ஈஸ்டர் தாக்குதல் ஆட்சியைக் கைப்பற்ற என்றால், ஏன் கோட்டா கைது செய்யப்படவில்லை ! புலனாய்வு அறிக்கை நம்பகத்தன்மையானதா ? இந்தியாவின் பாத்திரம் என்ன ?
ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதலின் மையப் புள்ளியை விசாரணைகள் ஏன் நெருங்கவில்லை என்ற கேள்வியை தேசம்நெற் எழுப்பியுள்ளது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடப்பதற்கு முன்னரேயே இத்தாக்குதல் திட்மிடப்பட்டுள்ளது பற்றியும் தாகுதல் எங்கு, எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் தெளிவான புலனாய்வுத் தகவல்களை இந்திய உளவுத்துறை இலங்கை உளவுத்துறைக்கு வழங்கியிருந்தது. இது இந்தியத் தூதரகத்திற்குத் தெரியுமா ? அதுதொடர்பில் இந்தியத் தூதரகம் இலங்கை அரசியல் தலைமைகளுக்கு ஆழத்தங்களை வழங்கியதா ? போன்ற விடயங்கள் இதுவரை பேசாப்பொருளாகவே உள்ளது.
தாக்குதலாளிகள் தாக்குதலுக்கான அத்தனை வேலைகளையும் தென்னிந்திய மண்ணிலிருந்தே மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டாலென்ன, இலங்கைக்கு கேரளக் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வந்தாலென்ன தற்போது ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலாளிகளும் கூட தென்னிந்தியாவிலிருந்தே பயிற்சி பெற்று வந்தள்ளனர். இது தொடர்பில் இது வரை எந்த அரசியல் தலைமைகளும் ஜேவிபி உட்பட மௌனமாகவே உள்ளனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கை இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகார நிலையில் இல்லை. அதனால் இந்தியா தானாக முன்வந்து அதன் மீதுள்ள சந்தேகங்களைக் களைவதற்கு இவ்விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இத்தாக்தல் தொடர்பில்இ தாக்குதலுக்குப் பயன்படுத்திய வெடிமருந்துகள், தற்கொலை அங்கிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை இந்தியா வெளியிட வேண்டும். தாக்குதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை. ஏன் அவர்களைப் பின்தொடரவில்லை. போன்ற விடயங்களும் வெளியிடப்பட வேண்டும்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஏப்ரல் 21, 2019 அன்று இலங்கையில் பல இடங்களில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிடுவதுடன் பல கேள்விகளையும் எழுப்புகின்றார், கொழும்பு அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் அனஸ்லி ரட்ணசிங்கம். அவர் நேற்று தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தி அரசு அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற கதைகளை வைத்துக்கொண்டு இந்த விசாரணைகளை நடத்த முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்கள் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை கிரிக்கட் கொமன்ரிபோல் வெளியிட்டுக் கொண்டிருப்பது ஒரு சரியான விசாரணைமுறையில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கைப் புலனாய்வுத்துறையினருக்குக் கூட பயிற்சி அளித்தவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையினரே. இவர்களிடையேயும் ஒரு உறவு உண்டு. வன்னி யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு புலிகளை கைது செய்தது நான்காம் மாடியில் வைத்து விசாரித்ததில் எல்லாம் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டதாக நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மேம்போக்காக அதனைச் சொல்லிவிட்டு அரசாங்கம் இதனை கடந்து செல்ல முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள இந்த அறிக்கைக்கு அப்பாலும் இப்பாலும் சென்று பூரண சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச புலனாய்வு நிறுவனங்களின் கைகள் இதில் உள்ளதா என்பதும் இங்கு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.
தற்போது இந்தியாவில் உள்ள இந்துமத அடிப்படைவாத பிஜேபி அரசு, அண்மைய ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த சில முஸ்லீம்களை பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி கைதுசெய்துள்ளது. இவை எல்லாம் எழுந்தமான விடயங்களா ? இதற்கிடையேயான புள்ளிகள் இணைக்கபட வேண்டுமா என்பதை காலம் தான் வெளிப்படுத்த வேண்டும்.