“கொரோனாவைத் தடுப்பதற்காகவும், நிறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ விரும்பத்தக்கதோ அல்லது ஒரு தீர்வை கொடுக்கக் கூடியதாகவோ இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவு சம்மந்தமாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் இன்றைய தினம் வெளியிடுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் கவலைக்கிடமானதும், துரதிஸ்டவசமானதுமான நிலையில் இலங்கை மாறிக் கொண்டு வருகின்றது. கொரோனாவின் வேகம் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்கள் வரை இன்று பரவியிருக்கின்றது. இந்த நிலையில் என்றே கூறவேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பாவிக்கப்பட்டிருக்கும் போது இலங்கையில் கடந்த ஜனவரி 09ம் திகதிதான் முதலாவது தடுப்பூசியைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுகூட இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக ஆறு இலட்சம் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய கொவிட் சீல்ட் மருந்து வகைகள் பன்னிரண்டு இலட்சத்தினை வழங்கிருந்தார்கள். ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை இல்லாமல் முதலாவது தடுப்பூசியை ஒன்பது இலட்சம் பேருக்குக் கொடுத்ததன் காரணமாக இரண்டாவது தடுப்பூசி கொடுப்பதற்கு அரசாங்கம் திண்டாடியதையே பார்கக்கூடியதாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து திண்டாட்டத்தினைச் சமாளிப்பதற்காக தடுப்பூசி பாவிக்கப்படாத நாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக உரிய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றார்கள். அதற்கும் அப்பால் வேறு வகை தடுப்பூசிகளை வழங்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் சில மருத்துவ அதிகாரிகள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை இல்லாத தான்தோன்றித்தனமான நடவடிக்கையாகவே இருக்கின்றது.
அதற்கு மேலாக தற்போது நாட்டில் பல மாவட்டங்களைப் பொறுத்த மட்டில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் கொரோனாத் தொற்று என்பது கிராமங்கள் வரை சென்றிருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொற்று இனங்காணப்பட்டால் அந்தப் பிரதேசத்தின் அனைத்து மக்களையும் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கு குறைவாக இருக்கின்றது. பிசிஆர் இயந்திரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இருக்கின்றது. அதுவும் போதாமல் இருக்கிறது. ஆனாலும் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களும், வர்த்தகர்களும் முன்வந்து இதற்கான உதவிகளைச் செய்து வருவதற்கு மிகவும் பாராட்டத்தக்க விடயம். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எனற வகையில் நானும் மக்கள் சார்பில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருப்பினும் அரசும் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
ஆனால் அரசாங்கமானது தற்போயை சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது சம்மந்தமாகவும் மேலும் பல வாகனங்களை வேறு தேவைகளுக்காக இறக்குமதி செய்வது தொடர்பிலும் அமைச்சரவையூடாக முடிவெடுத்திருப்பதாகவும், அதன் பின் முடிவு வாபஸ் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போயை நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையானது அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கொவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகித்து அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. காவற்துறையினர் மற்றும் பொதுமக்கள் என ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றார்ககள்.
அதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஆடைத்தொழிற்சாலை என்பது எமது பிரதேசங்களுக்கு மிகத் தேவையானவை. அந்தந்த மாவட்டங்களிலே வாழும் பல ஏழைக் குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிசாலைகளை நம்பித்தான் வாழுகின்றார்கள். இருப்பினும் தொற்றாளர்கள் அதனூடாக வரும் போது மேலும் பல கிராமங்கள் தொற்றுள்ள கிராமங்களாக மாறக் கூடிய சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் ஆடைத்தொழிற்சாலை நிர்வாகமும், அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.