“தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் எனவும் புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை.” எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி ஊடக சந்திப்பின் முழு விடயங்கள் வருமாறு,
கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சில முக்கிய சந்திப்புகள் கலந்துகொண்டிருந்தோம். அத்துடன் பல இராஜதந்திரிகளின் விஜயங்கள் கூட இடம்பெற்றன. அந்தவகையில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கும் அமெரிக்க ராஜதந்திரிகள் சிலர் விக்டோரியா நூலன் என்கின்ற துணை இராஜாங்க செயலாளர் உட்பட மூன்று இராஜதந்திரிகள் விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்டோரைச் சந்தித்துச் சென்றிருக்கின்றார்கள்.
கடந்த நவம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலே நடத்திய சந்திப்பின் போது தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதிச் செயலாளர் டொனால்ட் டு அவர்கள் இவ்வாறான உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரும் என்று சொல்லியிருந்தவர். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடனும் சந்திப்பை நடத்தியிருந்தோம். அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் சந்திப்பை நடாத்தியிருகின்றார். தமிழ்த் தரப்பில் மiலையகத் தரப்பு சார்பில் மனோகணேசன் தலைமையிலான குழுவையும முஸ்லீம் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடினார்.
எங்களுடன் நேற்றைய தினம் நடாத்திய உரையாடலிலே மிக முக்கியமாக கடந்த 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்மந்தமாக பேசப்பட்டது. இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி எற்கனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவிற்கு உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.
அந்த உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதியமைச்சரும் நானும் இது சம்மந்தமாக ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எங்களின் சிபாரிசினைச் செய்வோம். அதுபோல் அண்மையல் கைது செய்து விசாரணை இல்லாமல் இருப்பவர்களை ஏற்கனவே விடுவிப்பதாகச் சொன்னார்கள் அந்த விடயத்தை மிகத் துரிதமாகச் செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாவிட்டால் அவர்கள் தெடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள். அதற்கப்பால் நிருவாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம். இந்த நான்கு விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன் மேலும் முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதிலே பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. விரிவான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
நிருவாக எல்லைகள் சம்மந்;தமாகவும் நாங்கள் பேசியிருக்கின்றோம். அதிலே கல்முனை வடக்கு சம்மந்தமான விடயம் உள்ளிட்டவையும் பேசப்பட்டன. அவை தொடர்பில் விவரமாகச் சொல்லப்படாவிட்;டாலும் இனிவரும் நாட்களில் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேசும் போது அந்த விடயத்தைப் பற்றியும் பேசுவோம். மகாவவலி இடங்கள், மாவட்ட, பிரதேச செயலக எல்லைகள் மாற்றியமைக்கின்ற விடயங்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் பேசுவோம். ஆனால் அவையெல்லாம் உடனடியாக நிறுத்தப்படும் என்கிற வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கும் போது இது நல்ல விடயங்கள் உடனடி விடயங்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியை நாங்களும் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் புதிய அரசிலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அரசியற் தீர்வு விடயம் பற்றிப் பேசலாம் என்ற விடயம் சொல்லப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வந்து அதற்கு அவர்கள் பேசுவதற்குத் தயாராகின்ற போது நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து பேசுங்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இணங்கிய விடயங்களைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் தேவையான இடங்களில் உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றும் சொல்லியிருக்கின்றார்.
இதற்கு மேலதிகமாக அனைத்துக் கட்சிகள் தொடர்பான கூட்டமொன்றும் நடைபெற்றது. நாட்டின் தற்போயை பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயும் முகமாக அது கூட்டப்பட்டது. பல எதிர்க்கட்சிகள் அதனைப் பகிஸ்கரித்தன. அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கட்சிகள் கூட இதனைப் பகிஸ்கரித்தன. ஆனால் இது அரசாங்கத்தைப் பொருத்த ஒரு விடயம் அல்ல. முழு நாட்டையும் நாட்டு மக்களையும் தமிழ் மக்கள் உட்பட அனைவரையும் மிக மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயம். அந்த விடயத்தை அரசாங்கம் பாhத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி இருக்க முடியாது. பொறுப்பான ஒரு அரசியற் கட்சியாக பொறுப்பான மக்கள் பிரதிநிதிகளாக இந்த விடயம் குறித்தும் அரசாங்கத்தோடு பேச வேண்டிய அத்தியாவசியத் தேவை இருந்தது. எனவே நாங்கள் அதில் கலந்து கொண்டு எங்கள் முன்மொழிவுகளை, சிபாரிசுகளைச் சொல்லியிருக்கின்றோம். இனிவரும் நாட்களிலே தொடர்ச்சியாக நடைபெறுகின்ற அந்தக் கூட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றுவோம்.
வடமாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை உற்பத்தி செயற்பாடொன்றுக்காக இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். இந்தியத் திட்டங்கள், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் வருவதை நாங்கள் முற்றமுழுதாக வரவேற்கின்றோம். அது எங்களுக்குப் பலமாக இருக்கும். ஆகையினாலே இந்தியாவிற்கு இந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்றறு தான் சொல்லியிருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுனர்களும் பங்குபெறாலம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது நீதியமைச்சர் சொன்னார் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்காள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் சொன்னார் தென்னாபிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம் அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள். இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசாங்கம் அதற்கு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல.
நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்த நாங்கள் முயல்கின்றோம். அதிலே நேரடியாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பாத இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தினர் தமிழ்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து வர விரும்பினால் அதற்கான ஒரு வழியையும் நாங்கள் ஏற்படுத்துகின்றோம். ஆனால் இது எல்லாவற்றிற்கும் முன்னர் சர்வ கட்சி மாநாட்டிலே இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நான் சொன்ன ஒரே ஒரு விடயம் இந்த நாட்டிலே தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள் என்பதை நான் சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இன்னுமொரு விடயத்தையும் நான் கூறியிருந்தேன். புலம்பெயர்ந்த மக்கள் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்தவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. ஆகையால் இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது. அரசியற் தீர்வொன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் தான் அதைப்பற்றி நாங்கள் பேச முடியும்.” என தெரிவித்துள்ளார்.