May

May

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்: த ஜெயபாலன்

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

வண. பிதா. லோங் அடிகளாரின் சிந்தனையில் தோண்றிய நூலக எண்ணக்கருவுக்காக ஆரம்பத்தில் அவருடைய உருவச்சிலையே நூலகத்தின் முன் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் சைவத்தின் எழுச்சியோடு அந்த இடத்தை கல்விக் கடவுளான சரஸ்வதி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் 1981 மே 31 இரவு முதல் இலங்கைப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறையின் அடையாளச் சின்னமாக யாழ்பாணப் பொது நூலகம் உலகறியப்பட்டது. அந்த ஒடுக்குறை அடையாளத்தை புத்தனின் வெண்தாமரையை க் கொண்டு மறைக்க நூலகம் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டது.

ஆனால் மீளக்கட்டப்பட்ட நூலகத்தை திறந்து வைப்பதுஇ யார் திறந்து வைப்பது என்பதில் சிக்கல்கள் உருவானது. நூலகத்தை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்போதைய யாழ்ப்பாண மேயர் செல்லன் கந்தையன் திறந்து வைக்கக்கூடாது என்பதில் சாதிமான்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மிகத் தெளிவாக இருந்தனர். அதனால் கட்சியின் தலைவரான வி ஆனந்தசங்கரியயை வைத்து நூலகத்தைத் திறந்து தங்கள் அரசியல் லாபத்தையீட்ட தீவிரமாக செயற்பட்டனர். ஆனால் அது திறக்கப்படுவதை தங்கள் எதிரியான வி ஆனந்தசங்கரியினால் திறக்கப்படுவதை அரசியல் காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. நூலக மீள்திறப்பு பந்தாடப்பட்டது.

அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட சாதிமான்களின் கூடாரமான தமிழர் விடுதலைக் கூட்டணி சாதுரியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்லன் கந்தையன் நூலகத்தை திறப்பதை விரும்பவில்லை என ஒரு பல்டி அடித்தது. பல புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் இந்த விளக்கம் மிகச்சௌகரிகமாக அமைந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் தமிழ் மக்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவே இன்றும் உள்ளது.

யாழ்ப்பாணச் சமூகமானது தன்னுடைய செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் இடையே பாரிய இடைவெளியயைக் கொண்ட சமூகமாகவே இன்றும் உள்ளது. சிங்கள சமூகத்தின் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையயை எதிர்த்த யாழ்ப்பாண சமூகம் தான் ஏனைய சமூகங்கள் மீது கட்டற்ற ஒடுக்குமுறையயை மிகத்தீவிரமாகக் கைக்கொண்டது. யாழ்ப்பாணப் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்படுவதற்கு முன்னதாகவே ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பள்ளி, நூலகம் என்பன யாழ் ஆதிக்க சமூகத்தினரால் எரியூட்டப்பட்டு இருந்தது. இன்றும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களை ஏற்றுக்கொள்ளாத அரச பாடசாலைகள் யாழ் மண்ணில் உள்ளது. மனித உரிமைகளைக் கோருகின்ற இன்றைய யாழ்ப்பாண சமூகம் ஏனைய சமூகங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாரற்ற சமூகமாகவே உள்ளது.

நாற்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூருகின்ற யாழ்ப்பாண சமூகம் இன்னமும் அந்நூலகம் எந்நாளில் எரிக்கப்பட்டது என்ற விடயத்தில் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. வாய்மொழி வந்த செய்திகளிலும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டஇ பேசப்பட்ட விடயங்களையும் கொண்டே இந்தப் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தன்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல் எம்மத்தியில் உள்ள சில கேள்விச் செவியர்கள் ‘தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று ஒற்றைக்காலில் நிற்கின்றனர். அறிவியல் தேடலே இல்லாமல் கூடத்தின் வரலாற்று நிகழ்வொன்றின் முக்கிய தினத்தையே மாற்றிட முனைகின்றனர். இதுவும் ஒரு முரண்நகையே.

