நாளாந்த பயணம் – இறுதிப் பயணமாகிறது ! 21 பேர் மரணம் ! இலங்கையின் வீதிகள் மரணவாயில்களா ?
மே 11 கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயப்பட்டுள்ளனர். இவ்வாவான விபத்துக்கள் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டாலும் ஒரே விபத்தில் இவ்வளவு பெரும்தொகையானவர்கள் கொல்லப்பட்டது அண்மையில் நிகழ்ந்த கொடூரமான விபத்தாக மாறியுள்ளது. வழமையாக ஒரு விபத்தில் ஓரிருவரே கொல்லப்பட்டு வந்தனர். இலங்கையில் விபத்துக்கள் தற்செயலானவையல்ல. அவை தினமும் எதிர்பார்க்கப்படுபவையாக உள்ளது. இதற்கு கடந்த தசாப்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மோசடிகள் முக்கிய காரணங்களாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மலையகத்தில் நிகழ்ந்த மற்றுமொரு விபத்தில் வீதிப் பாவனைக்குரிய நிலையில் இல்லாத பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு பள்ளத்தில் வீழ்ந்தில் சிலர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பற்ற – வீதிகள், மோசடியான வீதிப் பாவனைக்குரிய சான்றிதழ்கள், சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாத அல்லது லஞ்சம் கொடுத்து பெறப்படும் வாகன அனுமதிப் பத்திரங்கள், வீதிப் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள் இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்களுக்கு காரணமாகின்றது. அந்த வகையில் பொருத்தமற்ற வாகனச் சோடிணைகள் அகற்றப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் தொடர்பில் கூடுதல் இறுக்கங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வீதிப் போக்குவரத்து மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். நாளாந்த பயணங்கள் இறுதிப்பயணங்களாகக் கூடாது. 2024 இல் மட்டும் 2541 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2019இல் 3,097 ஆக இருந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் இது இன்னமும் குறைக்கப்பட வேண்டும்.
மேலும் மரணங்களைத் தவிர உடல் ஊனங்கள் மற்றும் குடும்பத்தின் பொருளாதார இழப்பு, மனநிலை பாதிப்பு, எதிர்காலம் என மதிப்பிட முடியாத பல துன்பியலுக்கு இந்த விபத்தக்கள் காரணமாகின்றன. இலங்கை போன்ற 22 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டுக் இந்த விபத்துக்களும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதாரப் பாதிப்புகளும் மிக அதிகம். 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1,650 பேர் வரையானவர்களே வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர்.
இலங்கையில் இன்று இடம்பெற்ற விபத்தில் இந்த 21 பேரைத் தவிரவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐந்து பேர் வரை கொல்லப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விபத்து மரணங்கள் தொடர்பில் இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்துவதுடன் தேவைப்பட்டால் புதிய சட்டவிதிமுறைகளைக் கொண்டுவரவேண்டும். மேலும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தி சாரதிகளுக்கான தொடர்ச்சியான பயிற்சிமுறைகளை அமுஸ்படுத்த வேண்டும். வாகன வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும்.