களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!
அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 31 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.
தேசம்: நீங்கள் பாரிசுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி உங்களுடைய வாழ்க்கையை புலம்பெயர் தேசத்தில் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் வந்த காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போல செல்வி கடத்தப்பட்டு இருந்த நேரம் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் ,அவர் விடுதலை ஆவார் என்ற எண்ணத்தில் வந்தீர்கள். ஆனால் கடைசி வரைக்கும் செல்வி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விடயம் கூட உங்களுக்கு மிக நீண்ட காலமாக தெரியாது. எந்தக் கட்டத்தில் செல்வி உயிருடன் இல்லை என்ற கட்டத்திற்கு நீங்கள் வாறீர்கள்? ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை பயணமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு அல்லவா…
அசோக்: எப்படியும் ஒரு வருஷம் இருக்கும் அதுவரைக்கும் நான் நம்பிக் கொண்டு தான் இருந்தேன் செல்வி இருப்பாங்க என. அதற்குப் பிற்பாடு தான் எனக்கு தெரிய வருகிறது. செல்வி இல்லை என்று.
தேசம்: உண்மையிலேயே இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு போன உடனேயே செய்துவிட்டார்களா? அல்லது குறிப்பிட்ட காலம் வைத்திருந்தார்களா?
அசோக்: நீண்ட காலம் வைத்திருந்தவர்கள் என்று நினைக்கிறேன். 6-7 மாதமாவது வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கைது செய்யப்பட்டதற்கு பிற்பாடு கைதிகள் சிறையில் இருந்த பெண் ஒருவர் செல்வியைக் கண்டதாக வேற ஆட்களிட்ட சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவங்கள் விரும்பவில்லை.
தேசம்: இந்தச் சம்பவம் எல்லாம் நடந்தது 92 ஆம் ஆண்டு காலப்பகுதியா?
அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்க வாறேன். செல்வி 91 ஓகஸ் ட் 30ம் திகதி கைது செய்யப்படுறாங்க.
தேசம்: 93 நீங்கள் முடிவுக்கு வாறீர்கள். அந்தக் கற்பனை, அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் முடிவுக்கு வருது.
அசோக்: ஓம்…
தேசம்: அதுக்குப்பிறகு அது மிகக் கஷ்டமான சூழலில் தான் நான் நினைக்கிறேன் நீங்கள் மன உளைச்சலோடு நிறைய சிக்கல்கள்களை கடந்து வந்திருப்பீர்கள். அந்தக்காலங்களை எப்படி எப்படி சமாளித்தீர்கள்? அரசியல் ரீதியாக விரக்தி, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் விரக்தி. நான் நினைக்கிறேன் உங்கள் வயது இளைஞர்களுக்கு உங்களுடைய தலைமுறை ஆட்களுக்கு இவ்வாறான வாழ்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பு என்று நினைக்கிறேன். படிப்பை விட்டு வந்தவர்கள் அரசியல் ரீதியாக தோல்வி இதில் இருந்து எப்படி வெளியில் வந்தீர்கள்?
அசோக்: போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகள் இருக்குதானே, நம்பி வந்த இயக்கத்திலும் தோல்வி , தவறுகளிலிருந்து மீளலாம் என எண்ணி எடுத்த முயற்சிகளும் தோல்வி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பி நம்பி ஏமாந்து…
தேசம்: அப்படி ஒரு ஃபீலிங் வந்ததா நாங்கள் எல்லாத்தையும் இழந்திட்டம் என்று…
அசோக்: ஒரு கால கட்டத்தில் இருந்தது. இயக்கத்தில் முரண்பட்டு வரேக்க. பெரும் நம்பிக்கைகளோடுதானே போராட்டத்திற்கும் புளொட்டிக்கும் வந்தது. நான் தனியா வந்திருந்தால் பரவாயில்லை. எங்க கிராமத்திலிருந்து என்னை நம்பி வந்த தோழர்கள், மற்ற எல்லாத் தோழர்களையும் நினைக்கும் போது அவர்களின்ற, என்னுடைய இளமை வாழ்க்கையை எதிர்காலத்தை விணாக்கி விட்டேனோ என்ற குற்ற உணர்வு வரும்.
