February

February

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் !

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் , அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது.” – அமெரிக்கா !

“தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் 2009 இன் பின்னர் இலங்கையில்  முடக்கப்பட்டாலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது.” என நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த 2021 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதிகளை திரட்டி தமது செயல்பாடுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்து வருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 இன் பின்னர் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லாவிடினும், சர்வதேச அளவில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்தும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்களும், அவர்களின் வலையமைப்பும், நிதி ஆதரவும் தொடர்வதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்ய சதித்திட்டம் – CID வெளியிட்ட அறிவிப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தனியார் வானொலியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த குழுவொன்று இது தொடர்பில் வெளிநாடுகளில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக இன்று (28) வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார காலத்துக்குள் இந்த படுகொலை முயற்சியை மேற்கொள்வதற்கு குழு திட்டமிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் எந்தவொரு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

“கிழக்கில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.” – அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

“இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி.” என வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற நாசமாக்க நினைக்கின்ற இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடகிழக்கு பிரச்சனை ஒரு தீர்வாக கொண்டு வந்தது. வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடகிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது.

இந்த வட கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜே.வி.பி கட்சியாகும். மக்கள் விடுதலை முன்னணி இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன் .13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி  ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று  சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி  தெரிவித்துள்ளார்.

கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில வள பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது. ஆகவே வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் .

இணையாத வடகிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் கிழக்கு தப்பி பிழைக்காது. காணி, பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏக்கத்தகாத நடவடிக்கைகள் சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இணைந்த வட-கிழக்கு இல்லாமல் தனியாக கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர்திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைந்த வடகிழக்கில்தான் கிழக்கை பாதுகாக்க முடியும். கிழக்கை பாதுகாத்தால் தான் வட-கிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

“சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தராது.” – காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2200வது நாளான இன்று வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிரானது  என்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம்.

வடக்கு கிழக்கில் தமிழ் நீதியரசர்களின்  தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்துவிடும்.

1983 சிங்களப் படுகொலைக்குப் பின்னர், 1984 இல் அமெரிக்கா பின்வரும் மதிப்பீட்டைச் செய்தது:

“தமிழ் கோரிக்கைகள் அநேகமாக ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் மூலம் திருப்தி அடையும், அது தமிழர்கள் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீதான கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்யும்” என்கிறது.

“பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்” என்று வாஷிங்டன் நம்புவதாக அந்த ஆவணம் கருத்து தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலை மற்றும் இனப்படுகொலைக்குப் பிறகு, அமெரிக்கக் கருத்து, கொன் பெட்ரலிசம்  அல்லது முழுத் தமிழ் இறையாண்மைக்கு மேலும் சென்றிருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.

சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதனையும்  பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள். ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன்கள் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது. ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது.

நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம்” என தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாள்வெட்டு கும்பல் – நித்திரைக்கு சென்ற பொலிஸார் !

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொிய வருவதாவது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா்.

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

இது ஒரு புறம் இருக்க வடக்கு மாகாணத்தின் திரும்பும் திசையெல்லாம் ராணுவத்தினர் – பொலிசாரும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு சந்திக்கு சந்தி போக்குவரத்து போலிசாரும்  கடமையில் தான் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை என்ற பெயரிலும் ராணுவத்தினர் உலாவி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தெரியாத வகையில் இந்த வாள்வெட்டு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றதா..? திரும்பும் திசையெல்லாம் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் ராணுவத்தினரும் – பொலிசாரும்  இருக்கின்றனர். இப்படி இருந்தும் கூட வடக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக முக்கியமான நகர் பகுதிகளில் கூட வாள்வெட்டுச்சசம்பவங்கள் நடப்பதன் பின்னணியின் பாதுகாப்பில் உள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அசமந்த மற்றும் கண்மூடித்தனமான போக்கும் ஒரு காரணம் எனலாம்.

11 வயது சிறுமி மீது பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் – 44 வயது குடும்பஸ்தர் கைது !

11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டார்.

இதன் போது கம்பளை ஹெட்காலை சாக் கம்மான கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுமின் தாயின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க சிறுமி கடைக்கு போய் வந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி பாடசாலையில் சோர்ந்து காணப்பட்டதையடுத்து வகுப்பு ஆசிரியை வினவிய பொழுதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் வரவழைக்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வெள்ளிக்கிழமை (24) கம்பளை ஹெட்காலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்திய பொழுதே மேற்கண்ட உத்தரவினை நீதவான் பிறப்பித்தார்.

“உகாண்டாவில் சொத்து இருப்பதை உறுதிப்படுத்தினால் அதனை நாட்டுக்கு வழங்க தயார்.”- நாமல் ராஜபக்ஷ

தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகாண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூறப்படுகின்ற பொய் என்றும், உண்மையில் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், உற்பத்திச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவி்க்கையில்,

நமது மின்சார உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குச் செல்வதில் எங்களுக்கு ஒரு பெரிய இலக்கு உள்ளது.

அவற்றில் சிலவற்றை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு நாம் கட்டாயம் செல்ல வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை, தடையின்றி மின்சார விநியோகத்தை தொடர்வதில் இலங்கை மின்சாரசபை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. அவர்களது பிரச்சினைக்கு சாத்தியமான மாற்று எதுவும் இல்லை.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இடையில் தேவையற்ற மோதல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தனது பொறுப்புகளை சரியாக உணர்ந்திருக்கிறதா என்பது ஒரு கேள்வி. குறிப்பாக தேர்தல் வரும்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது அதிக வரிச்சுமையை அரசு சுமத்தாது.

வேறு எந்த மாற்றுவழியும் இல்லாததால் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.” என குறிப்பிட்டுள்ளார்.

ஓமந்தையில் போராட்டத்துக்கு வராத மக்கள் – ஏமாற்றத்துடன் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் ஓமந்தை வைத்தியசாலையின் பின்புறமாக எரியூட்டும் நிலையமூடாக எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை கழிவுகள் ஓமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள அதற்கென அமைக்கப்பட்ட எரியூட்டும் நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக எரியூட்டப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் சில சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் இணைந்து குறித்த எரியூட்டல் நிலையத்தால் அருகில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் அப் பிரதேசத்தவர்களுக்கு ஆபத்து என தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஆதரவாக வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட சிலர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

எனினும் கிராம மக்களின் ஓத்துழைப்பின்மையாலும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பின்மையாலும் மக்கள் வருகை தராத நிலையில் அரசியல்வாதிகள் திரும்பி  சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.