March

March

கோத்தாபயவின் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள்! மக்கள் மீது தாக்குதல்! தொடரும் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில்
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.

சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. குறித்த பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின்சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தின் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான
நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறது இம்ரான்கான் அரசின் காலம்..?

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் திகதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.

இதனால் இம்ரான்கானின் அரசு நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது. ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில்  இம்ரான்கானுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

“எனது ஆட்சி காலத்துக்குள் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன்.” – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ உறுதி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச “தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன்.” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும்,

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை. புலம்பெயர் தமிழர்களுடனும் நான் பேசத் தயாராகவுள்ளேன். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நான்கு  விடயங்களில்  ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.” – இந்திய வெளியுறவு அமைச்சர்

“நான்கு  விடயங்களில்  ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும். எனவே தான் இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா வந்திருந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பத் தயாராகவுள்ள நிலையில்,  இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவாதகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்றம், 500 மில்லியன் டொலர் கடன் ஒத்திவைப்பு, எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் ஒரு பில்லியன் டொலர் கடன் வரி என்பவற்றை புதுடில்லி இந்த ஆண்டு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு  விடயங்கள் ஜனாதிபதிக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட, செயற்படக்கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றில் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்னும் உரையாடல் முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கத்தை கவிழ்ப்பதால் சலுகைகள் அல்லது நிவாரணம் கிடைக்காது.” – துமிந்த திஸாநாயக்க

பழிவாங்கும் விளையாட்டை தவிர்த்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை தேட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராரும் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளையே ஒளிபரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் இரண்டு வருடங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசியல்வாதி ஒருவர் பேரணியின் போது தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மீதும் நாட்டின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தால் , தற்போது எந்த விலையும் இன்றி எரிபொருளை வழங்க அரசியல்வாதி முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நபர்கள் நாட்டை வழிநடத்துவதற்கு பொருத்தமானவர்கள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மற்றுமொரு அரசியல் குழு, தற்போதைய நிர்வாகத்தை அகற்றுவதற்காக அரசியல் சார்புகள் இன்றி ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குமாறு பொதுமக்களிடம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதால் சலுகைகள் அல்லது நிவாரணம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள்..”- எம்.ஏ.சுமந்திரன் வழங்கியுள்ள பதில் !

“தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் எனவும் புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை.” எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பின் முழு விடயங்கள் வருமாறு,
கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில முக்கிய சந்திப்புகள் கலந்துகொண்டிருந்தோம். அத்துடன் பல இராஜதந்திரிகளின் விஜயங்கள் கூட இடம்பெற்றன. அந்தவகையில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அமெரிக்க ராஜதந்திரிகள் சிலர் விக்டோரியா நூலன் என்கின்ற துணை இராஜாங்க செயலாளர் உட்பட மூன்று இராஜதந்திரிகள் விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்டோரைச் சந்தித்துச் சென்றிருக்கின்றார்கள்.
கடந்த நவம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலே நடத்திய சந்திப்பின் போது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதிச் செயலாளர் டொனால்ட் டு அவர்கள் இவ்வாறான உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரும் என்று சொல்லியிருந்தவர். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடனும் சந்திப்பை நடத்தியிருந்தோம். அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் சந்திப்பை நடாத்தியிருகின்றார். தமிழ்த் தரப்பில் மiலையகத் தரப்பு சார்பில் மனோகணேசன் தலைமையிலான குழுவையும முஸ்லீம் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடினார்.
எங்களுடன் நேற்றைய தினம் நடாத்திய உரையாடலிலே மிக முக்கியமாக கடந்த 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்மந்தமாக பேசப்பட்டது. இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி எற்கனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவிற்கு உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.
அந்த உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதியமைச்சரும் நானும் இது சம்மந்தமாக ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எங்களின் சிபாரிசினைச் செய்வோம். அதுபோல் அண்மையல் கைது செய்து விசாரணை இல்லாமல் இருப்பவர்களை ஏற்கனவே விடுவிப்பதாகச் சொன்னார்கள் அந்த விடயத்தை மிகத் துரிதமாகச் செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாவிட்டால் அவர்கள் தெடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள். அதற்கப்பால் நிருவாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம். இந்த நான்கு விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன் மேலும் முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதிலே பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. விரிவான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
நிருவாக எல்லைகள் சம்மந்;தமாகவும் நாங்கள் பேசியிருக்கின்றோம். அதிலே கல்முனை வடக்கு சம்மந்தமான விடயம் உள்ளிட்டவையும் பேசப்பட்டன. அவை தொடர்பில் விவரமாகச் சொல்லப்படாவிட்;டாலும் இனிவரும் நாட்களில் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேசும் போது அந்த விடயத்தைப் பற்றியும் பேசுவோம். மகாவவலி இடங்கள், மாவட்ட, பிரதேச செயலக எல்லைகள் மாற்றியமைக்கின்ற விடயங்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் பேசுவோம். ஆனால் அவையெல்லாம் உடனடியாக நிறுத்தப்படும் என்கிற வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கும் போது இது நல்ல விடயங்கள் உடனடி விடயங்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியை நாங்களும் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் புதிய அரசிலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அரசியற் தீர்வு விடயம் பற்றிப் பேசலாம் என்ற விடயம் சொல்லப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வந்து அதற்கு அவர்கள் பேசுவதற்குத் தயாராகின்ற போது நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து பேசுங்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இணங்கிய விடயங்களைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் தேவையான இடங்களில் உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றும் சொல்லியிருக்கின்றார்.
இதற்கு மேலதிகமாக அனைத்துக் கட்சிகள் தொடர்பான கூட்டமொன்றும் நடைபெற்றது. நாட்டின் தற்போயை பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக அது கூட்டப்பட்டது. பல எதிர்க்கட்சிகள் அதனைப் பகிஸ்கரித்தன. அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கட்சிகள் கூட இதனைப் பகிஸ்கரித்தன. ஆனால் இது அரசாங்கத்தைப் பொருத்த ஒரு விடயம் அல்ல. முழு நாட்டையும் நாட்டு மக்களையும் தமிழ் மக்கள் உட்பட அனைவரையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயம். அந்த விடயத்தை அரசாங்கம் பாhத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்க முடியாது. பொறுப்பான ஒரு அரசியற் கட்சியாக பொறுப்பான மக்கள் பிரதிநிதிகளாக இந்த விடயம் குறித்தும் அரசாங்கத்தோடு பேச வேண்டிய அத்தியாவசியத் தேவை இருந்தது. எனவே நாங்கள் அதில் கலந்து கொண்டு எங்கள் முன்மொழிவுகளை, சிபாரிசுகளைச் சொல்லியிருக்கின்றோம். இனிவரும் நாட்களிலே தொடர்ச்சியாக நடைபெறுகின்ற அந்தக் கூட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றுவோம்.
வடமாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை உற்பத்தி செயற்பாடொன்றுக்காக இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். இந்தியத் திட்டங்கள், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் வருவதை நாங்கள் முற்றமுழுதாக வரவேற்கின்றோம். அது எங்களுக்குப் பலமாக இருக்கும். ஆகையினாலே இந்தியாவிற்கு இந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்றறு தான் சொல்லியிருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுனர்களும் பங்குபெறாலம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது நீதியமைச்சர் சொன்னார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்காள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் சொன்னார் தென்னாபிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம் அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள். இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசாங்கம் அதற்கு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல.
நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம். அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வ கட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் முடிவடையும் நிலை – நோயாளிகளின் நிலை பரிதாபம் !