அதே நேரம் புளொட்டின் அரசியல் கோட்பாட்டை, அதன் செயற் திட்ட வடிவங்களை இதுவரைக்கும் சிறந்ததாக்தான் கருதுகிறேன். நாங்கள் விட்ட தவறுகளினால், அதிகார ஆசைகளினால் இந்த கோட்பாடுகளை போராட்ட வடிவங்களை சிதைத்தோம் என்பது வேறு விடயம்… அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் பற்றிக் கதைக்குது, ஒரு வர்க்கப் போராட்டத்தைப் பற்றி கதைக்குது, தேச விடுதலை பற்றி… அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பது இன்று விவாதத்துக்கு உரியது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அது முற்போக்கானதாக இருந்தது. இன்றும் கூட அது நடைமுறைக்கு சாத்தியமானது தான்.
இலங்கை தழுவிய வர்க்கப் போராட்ட சூழல் இல்லைதான். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு நம்பிக்கை தரக்கூடியது. அந்த அடிப்படையில் புளொட்டின் அடிப்படை அரசியல் என்பது வித்தியாசமானது. எல்லா இயக்கங்களின் அரசியலை விட வித்தியாசமானது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணியம் பற்றி பேசுகிறது. பல்வேறு விடயங்களை கதைக்குது. அதை நம்பி தானே நாங்கள் வந்தோம். அந்த தோல்வி என்பது பெரிய சிக்கல் தான்.
கடைசி நம்பிக்கையிழந்து நான் வெளியேறி அந்த காலகட்டத்தில்தான் செல்வியினுடைய பிரச்சினையும் வருது. அது பெரிய தாக்கம், கடும் மன உளைச்சல் இருந்தது. அதுல இருந்து மீண்டதற்கு நண்பர்களும் தோழர்களும் தான் காரணம். அடுத்தது நிறைய வாசிப்புகள் இருந்தது.
அடுத்தது அந்த நேரத்தில் நிறைய பயணங்கள். தோழர் திருநாவுக்கரசு குடவறைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தவர். அவரோடு பல்வேறு இடங்களுக்கு போயிருக்கிறேன். ஓரளவு என்னுடைய மனதை திசை திருப்பக் கூடிய சூழல் இருந்தது. அடுத்தது வாசிப்பு. வாசிப்புதான் என்னை ஆற்றுப்படுத்தியது. இங்க வந்தும் அதுதான். இலக்கிய தொடர்புகள் அரசியல் தொடர்புகள் மீண்டும் தொடங்கிவிட்டது அந்த இடைவெளியை நிரப்பி விட்டது. அந்த இடைக்காலம் என்பது சிக்கலானது தான்.
தேசம்: இதுல வந்து உங்கட அந்த நீண்ட இடைவெளியில் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்தீர்கள். இந்த அரசியல் குழப்பங்கள் தனிப்பட்ட இந்த நிலைகளுக்கு பிற்பாடு எப்படி உங்களுக்கு அந்த புதிய வாழ்க்கை பயணத்தை தொடர்வதற்கான அந்த உத்வேகம் வந்தது எப்படி அதை ஆரம்பித்தீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்…
அசோக்: தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு நான் இங்கு வந்தேன். பிறகு அரசியல் வாழ்க்கை இலக்கிய வாழ்க்கை என்று இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது அதுக்குள்ள தான் இலக்கியச் சந்திப்பு, நண்பர்கள் வட்டம் மனித உரிமைச் செயற்பாடுகள். இங்குள்ள கட்சி சாரா இடதுசாரிகளோடு இணைந்து வேலை செய்தல் என காலம் போனது… அந்த காலகட்டத்தில் புலிகளுடைய மோசமான அதிகார ராஜ்யம் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது அதற்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவது…
தேசம்: இதை நாங்கள் கொஞ்சம் பிறகு டீடெய்லா கதைப்பம். இப்ப உங்களுடைய புதிய தனிப்பட்ட வாழ்க்கை அப்ப நீங்கள் ஜெயந்தியை சந்திக்கிறீர்கள்… எப்ப இந்த புதிய உறவை நீங்கள் ஆரம்பிக்க கூடியதாக இருந்தது…
அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்கு வாரேன். ஜெயந்தியை நான் 2003ல் தான் சந்திக்கிறேன்.
