பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

பெண்களின் நாளாந்த வாழ்வை அச்சுறுத்தும் – கர்பணித் தாயின் தலையை வெட்டிக் கொய்யும், அதனைக் கொண்டாடும் காட்டுமிராண்டி மனநிலை !

நேற்றைய தினம் வவுனியாவில் கணவனால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியையும் கர்ப்பணித் தாயுமான சொர்ணலதா விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் பகுதியில் குடும்ப வன்முறையின் உச்ச கட்டமாக இதனைப் பார்க்க வேண்டும். கொலையான பெண் தவறு இழைத்தாரா?அல்லது இழைக்கவில்லையா? என்ற விவாதத்திற்கு அப்பால் அப்பெண்ணை கொலை செய்யும் அதிகாரம் கொலை செய்த ரா ஜூட் என்ற கணவனுக்கு இல்லை.

யுத்த காலம் கண்டிராத கொடூரத்தை தமிழ் பெண்கள் தற்போது அனுபவிக்கின்றனர். புங்குடுதீவு வித்தியா முதல் வவுனியா சொர்ணலதா வரை தமிழ் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. மாறாக பெண்களை பாலியல் பண்டங்களாகவும் பிண்டங்களாகவும் நோக்கும் கருத்தியல் தமிழ் தேசிய மனநிலையாக ஆண்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்களை கண்ணியக் குறைவாக அணுகவில்லை. ஆனால் பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் அவர்களது பெயரைச் சொல்லும் ரிக்ரொக் விசிலடிச்சான் குஞ்சுகளும் தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு பாலியல் லஞ்சம், பாலியல் சுரண்டல், பெண்களை இழிவுசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த தமிழ் தலிபான்கள் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். ஒரு கர்பிணித் தாயின் தலையைக் வெட்டிக் கொய்வதும் அவர்களை மாவீரர்களாக்குவதும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது.

ஆசிரியையின் படுகொலை விவகாரத்தில் வழமை போலவே சமூக ஊடகங்களில் கருத்து பதிவிடும் பெரும்பாலான தமிழ் ஆண்கள் கொலை செய்த கணவனை மாவீரனாக புகழ்கிறார்கள். வக்கிரமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் மற்றைய ஆண்களை கத்திகளை தீட்டி தயாராக வையுங்கள் என உற்சாகப்படுத்துகிறார்கள். கொலையான ஆசிரியை தன்னை விட வயது குறைந்த இளைஞர் ஒருவரோடு உறவில் இருந்தமையே இக்கொலைக்கான பின்னணி என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதாவது உண்மை உள்ளதா ? அல்லது வழமையாக சில கணவன்களுக்கு இருப்பது போன்ற சந்தேக புத்தியில் வந்ததா? அல்லது படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் குறித்த இளைஞன் பரப்பிய கிசுகிசுவா ? என்ற எவ்வித விசாரணையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இந்த ஆண்மையவாதச் தமிழ் தலிபான்கள் சொல்வது போல் திருமண உறவைத் தாண்டிய உறவைப் பேணுபவர்களின் தலையை வெட்டிக் கொய்யலாம் என்றால் இந்த சமூகவலைத் தளங்களில் புகழாரம் சூட்டும், மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்களின் தலைகள் பல தடவை கொய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலை விவகாரம் வெறுமனே திருமண உறவை தாண்டிய உறவு தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் என கடந்து செல்ல முடியாது. திருமண உறவில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் துணையை கொலை செய்து தான் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்படுவோர் கிளம்பினால் பொலிஸ் ஸ்ரேசன் வாசலில் நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான உயிரற்ற மனித தலைகள் தான் உருளும்.

பொதுவில் ஒரு ஆண் திருமண உறவில் இருந்து கொண்டு வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்தும் போது அது சமூகத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த விவகாரம் மானம் போன இழிச் செயலாக கருதப்படுவதில்லை. ஆண் என்றால் அப்படித்தான் ”சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவான்” என சமூகம் சமாதானம் கூறுகிறது. மறுபுறமாக பெண் என்றால் “சேலை முள்ளில் விழுந்தாலும், முள் சேலையில் விழுந்தாலும் சேலை தான் கிழியும்“ என பெண்களை பயமுறுத்தி பெண்கள் மீதே பழி போடுகிறார்கள். வவுனியாவில் கொலையான கர்ப்பணித் தாய் மீதான அவரது கொலை வெறித் தாக்குதல் வரலாற்றுக்கு முந்திய கடைத்தனம் மிருகத்தனமானம் நிறைந்தது. இதனை வரவேற்பவர்கள் மிகமோசமான அடிப்படைவாதிகள். இவர்கள் நவீன சமூகத்தில் வாழத் தகுதியற்ற மனிதர்கள். இது பெண்களை உடமையாக பார்க்கும் ஆணாதிக்க கருத்தியலின் மனப்பாங்கின் வெளிப்பாடாகும். கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்க்காக குரல் கொடுக்காத சமூகம் அப்பெண்ணின் நடத்தையே அவர் கொலையானதற்கு காரணம் என அவதூறு பேசுகிறது. இதுவொரு இரட்டைக்கொலை.

சமீபத்தில் மட்டக்களப்பில் பட்டப்பகலில் வீட்டில் தனியே இருந்த 37 வயது குடும்பப் பெண் விதுஷாவும் மர்மமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி அல்லது கொலையாளிகள் கண்காணிப்புக் கமராப் பதிவு றிசீவரை எடுத்துச் சென்றுள்ளனர். கொலை நடந்து நாலைந்து நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவருக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பு உண்டு. கொலைக்கான பின்னணியும் மர்மமாகவேயுள்ளது. பெரும்பாலும் பெண்கள் வீட்டு வன்முறைகளில் தமது கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

உலகமயமாக்கமும் பரந்துபட்ட இணையப் பயன்பாடும் பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளை அதிகரித்திருக்கின்றன. கட்டற்ற இணையப் பயன்பாடு பெண்கள் மீதான விரோத மனப்பாங்கை மற்றும் கருத்தியலை கட்டியெழுப்ப பேருதவி புரிகின்றன. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது படங்களை பகிர்வதையும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவதையும் தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்நின்று செய்கின்றனர். வேழமாளீதன் போன்ற பாலியல் லஞ்சம் கோருபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமித்துள்ளார். இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர்.

தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்காக மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது. இவர்களே வெவ்வேறு பெயர்களில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் வலைத்தளங்களை முகநூல்களை உருவாக்கி பெண்கள் மீதான தங்களுக்கு பிடிக்காதவர்கள் மூலமான தாக்குதல்கலை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களை நிர்வாணமாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக காட்டும் எதிர்வினை தமிழ்ச் சமூகத்தில் மிக அசமந்தமாகவே உள்ளது. இந்தப் போக்கினை சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதும் காணலாம். சமீபகாலங்களாக பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் அல்லது இளம்பெண்கள் தொடர்பில் காட்டும் கரிசனத்தை விட சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களை பாதுகாக்கும் சமூக மனப்பாங்கே காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான வக்கிரமான மனப்பாங்கு ஆண்மையவாத அரசியல், சமூக, சமய மற்றும் கலாச்சார கருத்தியலின் விளைவாகும். இதனை கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஏப்பிரல் 29 ஆம் திகதி 7 ஆவது மாடியிலிருந்து குதித்த இறந்த மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலை விடயத்திலும் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சொர்ணலதா விடயத்திலும் சமூக ஊடகங்களின் பின்னூட்டல்களில் இடப்படும் கருத்துக்களிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *