எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார்
அநுராதபுர மாவட்டத்தில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹபரண பகுதியில் உள்ள பழமையான கோயில் ஒன்றினுடைய முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும் – சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. இத்தகவல் பலவாறு திரிபுபடுத்தப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. தையிட்டி விகாரை உடைப்பை நியாயப்படுத்த ஹபரண பேரூந்து தரிப்பிடம் கையாளப்பட்டது. சைவ கோயிலை உடைத்து பேரூந்து நிலையம் கட்டியது தவறு எனவும் இது இனவாத நாடு எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்ட படங்களில் சைவக் கோயில் இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழிபாடுகள் இடம்பெறாமல் கைவிடப்பட்டுள்ளதாகவே கருதமுடியும். அக்கோயில் பிள்ளையார் கோயில் எனவும் அம்மன் கோயில் எனவும் மாறுபட்ட கருத்துக்களே வெளிவருகின்றன. கோயிலின் தல வரலாறே தெரியாத நிலமை தான் காணப்படுகின்றது. அவ்வாறு அழிவடைந்துள்ள ஒரு கோயிலை இடித்து ஏன் பேரூந்து நிலையம் கட்ட வேண்டும். பகுத்தறிவுள்ளவர்கள் கேட்க வேண்டிய கேள்வி ஹபறணையில் உள்ள சைவக் கோயில் ஏன் அழிவடைந்துள்ளது. ஏன் கைவிடப்பட்டுள்ளது. இந்துசமய காவலர்கள் என கூச்சலிடும் சிவசேனா அமைப்பினர் கண்களில் இது ஏன் படவில்லை. அடிப்படைவாத இந்து அமைப்பான சிவசேனா தையிட்டியில் அரசியல் செய்து சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்த விரும்புகின்றது.
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை உடைப்பது இனவாத பிரிவினைகளை ஊக்குவிக்கும் என பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள்காட்டி ஹபரண கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என அர்ச்சுனாவின் போட்டி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படியிருக்க பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றுமுன்தினம் ஹபரணையில் உள்ள இடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கோயிலுக்கு நேரடியாக கள விஜயம் செய்து தகவல்களை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அப்பகுதியில் தமிழர்கள் யாருமே இல்லாமையால் கோயில் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் கோயில் உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் கட்டாயம் பாராளுமன்றத்தில் பேசுவேன். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களையும் துணைக்கு அழைத்து கோயிலை இடித்து அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை அகற்றி மீளவும் அப்பகுதியில் கோயிலை அமைக்க என்னாலான நடவடிக்கைகளை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். வழிபாடு செய்ய யாரும் இல்லாவிடில் கோயிலை மீளக் கட்டி என்ன பலன். அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஒரு பாடசாலையை அல்லது ஒரு சனசமூக நிலையத்தை கட்டலாம். ஆளில்லா தேநீர்க்கடையில் தேநீர் ஆற்றி என்ன பலன்? . ஹபறணையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் பல கோயில்கள் கைவிடப்பட்டுள்ளன.
அர்ச்சுனா கோயில் கட்ட முதல் ஹபறணயில் இந்துமக்கள் வாழ்கிறார்களா என அறிய வேண்டும். யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர்களால் கோடிகளை கொட்டி கட்டப்படும் புனருத்தாரணம் செய்யப்படும் கோயில்களில் மாடுகள் தான் படுத்துறங்குகின்றன. எம்பி அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு தார்மீக கடமை உண்டு. வடக்கு கிழக்கில் உள்ள சகல இந்து ஆலயங்களுக்கும் கள விஜயம் செய்து கிளீன் செய்ய வேண்டும். முக்கியமாக 25 கோடி செலவில் புங்குடுதீவில் மாடுகள் படுத்துறங்க கட்டிய இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் . உணர்ச்சி அரசியல் நீடித்த சமாதானத்தை கொண்டு வராது. புத்திசாலித்தனமான அரசியலே தமிழ்மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். ஹபறண கோயில் வருடக்கணக்காக யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. இப்போது அந்த இடத்தில் மக்கள் நிழலில் நின்று பயணம் செய்வது கண்ணை குத்துகிறது.