தேசம்: பாரிசிலா?
அசோக்: பாரிசில் தான் சந்திக்கிறேன்.
தேசம்: அதற்கு முதல் தொடர்புகள் என்ன மாதிரி…
அசோக்: ஜெயந்தியோடு தொடர்புகள் இருக்கவில்லை. பாரிசில்தான் நாங்கள் முதல்முதல் சந்திக்கிறோம். அதற்கு முதல் வேறு திருமணங்கள் தொடர்பாக நண்பர்களுடைய முயற்சிகள் நிறைய நடந்தது. நான் விரும்பவில்லை. எங்களுடன் சார்ந்த குடும்ப உறவுகள் இருக்கக்கும்தானே. நிறைய திருமணத்துக்கான அழுத்தங்கள் இருந்தது.
தேசம்: 2003 என்றால் உங்களுக்கு எத்தனை வயது இருக்கும்…
அசோக்: எனக்கு 40, 45 வயது இருக்கும். அப்போ எனக்கு ஒரு நண்பர் இருந்தவர் ஆதவன் என்று கனடாவில் இருக்கிறார். புளொட் மாணவர் அமைப்பில் இருந்தவர். பிற்காலங்களில் மனித உரிமைகள் தொடர்பாக வேலை செய்தவர், அவர் ஜெயந்திக்கு மிக நெருக்கமான நண்பர். அவர்தான் ஜெயந்தி பற்றி சொன்னார்.
ஜெயந்தி ஆரம்பத்தில் பூரணி பெண்கள் அமைப்பில் வேலை செய்தவர். அங்கதான் செல்வி, சிவரமணி, ராஜினி திராணகம, சித்திரலேகா மௌனகுரு, வாசுகி ராஜசிங்கம் போன்றவங்களோட உறவு கிடைக்கிது.
அதற்குப் பிற்பாடு சூரியா பெண்கள் அமைப்பு மட்டக்களப்பில் வேலை செய்தவர்.
தேசம்: அப்போ செல்விக்கு முதலே ஜெயந்தியை தெரியும்.
அசோக்: ஓம் செல்வியும் ஜெயந்தியும் ஒன்றாக வேலை செய்தவர்கள்.
அப்போ ஆதவன் ஜெயந்தியை பற்றி சொல்லி, இப்ப ஜெயந்தி அயர்லாந்தில் கொலாஷிப்பில் படிக்கிறார். அவங்க ஜெர்மனிக்கு வந்துட்டு பிரான்சுக்கு வாறாங்க. என்னை சந்திக்கும்படி சொன்னார். பிரான்சில் ஜெயந்திக்கு உறவினர்களும் இருந்தாங்க. ஜெயந்தி இலக்கியங்களுடன் சம்பந்தப்பட்ட ஆர்வம் இருந்தபடியால் சூர்யா நூலகத்துக்கு சிறு சஞ்சிகைகள் இருக்குதானே அதைத் தேடும் ஆர்வம் ஜெயந்திக்கு இருந்தது.
அப்போ ஆதவன் சொல்லியிருக்கிறார் ஜெயந்தியிடம் இப்படி அசோக் என்று ஒருத்தர் இருக்கிறார் என்று. என்னைப் பற்றி ஜெயந்தி முதலே கேள்விப்பட்டிருக்கிறார். அப்போ அசோக்கை போய் சந்தி என்று சொல்லி எனக்கும் டெலிபோன் நம்பர் தந்தவர். அப்போ பிரான்சுக்கு வந்த ஜெயந்தியை நான் சந்தித்து கதைக்கிறேன்.
என்னுடைய சமூக ஆர்வம், இலக்கிய ஆர்வம் முழுக்க ஜெயந்தியிடம் இருந்தது. அப்போ எங்களுடைய உரையாடல்கள் எல்லாம் அரசியல் சமூகம் இலக்கியம் என்று போயிட்டு இருந்தது.
