கஜாவின் முன்னணியைக் கைவிடும் தமிழ் மக்கள் ! தமிழ் கட்சிகளும் கைவிடும் அபாயம் !
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் அரசியல் கண்ணாடியாக உண்மையைப் பிரதிபலித்து நிற்கின்றது. சமூக வலைத்தளங்களும் பாரம்பரிய ஊடகங்களும் கட்டமைத்த பிம்பங்களை இத்தேர்தல் முடிவுகள் தகர்த்து எறிந்துள்ளது என்றால் அது மிகையல்ல. ‘அபிவிருத்தி என்பது சலுகை எங்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை தான் வேண்டும் என்று கோரி’ தமிழ் மக்களின் முன்னேற்றத்ததைத் தடுத்து வந்தன இந்தத் தமிழ் தேசியக் கட்சிகள். ஆனால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளின் அடிப்படை என்ற அபிவிருத்தி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் மனோநிலையை G L Tharshan னின் இக்காணொலிப் பதிவு மிகத் தெளிவாக முன்வைக்கின்றது.
இனவாதக் கருத்துக்களை கக்கி உரிமை தவிர வேறேதும் சலுகை வேண்டாம் என்ற கோடீஸ்வரர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தையிட்டி காணிப் பிரச்சினைக்காக ஒவ்வொரு பௌர்ணமியும் போராடி வருகின்றது. உரிமைப் பிரச்சினை, காணிப் பிரச்சினையை முன்வைத்து தன் அரசியல் வாக்கு வங்கியைக் கட்டமைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்தது. இக்கட்சியானது உதிரிகளான பலரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் ஒரு சவாலாக இருப்பதாக கற்பிதம் செய்திருந்தது.
தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரதிநிதிகள் போலவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலை தாங்களே முன்னெடுப்பதாகவும் இவர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டனர். அதற்கும் ஒருபடி மேலே போய் தேசியத் தலைவருக்குப் பின் அடுத்த தேசியத் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரச்சாரப் பிரங்கியான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கீழ் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 0.69 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி 0.68 வீத வாக்குகளாகக் குறைந்தது. 85,000 வாக்குளை 2018 இல் பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 71,000 வாக்குகளையே பெற்று வடக்கு கிழக்கில் 4வாது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடுவது போல் பெரும்பாலும் குடா நாட்டிற்குள்ளேயே செயல்படும் ஒரு கட்சியாகவே இன்றும் உள்ளது.
சுமந்திரனுக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடாத்தி வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தங்களுடைய பரம்பரை எதிரியாக உள்ள தமிழரசுக் கட்சியை அதன் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரனை நிராகரிக்க வேண்டும் என்பதையே அவர் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டிருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவர்களுடைய பிரதான ஆதரவுத்தளமான புலம்பெயர் தமிழர்களும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் வாக்குரிமையைக் கொண்ட களத்தில் வாழும் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கும் சமந்திரனுக்கும் ஆதரவாகத் திருப்பி உள்ளனர். 2018 தேர்தலில் 2.73 விகித வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் 2.96 விகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சியாக கூட்டணியாகப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தனித்தப் போட்டியிட்ட போதும் கணிசமான வாக்குகளை அவர் பெற்றிருந்தனர். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 0.85 வீத வாக்குகளைப் பெற்று 106 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தேசிய மக்கள் சக்தியும் கடந்த காலங்களில் எவ்வித ஆசனங்களும் இல்லாமல் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வடக்கு கிழக்கின் இரண்டாவது பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி உள்ளது. எம் ஏ சுமந்திரனின் தேர்தல் வியூகம் அவர் இழந்த பலத்தை மீளப் பெறுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியுடைய அரசியல் செயற்பாடுகள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ், சிங்களக் கட்சிகள் எதிர்கால அரசிலை தலைமுழுக வேண்டும் என்கிறார் ஒரு பெரியவர். அவரின் கணிப்பின் படி தேசிய மக்கள் சக்தி மிக மெதுவாக ஆனால் ஸ்தீரமாக முன்னேறுகின்றது.
அவர்களைக் கையாளும் ஆற்றல் தமிழ் தேசியக் கட்சிகளிடம் போதாமையாக இருப்பதை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ் காங்கிரஸ்க்கும் இடையே உள்ள பரம்பரைப் போட்டியும் தனிநபர் தாக்குதலும், இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலையைக் கடினமாக்கி உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதனை ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர்கள் யாழ் மாநகர சபையில் ஈபிடிபி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கூட இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக குருசாமி சுரேன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.