02

02

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவானது ”PUCSL”க்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

செவ்வாய் கிரகத்தில் நீர் – சீனா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

 

இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை !

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சில மீம்கள் வைரலாகி வருகின்றன.