அப்போ ஆதவன் சொன்னார் நீ ஜெயந்தியை திருமணம் செய்வது பற்றி யோசி. நான் ஜெயந்தியோடு கதைக்கிறன் என்று. எங்க திருமணத்துக்கு முழுக் காரணமும் ஆதவன் தான். ஆதவனை நானும் ஜெயந்தியும் மறக்க முடியாது. ஆதவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
தேசம்: ஜெயந்தியும் 90களில் இந்த பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் அந்த செயற்பாடுகளில் ஈடுபட தொடங்கி விட்டாரா?
அசோக்: ஓம். இலக்கியம், பெண்ணியம், மனித உரிமைகள் தொடர்பான ஈடுபாடு எல்லாம் இருந்தது. அவர் உண்மையில் ஒரு கள செயற்பாட்டாளர். பெண்கள் மத்தியில் களப்பணி செய்வதுதான் அவரின் பிரதான நோக்கமாக இருந்தது.
தேசம்: ஆனால் அந்தக் காலகட்டத்தில் உண்மையாக பெண்கள் அந்த வயசுல ஈடுபடுவது என்பது குறைவு…
அசோக்: ஓம். அடுத்தது புலிகளுடைய மிக நெருக்கடியான காலகட்டம் தானே. அப்போ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வது தொடர்பாகத்தான் உடுவில் பெண்கள் இல்லம் உருவாக்கப்பட்டது. ஜெயந்தி அதில்தான் முதல்முதல் வேலை செய்கிறாங்க.
அடுத்தது நாங்கள் எங்களுக்கு வார துணைவி, எங்களுடைய உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணப்பாடு இருக்கும்தானே. அடுத்தது இன்னும் ஒரு பக்கத்தில் அவர் செல்வியினுடைய நெருங்கிய சினேகிதியாக இருந்தபடியால் என்னை பற்றிய முழு பின்புலமும் தெரிந்திருக்கும். என்னுடைய பலம் பலவீனம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். என்னுடைய குளறுபடிகள் ஆதவனுக்கு தெரியும். ஆதவன் எல்லாம் சொல்லி இருப்பார்தானே…
தேசம்: இந்த உறவு ஏற்பட்டதற்கு பிற்பாடு 2003இலேயே திருமணம் ஆகிவிட்டதா…
அசோக்: இல்லை.. இங்க பாரிசில் சந்தித்த பின் அயர்லாந்து போயிட்டாங்க. பிறகு என்னை திருமணம் செய்வதற்காக பிரான்ஸ் வந்து என்னை ரெஜிஸ்ட்ரேஷன் செய்திட்டு திரும்ப இலங்கைக்கு போயிட்டாங்க. பிறகு நான் உத்தியோகபூர்வமாக திரும்ப அழைக்கிறேன்.
தேசம்: நான் நினைக்கிறேன் பிற்காலத்தில் சூர்யா பெண்கள் அமைப்போடு தான் அவர் ஈடுபட்டிருந்தார் என்று.
அசோக்: சூரியா பெண்கள் அமைப்பில் தான் அவங்க மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தங்க. அவங்களுக்கு மனித உரிமைகள் பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் ஆர்வம் இருந்ததால குறிப்பிட்டு ஒரு அமைப்போடு மாத்திரமல்ல வெவ்வேறு சிறு குழுக்கள் சார்ந்தும் வேலை செய்தார். மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டிருந்த அகிம்சைப் பணிக்குழு, இது அமரா அவங்களின்ற நண்பர்கள் சேர்ந்து சுயாதீனமாக இயங்கிய அமைப்பு. இவங்க நிறையவேலை செய்திருக்காங்க. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் தாய்மார்கள் மத்தியில் நிறைய வேலைகள் செய்திருக்காங்க.
தேசம்: பிற்காலத்தில் தன்னுடைய கல்வியிலும் நிறைய நாட்டம் கொண்டிருந்தவா என்று நினைக்கிறேன்.