இலங்கை மோசமான பொருளாதாரநெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் அரசாங்க மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் முடிவடையும் நிலை உருவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 2.4மில்லியன் மக்களிற்கு சேவை வழங்கும் பேராதனை போதனா வைத்தியசாலை வழமையான சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதாகவும்,மயக்க மருந்துகள் சத்திரகிசிச்சைக்கான அத்தியாவசிய பொருட்கள் இல்லை எனவும் அறிவித்தது.

இந்த பிரச்சினை பேராதனை மருத்துவமனைக்கு மாத்திரம் உரியது இல்லை அரசமருத்துவமனைகள் பலவற்றில் இந்த நிலை காணப்படுகின்றது என சுகாதார தொழிற்சங்கமொன்று தெரிவித்துள்ளது.
மருந்துகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களை வழங்குபவர்களிற்கு ஆறுமாசமாக பணம் செலுத்தப்படவில்லை என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல முக்கிய மருந்துகளிற்கான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரகிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது மோசமடையும் நிலைமையை கையாள்வதற்கு பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் அவசியம் என மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருட்கள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் இருதய நோயாளிகளிற்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உட்பட மருத்துவ உபகரணங்களின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பிராந்திய மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பேராதனை மருத்துவனையின் நிலைமையை அறிந்து கலக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவர்களிற்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு இந்திய தூதரகத்தினை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

பேராதனை மருத்துவமனை மீண்டும் சத்திரகிசிச்சைகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான மருந்துகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்தல் – 04 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்திற்கு பஸ்வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்திவெளிப் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த யாழ் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பற்றை காட்டுப்பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிடட்டனர் இதன் போது கேரள கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச்சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் எனவும் இதில் ஒருவர் மட்டு கல்குடா பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர் கஞ்சாவை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக அங்கிருந்து கஞ்சா வியாபாரிகளை பஸ்வண்டியில் இருவர் கஞ்சாவை கடத்தி வந்துள்ளதாகவும் இருவர் மோட்டர்சைக்கிளில் பிரயாணித்து சந்திவெளியை வந்தடைந்துள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பகுதியில் வைத்து கஞ்சாவை பொதி செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உள்நாட்டு போரின் பற்றி இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட ரகசிய ஆவணங்களில் பிரிட்டன் மாற்றங்களை செய்தது !

இலங்கையின் உள்நாட்டுபோரின்போது என்ன நடைபெற்றது என்பது குறித்த தெளிவாக அறிந்துகொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டு போரின்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்து பிரிட்டனிற்கு அனுப்பப்பட்ட இரகசிய ஆவணங்களில் உள்ள திருத்தங்களை மாற்றவேண்டும் என மைக்கல் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரிட்டனிற்கு அனுப்பிய இரகசிய ஆவணங்கள் குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் இரகசிய ஆவணங்கள் என வகைப்படுத்திய ஆவணங்களை நேஸ்பி பிரபு பிரிட்டனின் தகவல் சுதந்திர சட்டத்தை பயன்படுத்தி கேள்விக்கு உட்படுத்தினார்.

பிரிட்டனில் அந்த ஆவணங்களில் பெரும்மாற்றங்களை மேற்கொண்டார்கள் எனக்கு அந்த திருத்தங்கள் குறித்து திருப்தியில்லை என்பதை நான் வெளிப்படையாக தெரிவிக்கின்றேன்,நான் இது குறித்து சில காலமாக தெரிவித்து வருகின்றேன், அந்த திருத்தங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் நான் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபடப்போகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பரடைஸ் லொஸ்ட் பரடைஸ் ரிகெய்ன்ட் என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தொடர்ந்து இருளில் மூழ்கப்போகும் இலங்கை – வெளியாகியுள்ள தகவல் !

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் முற்றாக நேற்று மூடப்பட்டதுடன் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை விநியோகிக்கத் தவறினால் அடுத்த வாரம் முதல் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இதுவரை வழங்கப்பட வில்லை எனவும், எனவே இன்று முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும், அவசரகால கையிருப்பு கிடைக்காவிட்டால் நேரம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.