05

05

கொரோனாவில் இருந்து 64 கோடியே 84 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைவு !

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 84 லட்சத்து 95 ஆயிரத்து 665 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமாக இருக்கும் கணவனான திருநம்பி – பெற்றோராகும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி!

இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியிலுள்ள தம்பதிகளான சஹத் – ஜியா இருவரும் மூன்றாம் பாலின தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் கணவனாக இருக்கும் ஜியாவுக்கும் மனைவியாக இருக்கும் சஹத்திற்கும் முதல் குழந்தை பிறக்கவிருப்பதை புகைப்படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இவர்களுக்கு என ஒரு குழந்தையை தத்தெடுத்து  வளர்க்க முடிவு செய்து குறிப்பிட்ட ஒரு பிரபல வைத்தியசாலையில் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.

அதற்கு மருத்துவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இந்த முறையை சரியாக செயற்படுத்தி தற்போது ஜியா கர்ப்பமாக இருக்கிறார். இவர்களின் அன்பு குழந்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உலகிற்கிற்கு வரவிருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மூன்று உயிர்களும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன – பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அரசாங்கத்திற்கு ‘கடினமான சூழலை’ அளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நேதன் போர்ட்டர் தலைமையிலான ஐஎம்எஃப் மிஷன், 7 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியின் ஒன்பதாவது மறுஆய்வுக்காக நிதி அமைச்சர் இஷாக் டார் தலைமையிலான பாகிஸ்தான் தரப்புடன் ஜனவரி 31 அன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.

பெஷாவரில் நடைபெற்ற அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார். இந்த குழு தீவிரவாதத்தை கையாள்வதற்கான மிக உயர்ந்த மாகாண அமைப்பாகும்.

பாதுகாப்பு நிலைமை குறித்து பேசுகையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துரைத்த ஷெரீப், “இந்த நிலைமை முழு தேசத்திற்கும் முன்னால் உள்ளது” என்று கூறினார்.

“நான் பேசும் இந்த வேளையில், ஐஎம்எஃப் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவர்கள் நிதியமைச்சர் இஷாக் தர் மற்றும் அவரது குழுவினருக்கு கடினமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஷெரீப் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதையும் அவர் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு வார முடிவில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 16.1 சதவீதம் குறைந்து 3.09 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை எதிர்பார்த்துள்ள அதே நேரம் மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் அலி சற்று நேற்றைய தினம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.