May

May

அத்துமீறும் ஆசிரியர்கள் – மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் கைது !

தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (30) சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளிலும் மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் அத்துமீறும் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் கலவான பகுதியில் பாடசாலை மாணவர்களை கழிப்பறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் எல்லா பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கின்றது. ஆசிரியர் சங்கமோ அல்லது கல்வி அமைச்சோ இந்த விடயங்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளாத ஒரு போக்கு தொடர்வதாக பலரும் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கசிப்பு அருந்திய இளைஞன் இரத்தவாந்தி எடுத்து மரணம் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

புங்குடுதீவு பகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

அதேவேளை, புங்குடுதீவு பகுதிகளில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உள்ளிட்ட போதை பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதாகவும், கசிப்பு உள்ளிட்டவை வன்னி பிரதேசங்களில் இருந்து அங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாவும் , அவ்வாறு கசிப்பை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவ்வூரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டம் – உதவிக்கரம் நீட்டும் கொரியா !

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிப்பன் குளம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் கொரிய பொறியியல் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அந்த திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் (KIAT) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இன்று கைச்சாத்திட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2000 ஏக்கர் நிலம் வனவளபாதுகாப்பு திணைக்களத்துக்கு..? – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் எந்தவொரு காணியையும் அபகரிக்கும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லையென அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கருவாடுகள் , பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் உள்ளிட்ட கன உலோகங்கள் !

தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பல பழ மாதிரிகள் மற்றும் கருவாடுகளில் ஈயம் உள்ளிட்ட கன உலோகங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

அதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மற்றும் கருவாட்டு வகைகள் மற்றும் பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்களுக்கான சோதனையை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கல உலோகங்களுக்கான பரிசோதனையை ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து அங்கீகாரம் பெற்ற மற்றும் சுதந்திரமான ஆய்வகத்திலிருந்து அறிக்கையைப் பெறுமாறு அனைத்து பழ இறக்குமதியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பண்டங்களில் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் ஆபத்தான அளவு ஈயம் உள்ளது என்றும் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகம் என்றும் தெரியவந்ததை அடுத்து, இறக்குமதி செய்யப்படும் கருவாடுகள் மற்றும் பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் உள்ளிட்ட கன உலோகங்கள் உள்ளதா என்று சோதிக்கப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்கும் இலங்கை!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

 

சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.

 

இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான இராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

வவுனியாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபருக்கு மரணதண்டனை!

வவுனியா – சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடையவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

 

சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட ஒருவருக்கு எதிராக11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

குறித்த வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தன.

 

இவர் மீது சுமத்தப்பட்டிருந்த 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

 

தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

 

10 ஆம் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு நீதிபதி மா. இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

பாடசாலையின் கழிவறையில் வைத்து மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – நடன ஆசிரியை மற்றும் அதிபர் கைது !

கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் பதில் அதிபர் மற்றும் அதே பாடசாலையில் கடமையாற்றும் நடன ஆசிரியை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மாலை பாடசாலையின் கழிவறையில் வைத்து இரு சிறுவர்களை கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்டுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமைய இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அதே பாடசாலையில் 7ஆம்(12 வயது) தரத்தில் கலவிபயிலும் இரண்டு சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில், குறித்த சிறுவர்கள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கலவானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பதில் அதிபரும், ஆசிரியரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடன் தொல்லை – சிறு வர்த்தகர் ஒருவர் தற்கொலை !

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால் சிறு வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று (29) நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்; அவர் உயிரை மாய்த்த சமயத்தில் அவரைதேடி வீட்டிற்கு வெளியில் கடன் கொடுத்தவர்கள் சிலர் காத்து நின்றதாகவும், வர்த்தகர் உயிரை மாய்த்ததையறிந்து வீட்டிலிருந்து அழுகுரல்கள் கேட்டதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நழுவிச் சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களின் முன்னரும் கடன்கொடுத்தவர்கள் மரக்காலைக்கு சென்று தலைக்கவசத்தால் வர்த்தகரை தாக்கியுள்ளனர். கடன் தொல்லையால் வர்த்தகர் ஏற்கெனவே ஒருமுறை தனது மரக்காலைக்குள் உயிரை மாய்க்க முயன்றபோது, மரக்காலையில் பணியாற்றியவர்கள் தலையிட்டு அவரை சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸில் முறைப்பாடு !

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் , அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.