1; NB.1.8.1; இந்த வகைகள் அனைத்தும் Omicron வகையின் துணை வகைகளாகும். NB.1.8.1 வகை தற்போது உலக சுகாதார அமைப்பால் ‘Variant Under Monitoring’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இடம் இருந்து எம்மை காத்துக் கொள்ள முகக்கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது COVID-19 தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் செயல்பாட்டில் உலகளாவிய அதிகரிப்பு 2025 பிப்ரவரி முதல் பதிவாகியுள்ளது.
இலங்கையின் சுவாச கண்காணிப்பு அமைப்பின்படி, 2024 ஆம் ஆண்டில், SARS-CoV-2 வைரஸிற்காக சோதிக்கப்பட்ட சுவாச மாதிரிகளில் 3% நேர்மறையான முடிவுகளை வழங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 மே மாதத்தில் 9.6% ஆக உயர்ந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டு இதுவரை SARS-CoV-2 வைரஸின் சராசரி நேர்மறையான முடிவுகள் கிட்டத்தட்ட 2% ஆக உள்ளன. தற்போது சிறியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இருப்பினும், அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருவதாக பகிரப்படும் பல தகவல்கள் உண்மை இல்லை என Fact Crescendo போன்ற உண்மை கண்டறியும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிற நாடுகளில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ, சமீபத்திய கொவிட்-19 வைரஸின் திரிபு மிகவும் பாரதூரமானது அல்ல எனவும், உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் அதிக கவனம் செலுத்தியதால் வைரஸின் வீரியம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுருக்கமாக, இலங்கையில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக சிறியளவிலான அதிகரிப்பு காணப்பட்டாலும், குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
COVID-19 என்பது வெறும் ஒரு தொற்றுநோய் மட்டுமல்ல. அது மனித இனத்திற்கே ஒரு நெருக்கடியான பாடமாக இருந்தது. இது நம்மை எச்சரிக்கிறது மனிதன் இயற்கையுடன் சுமூகமாக வாழ்கின்ற அளவிற்கே பாதுகாப்பானது.
நாம் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்ள எச்சரிக்கையுடன், முன்னெச்சரிக்கையுடனும், அறிவுடனும் செயல்பட வேண்டும். சுகாதார ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அறிவு ஆகியவை இனிமேலும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.
COVID-19 ஒரு எச்சரிக்கையாகும் இயற்கையோடு நமக்கு இருக்க வேண்டிய சமநிலையை உணர்த்தியது. எதிர்காலத்தில் இப்படிப் பட்ட தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கான சீரான மருத்துவ மற்றும் சமூக தயாரிப்புகள் அவசியம் என்பதை COVID-19 நமக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கையில் ஓக்ரோபர் 27, 2024 திகதியில் வெளியான விபரங்களின் படி கோவிட் இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 6,72,754; இறந்தவர்களின் எண்ணிக்கை: 16,897; அன்று பாதிக்கப்பட்டிருந்தவர்கள்: 5 பேர் மட்டுமே. நோயிலிருந்து குணமடைந்தவர்கள்: 6,55,852 பேர்; இறப்பு வீதம்: 2.5 சதவிகிதம்; பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 36 இலட்சம் பேர்.