22

22

மாணவர்களுக்கு அடையாள அட்டையை கூட அச்சிட முடியாத நிலையில் இலங்கை – டிஜிட்டல் அடையாள அட்டைக்காக 300 மில்லியன் இந்திய ரூபாய் !

இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதே நேரம் ,இலங்கையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த கடிதம் செல்லுபடியாகும்.

“கோத்தாபய ராஜபக்ஷ தப்பிக்கவே இந்த சர்வகட்சி மாநாடு.” – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ்  இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் சிந்தனை அறவேயின்றியும் நாட்டைப் பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்றும் மக்களையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்ள முடியாது சிக்கித் திணறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் திசை திருப்புவதற்காகவும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாளைய தினம் (23.03.2022) நடாத்தும் அரசியல் நாடகமான சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதியை  காப்பாற்றவோ அவருக்கு உயிர் கொடுக்கவோ விரும்பாத காரணத்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்து சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பது என்ற முடிவை இனம் சார்ந்து எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் சர்வகட்சி மாநாடு – தென்னிலங்கை கட்சிகள் கூட எதிர்த்த நிலையில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ள கூட்டமைப்பு !

நாட்டில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை சமாளிக்க முடியாத அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டுக்கு அழபை்பு விடுத்திருந்ததது. தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சிகள் – மலையக க்ட்சிகள் – அரசுடன் உள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவி வகிக்கும் தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொள்ளாது என அறிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடும் இதுவேயாகும். மேலும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.  இப்படியான சூழலில் , “தமிழ் தேசிய கூட்டமைப்பு இதில் கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த மாநாட்டுக்கான அழைப்பு தனித்தனியாக அனைத்து கட்சிகளுக்கும் கிடைக்கப்பெற்றதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த மாநாட்டில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று மாலை தீர்மானிக்கவுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளி கட்சியான புளொட் அறிவித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரச பல்கலைகழகங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் !

அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் வெளிவந்துள்ளது.

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த செயற்பாடுகள் கவலையளிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

51% க்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3% உளவியல் வன்முறைக்கும், 23.8% உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.

ஊழியர்களில் 44% பேர் வாய்மொழி துஸ்பிரயோகத்திற்கும், 22.3% பேர் பாலியல் இலஞ்சம் கோரியதாகவும், 19.9% ​​பேர் உடல்ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 21% பேர் வாய்மொழி பாலியல் துஸ்பிரயோகத்திற்கும், 1.5% பேர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பகிடிவதை என்பது முதலாவது ஆண்டில் மட்டுமே நடப்பதாகக் கருதப்பட்டாலும், அவை தொடர்வதாகவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் மேலதிக விதிமுறைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வகுத்துள்ளது.

அதன்படி, சம்பவங்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை, வெளியேற்றப்படுதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நஷ்டஈடு செலுத்துதல் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு புதிதாக இணைத்துகொள்ளும் மாணவர்களை துன்புறுத்துவதில் ஈடுபட மாட்டோம் என அனைத்து மாணவர்களும் எழுத்து மூலம் உறுதியளிக்க வேண்டும் என்பது மேலதிக நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

“அரசாங்கம் பொதுமக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றது.” – சுமந்திரன் குற்றச்சாட்டு !

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் வெறும் ஒப்பனை அல்ல என்றும் நாட்டின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அர்த்தமுள்ள முயற்சி என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு திருத்தங்களும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

இதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் கொடூரமான சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டுவந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

கொடூரமான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்து பொதுமக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் சண்டை – மண்ணெண்ணெய் அருந்தி பாடசாலை மாணவி மரணம் !

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார்.
கந்தளாய், கோவில்கிராமம் செஞ்சிலுவைச் சங்க கிராமத்தைச் சேர்ந்த லக்ஷிகா ராமநாதன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
என் மகள் மிகவும் உணர்திறன் கொண்ட பிள்ளை அடிக்கடி கோபம் கொள்பவள் கற்றல் மற்றும் வரைவதிலும் வல்லவர் என சிறுமியின் தயார் தெரிவிக்கின்றார்.
கடந்த மாதம் 27ம் திகதி எனக்கும், எனது கணவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மகள் சத்தம் போட்டார். பின்னர் சிறிது நேரம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மகள் குடித்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
நான் போய் என்ன செய்தாய் என்று கேட்டேன். அப்போது அவரது வாயிலிருந்து வாயு நுரை வெளியேறியது. எனது மகளை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து திருகோணமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் சிறுமியின் தயார் என்.நாகராணி தெரிவித்தார்.
சுமார் மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தாக்கலாம் என்ற அச்சம் – பாராளுமன்ற பேரூந்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் !

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும் சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது பேருந்துகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு – பிள்ளையான், திலீபன் ஆதரவுடன் நிறைவேற்றம் !

சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.

இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் !

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளுக்காக நீண்டநேரம் வரிசையில் நின்ற நான்கு பேர் பலியாகியிருக்கும் நிலையில்,வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் கொழும்பிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றில் இராணுவத்தினர்,பொலிஸார் கடமையில் நிற்க,எரிபொருள் கொள்வனவுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை இங்கு காணலாம்.

இலங்கையின் வான்பரப்பையும் இந்தியாவிடம் விற்றது ராஜபக்ஷ அரசாங்கம்- வெளியாகியுள்ள குற்றச்சாட்டு !

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பம். எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாது மக்கள் வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எனக் கூறி, இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

இலங்கையின் கடல், நிலமும் சீனாவுக்கு வழங்கப்பட்டது. துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்கினர். எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கினர். இவ்வாறான நிலைமையில் இலங்கையின் வான் பரப்பும் 29 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு ட்ரோன் விமானங்களை பறக்கவிடுவதற்காக இலங்கை வான் பரப்பு விற்பனை செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக இதனை நான் பார்க்கின்றேன். இந்தியாவுடன் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதில் ஒன்று இலங்கை மக்களின் உயிரியல் அடையாளங்களை அதாவது கைவிரல் அடையாளங்களை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் உரிமையை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தொழிற்நுட்ப அமைச்சுக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று ட்ரோன்கள் மற்றும் நான்காயிரம் தொன் எடை கொண்ட மிதக்கும் மிதவை படகு ஆகியவற்றை இலங்கையில் பயன்படுத்த இந்திய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சம்பந்தமான முழு பாதுகாப்பு இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வந்த வீரர் இலங்கை கடற் பாதுகாப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்திய கடற் கண்காணிப்பு அமைப்புக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு மையத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சீனாவுக்கு துறைமுகம், இந்தியாவுக்கு கடல், மிகப் பெரிய போரை ஏற்படுத்தக் கூடியது.“ எனத் தெரிவித்துள்ளார்.