அறிவியலின் அடிப்படையே தேடல் ஆனால் யாழ்ப்பாண சமூகம் ஒரு தேடலற்ற சமூகமாக தேடுபவர்களை அவமதிக்கின்ற சமூகமாக மாறிவிட்டது. அறிவு என்பது பரீட்சையில் சித்தியடைவது என்ற நிலைக்கு யாழ்ப்பாணசமூகம் குறுகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொதுவான விடயங்களைத் தேடுவதுஇ அறிவதுஇ கற்பது வீண் விரயம் என்று பாடப்புத்தகங்களுக்குள்ளேயே தன்னை அடக்கியது. பாடப் புத்தகங்களும் வீண் விரயமாகி தற்போது துரித மீட்டல் புத்தகங்களும் வினாவிடைப் புத்தகங்களும் படித்து குறுக்கு வழியில் அறிவைப் பெற்றுவிடலாம் என்று விழுந்து விழுந்து படித்து இப்போது யாழ்ப்பாணத்தினது மட்டுமல்ல தமிழர்களின் கல்வி நிலையே வீழ்ந்து கிடக்கின்றது. ஆனாலும் அங்கு நூலகங்களின் அவசியம் இன்னமும் உணரப்படவில்லை.

யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31இல் எரியூட்டப்பட்டது என்பதை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நுலகவியலாளராக வாழ்நாள் நூலகவியலாளராக உள்ள என் செல்வராஜா மிகத் தெளிவாக வரலாற்று ஆவணங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ளார். இன்று அவருடைய ஆவணத் தொகுப்புகள் மட்டுமே யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் வரலாற்றை அழிந்து போகாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

2003இல் என் செல்வராஜாவினால் ‘றைஸிங் ப்ரொம் தி ஆஸஸ்’ என்ற ஆவணம் ஆங்கில மொழியில் 110 பக்கங்களுடன் தேசம் வெளியீடாக வெளிவந்தது. அதனை நான் (த ஜெயபாலன்) வடிவமைத்து இருந்தேன். தற்போது நூலகவியலாளர் என் செல்வராஜா மேலதிக தகவல்களைத் திரட்டி 200 வரையான பக்கங்களுடன் நூலக எரிப்பின் நாற்பதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். யாழ் நூலக எரிப்புப் பற்றி ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவாகும். என் செல்வராஜா யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய தமிழ் ஆவணத் தொகுப்பு ஒன்றையும் வெளயிட்டு உள்ளார்.

அரச பேரினவாதம் நூலகத்தையும் நூல்களையும் எரித்ததால் நாம் இன்றும் நூலகம் எரித்த நாளை நினைவுகூருகின்றோம். நூலகத்தின் பௌதீகக் கட்டமைப்பை அரசு எரித்து தீக்கிரையாக்கியது. ஆனால் நாம் நூலகச் சிந்தனையையே எமது அடியோடு அழித்துவிட்டோம். எத்தனை நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. எத்தனை பாடசாலைகளில் நூலகங்கள் இயங்குகின்றன. எத்தனை பேர் நூல்களை, பத்திரிகைகளை வாசிக்கின்றனர். அன்று அரச பேரினவாதம் நூலகத்தை எரித்திராவிட்டால் சிலசமயம் இன்று கறையான் அரித்திருக்கும். எரித்த நாளே எமக்கு தெரியாத போது அரித்தநாள் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.

கோவாக்‍ஸ் திட்டம் மூலம் வெனிசூலாவுக்‍கு 50 லட்சம் டோஸ்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ​ !

உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ​அளிக்‍கும் திட்டத்தின் கீழ் வெனிசூலாவுக்‍கு 50 லட்சம் டோஸ்கள் மருந்து கிடைக்‍கும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், அமெரிக்‍கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வெகுசில நாடுகளே கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துவருகின்றன. உலகம் முழுவதும் பாதிக்‍கப்பட்ட அனைவருக்‍கும் தடுப்பு மருந்து கிடைக்‍க வாய்ப்பு இல்லாத நிலையில், வசதியான நாடுகள் மட்டும் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதைத் தடுக்‍க கோவாக்‍ஸ் என்ற திட்டம் உருவாக்‍கப்பட்டது.

உலக சுகாதார அமைப்புடன் பல்வேறு நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்திவருகின்றன. இத்திட்டத்தின் படி, வசதியான நாடுகள் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை ஏழை நாடுகளுக்‍கும் பகிர்ந்தளிக்‍கும் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்‍கா மற்றம் தென்னமெரிக்‍க நாடுகளுக்‍கு இத்திட்டம் பயனளிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. இந்நிலையில், வெனிசூலா நாட்டுக்‍கு இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் டோஸ்கள் தடுப்பு மருந்து கிடைக்‍கும் என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்‍கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த முடியாத நிலையே நாடு முழுவதும் காணப்படும் நிலையில், கோவாக்‍ஸ் திட்டம் பொதுமக்‍களுக்‍கு மிகுந்த பயனளிக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

“சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து விவசாயிகளிடையே விநியோகிக்க அரசாங்கம் முயற்சி.” – ஜே.வி.பி எச்சரிக்கை !

“சீனாவிலிருந்து கரிம உரங்களை வழங்கும் போர்வையில், கொரோனாவின் பின்னால் மற்றொரு கடத்தல் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது.” என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று (30.05.2021) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து விவசாயிகளிடையே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரிம உரங்களைப் பயன்படுத்துவது குறித்து எந்த விவாதமும் இல்லை. இருப்பினும், விவசாயிகளுக்கு கரிம உரங்களை வழங்கும் திட்டத்துடன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை.

எந்தவொரு அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனமும் கரிம உரங்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. விவசாயி தனக்குத் தேவையான கரிம உரத்தை எங்கிருந்து பெறுகிறான்? நம் நாட்டில் கரிம உரங்கள் இல்லாவிட்டால், அதை இறக்குமதி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.

இந்த உரத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் எங்கே இறக்குமதி செய்யப் போகிறது..? சீனாவிலிருந்து ..! இதன் பொருள், நகராட்சி கழிவுகளை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய சீனா தயாராகி வருகிறது. அவை கரிம உரங்கள் அல்ல. யூரியா நகராட்சி கழிவுகளில் சேர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கு கரிம உரமாக அனுப்பப்படுகிறது.

கரிம உரங்களை வழங்கும் போர்வையில், கொரோனாவின் பின்னால் மற்றொரு கடத்தல் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது.

நமது சுற்றுச்சூழலுக்கும் மண்ணுக்கும் பொருந்தாத கரிம உரமாக யூரியா வேறொரு நாட்டில் கொட்டப்படும் நகராட்சி கழிவுகளில் கொட்டப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக அந்த குற்றத்தை செய்ய வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தை கோருகிறோம். இரசாயன உரங்களுக்கு அடுத்தபடியாக இது ஒரு பேரழிவு என்றார்.

கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திரா மாநில அரசு அனுமதி – குவியும் மக்கள் கூட்டம் !

இந்தியாவின் ஆந்திராவில் நாட்டு மருத்துவர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்‍கு வழங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசல் இல்லாமல் நாளை முதல் மருந்தை விநியோகிக்‍க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் என்ற இடத்தில், ஆனந்தையா என்ற நாட்டு மருத்துவர் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த மருந்து நல்ல பலன் தருவதாக அதனை எடுத்துக்‍கொண்ட மக்‍கள் தெரிவித்ததால், ஆயுர்வேத மருந்தை வாங்க ஏராளமான மக்‍கள் கிருஷ்ணபட்டினத்தில் குவிந்தனர். இருந்தபோதிலும், இந்த மருந்தால் பக்‍கவிளைவு ஏதேனும் உள்ளதா என கண்டறியும் வரை, மருந்தின் வினியோகத்திற்கு தடை விதிக்‍கப்பட்டது.

கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி..! - தமிழ்நாடு

மருந்து, ஆயுஷ் அமைச்சக சோதனைக்‍கும் பரிந்துரைக்‍கப்பட்டது. இந்நிலையில், ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்‍கு நாளை முதல் விநியோகிக்‍க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், கருப்பு பூஞ்சை நோய்க்‍கு, அவர் வழங்கிய கண் சொட்டு மருந்தை மட்டும் வேண்டாம் என்று தடை செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்‍கு ஆயுர்வேத மருந்து லேகியத்துடன், ஆங்கில மருந்தையும் சேர்த்து எடுத்துக்‍கொள்ள மக்‍களுக்‍கு ஆந்திர அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

“விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார் . கைல் ஜேமிசன் அதில் சிக்கவில்லை.” – டிம் சவுத்தி பாராட்டு !

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்திகதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இவ்வருட ஐ.பி.எல் போட்டிகளில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பெங்களூர் அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசியும் அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி தலைவர் கோலி டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், “நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன்.” என மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.

குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வு – ஒரு தம்பதி மூன்று குழந்தைகளை பெற்றுக்காள்ள முடியும் என சீனா அறிவிப்பு !

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பல ஆண்டுகளாக ஒரு குழந்தை திட்டம் அமுலில் இருந்தது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த கொள்கையில் கடந்த 2016ம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு, புதிய கொள்கை  அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்த நிலையில், சீன அரசு குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.  இதற்கான புதிய கொள்கை குறித்து சமீபத்தில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றம் நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் எனவும் தெரித்துள்ளது.
சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. 1950களுக்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை மிக மெதுவான விகிதத்தில் 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது என்பதை அந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதல் இருந்ததாகவும் தரவு காட்டுகிறது.

பசுமை இலங்கை ஜனாதிபதி செயலணியில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ !

பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷ தலைமையிலான இந்தச் செயலணியில், ஐந்து அமைச்சர்கள், ஆளுநர் ஒருவர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் உள்ளடங்குகின்றனர்.

மீள திறக்கப்படுகின்றது இலங்கையின் விமான நிலையங்கள் !

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட குறித்த தடை உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார்.

எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அது போலவே கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்க !

ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட தேசிய பட்டியல் ஆசனத்திற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய ​தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பரிணாமத்தில் கொரோனா வைரஸ் – வியட்னாமில் மக்கள் பீதி – வியட்னாமிலிருந்து இலங்கை வராதீர்கள் !

கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பத்ததாக  கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்ட இந்த வைரஸ் உருமாறி வருகிறது.

உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கது. இது காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி நகுயென் தன் லாங் கூறியதாவது:-

புதிய உருமாறிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது அதிக வீரியமிக்க வைரசாகும். இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும். இந்த வைரசின் தனித்தன்மை என்னவென்றால், இது காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். தொண்டை திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்பு அங்கு எத்தனை பேருக்கு உள்ளது என்பது குறித்து அவர் வாய்திறக்கவில்லை. அதே நேரத்தில் வியட்நாம் மத்திய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் நிறுவனம் இதையொட்டி கூறுகையில், “எங்கள் விஞ்ஞானிகள் 32 நோயாளிகளில் 4 பேரில் மரபணு மாற்றம் கொண்ட வைரஸ்களை மரபணு வரிசை முறை மூலம் கண்டறிந்துள்ளனர்” என கூறியது.

இதற்கு முன்பாக வியட்நாமில் 7 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வியட்நாம் சுகாதார அமைச்சகம் கூறியது.

இந்நிலையில் வியட்நாமுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற விமானப் பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் எவருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படமாட்டாது என அந்த மேலும் தெரிவித்துள்ளது.