அசோக்: ஓம். அயர்லாந்தில் படிப்பை முடித்துவிட்டு திரும்பி மட்டக்களப்பிற்கு போய் வேலை செய்தாங்க. மட்டக்களப்பில் இருந்தபோது அமரா என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர். மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மத்தியில் களப்பணி செய்து கொண்டிருந்தாங்க. தாங்களாக சிறுகுழுவாக இயங்கிக் கொண்டிருந்தாங்க. அவங்க சிங்கள சமூகத்தை சேர்ந்தவர். ஒருபக்கம் இலங்கை அரசு, மறுபக்கம் புலிகள். மிக மோசமான சூழ்நிலையில் துணிந்து நின்று மட்டக்களப்பில் அவங்க அமரா வேலை செய்தாங்க. அவங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடி. புலிகளால் நெருக்கடி… இலங்கை அரசாங்கத்தால் நெருக்கடி…
தேசம்: அவருடைய கணவர் தான் சொர்ணலிங்கம்…
அசோக்: ஓம். அவரும் ஒரு சமூக செயற்பாட்டாளர்.
தேசம்: நான் நினைக்கிறேன் சூரியா அமைப்பில் அவர்கள் வேலை செய்கின்ற நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக… அந்த நேரம் மட்டக்களப்பில் அது பெரிய பிரச்சனை. அடிக்கடி கைதுகள் இடம்பெறும். அவர்களைப் பார்க்க இயலாத நிலைமை அந்த நேரத்தில் எல்லாம் இவர்களுடைய ஒத்துழைப்பு நிறைய இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அவர்களோடு வேலை செய்தார்களா?
அசோக்: இல்லை திருமணத்துக்குப் பிறகு இங்கேயே வந்திட்டா. அந்த உறவுகள் இருந்தது. இலங்கைக்கு போகும்போது அங்க நட்புக்களை உறவுகளை எல்லாம் சந்திப்பா. அமரா அவங்களோடு சேர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுடன் வேலை செய்வது… மனித உரிமை விடயங்களில் ஈடுபடுவது…
தேசம்: உங்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் மிக உடைந்த நிலையில் தான் இருந்தீர்கள். இப்ப எப்படி பார்க்கிறீர்கள் 18 ஆண்டுகள் கடந்து…
அசோக்: என்னோடு வாழ்வது என்பதே அது ஒரு துணிச்சல் தானே ..! ஜெயந்தி வந்ததற்குப் பிறகுதான் நிறைய மாற்றங்கள் என்னிடம். நிறைய கற்றிருக்கிறேன் ஜெயந்தியிடமிருந்து. அடுத்தது ஜெயந்தியிடம் பொறுமை கூட. முரண்பாடுகளை எப்படி கையாளுவது என்று ஜெயந்தியிடம் தான் நான் கற்றேன்.
தேசம்: புலம்பெயர்ந்த தேசத்தில் உங்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த முரண்பாடுகளுக்குள் அவங்க வரேல பெரும்பாலும்.
அசோக்: ஜெயந்தி அதிலே தெளிவாக இருந்தாங்க. வந்த ஆரம்பத்தில் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இங்கு புகலிட சூழலில் பிரயோசனமான வேலைகளில் ஈடுபடலாம் என்று. எங்களுடைய புகலிட சண்டைகளையும், முரண்பாடுகளையும், குழிபறிப்புக்களையும் பார்த்து பயந்து போயிற்றா. அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டா. ஜெயந்திக்கு ஆவணப்படுத்தலில் ஆர்வம் இருக்கு. பல விடயங்களை செய்து கொண்டிருக்கிறா.
புகலிட அரசியல் இலக்கிய செயற்பாடுகள் என்பது மக்களுக்கானது இல்லைத்தானே. அது எங்களின்ற அடையாள இருத்தலுக்கான ஒரு உத்திதானே . எனக்கு நிறைய விமர்சனங்களை வைத்திருக்காங்க. எங்களுடைய புகலிட அரசியல் இலக்கிய முரண்பாடு ஆரோக்கியமில்லாத முரண்பாடு. அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். நீண்ட நேரம் கதைக்க வேண்டும் அதை. என்னுடைய திசை வழியை மாற்றியதில் ஜெயந்திக்கு நிறைய பங்கு இருக்கு. ஒரு தோழியாக, சினேகிதியாக …
தேசம்: உங்களோடு ஏற்கனவே தொடர்பில் இருந்த நண்பர்கள் வரக்கூடியதாக இருக்கு தங்கக்கூடியதாக இருக்கு. அதுகளில் எல்லாம் நான் நினைக்கிறேன் நல்ல தோழியாகவும் அரசியல் துணையாக கூட இருக்கிறா…
அசோக்: எங்களுக்கு நண்பர்கள் தோழர்களின் வருகையைப் போல் சந்தோசம் தருவது வேறு எதுவும் இல்லை. செல்வியினுடைய சினேகிதங்கள் முழு பேரும் ஜெயந்திக்கும் சினேகிதங்கள் அந்தப் பழைய வட்டம் அப்படியே இரண்டு பேருக்கும் உறவாக இருக்கு. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் செல்வியினுடைய சினேகிதங்கள் எனக்கும் உறவு ஜெயந்திக்கும் உறவு. அது எங்களுக்கு ஒரு பெரிய ஆரோக்கியமாக இருந்தது. ஜெயந்திக்கு ஒரு நண்பர் வட்டம், எனக்கு ஒரு நண்பர் வட்டம் இருக்கு. இந்த நட்புக்களும் உறவுகளும்தான் எங்களுக்கு பலம். எங்களை காப்பாத்தினது. ஏனென்றால் நாங்கள் எங்களுடைய வட்டத்தை மீறி வேறு மட்டங்களுடன் பழக முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் சிந்தனையும் போக்கும் வித்தியாசம். அப்போ எங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு குடும்ப வாழ்க்கையில் இந்த நட்புக்களின் துணையும் உதவ வேண்டும். அந்தவிதத்தில் ஜெயந்தியின் துணை என்பது பெரியது. இல்லாவிட்டால் நான் சாமியார் ஆகியிருப்பேன்…
தேசம்: உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டேன் என்ற நிலையில் இருந்தீர்கள். இப்ப வாழ்க்கை ஓரளவு பூரணப்படுத்தப்பட்டிருக்கு…
அசோக்: பூரணம் என்பது… பொருளாதார ரீதியாக…
தேசம்: அதைப்பற்றி நான் கேட்கவில்லை. உணர்வு ரீதியாக…
அசோக்: எங்களுக்கு சந்தோஷமான ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. பரஸ்பரம் புரிந்துணர்வு இருந்தாலே அது சந்தோசமான வாழ்க்கையாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான குடும்பவாழ்விற்கு, ஜனநாயகப் பண்புகளும், சமத்துவ உணர்வுகளும் அவசியம். இது இருந்தாலே வாழ்க்கை சந்தோசம்தான். அடுத்தது ஒவ்வொருவரின் தனித்துவங்களை அங்கிகரிக்க, மதிக்க பழகணும். இவை பற்றி விமர்சனங்கள் இருந்தால் ஆரோக்கியமாக வைக்கணும். இது குடும்ப வாழ்க்கைக்கு மாத்திரம் அல்ல அரசியல் சமூக வாழ்க்கைக்கும் முக்கியம். இந்தப் பார்வை எங்களிடம் இருக்கு.
மற்றது நாங்க வேலை செய்கிறம். அந்த வருமானத்தில் நேர்மையாக வாழ்கிறம். எந்த பெரிய பொருளாதார எதிர்பார்ப்புக்களும் எங்களிட்ட இல்லை. வசதிகளை எங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்றம். எங்களுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று. ஜெயந்திக்கு நிறைய இருக்கு. அவருடைய நண்பர்கள் சேர்ந்து பல பேரை படிப்பிக்குறனாங்க. கஷ்டப்படுற மக்களுக்கு உதவி செய்வோம். பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கு கூட நாங்க உதவி செய்திருகிறக்கிறம். எங்களைப் பொறுத்தவரை துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அதுதான் முக்கியம்.