02

02

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது !

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் ஆட்சி நாற்காலியில் தி.மு.க – தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் திகதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.
இன்று (02.04.2021) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.
தமிழக தேர்தல் 2021: திமுக அணி 142 இடங்களில் முன்னிலை!
மதிய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, பெரும்பாண்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. தி.மு.க மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.
அதன்பின்னர் மேலும் சில தொகுதிகளில் அ.தி.மு.க பின்தங்கியது. தி.மு.க பெரும்பாண்மைக்கு தேவையான 118 இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்) தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின.
தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

“தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்கும்.” – மாவை சேனாதிராசா

“இந்திய நாட்டின் தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தி.மு.க வின் வெற்றி பற்றி அவர் மேலும் கூறும்போது,

நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்ட சபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி
பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான்.

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும்
பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கைத் தமிழினமும்,  தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்.

திராவிட இயக்கத் தலைவர் தமிழ் நாட்டு மக்கள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கொள்கை வழி நின்று எதிர்காலத்திலும் தலைவர்,  தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் வெற்றிக்கும் உழைத்திட
இலங்கைத் தமிழர் தரப்பில் அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வெற்றி பெறவைத்த மக்களுக்கும் எம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்

“இராணுவச்சோதனை சாவடிகளை கெடுபிடி என நோக்காது அதனை நமது நன்மைக்கானது என நோக்கவும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“இராணுவச்சோதனை சாவடிகள் எங்களுடைய வசதிக்கானதே. நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி நோக்கக்கூடாது.” என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா என்பது இலங்கையில் மாத்திரமல்ல எல்லா நாடுகளிலுமே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. சில நாடுகளில் பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம். ஆனால் இலங்கையை பொறுத்தவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருந்த போதும் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதே போன்று விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கூட கட்டுப்படுத்தி இருக்கின்றது.

வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட அவ்வாறு நடைபெறாமல் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனம் இல்லை. எமது நாடுமட்டுமல்லாது அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டினை முடக்கம் நிலைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளே மாத்திரமே அந்த அரசாங்கங்கள் முடக்கி வருகின்றது. அவ்வாறு நாட்டினை முடக்கும் சந்தர்ப்பத்தில் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும்.அதற்காகதான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை சுகாதார முறைகளில் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக வீதியிலே இருக்கின்ற இராணுவ சோதனை சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர்.மேலும் இராணுவச்சோதனை சாவடிகள் எங்களிற்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று அதனை நோக்கக்கூடாது. அவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அதனை சொல்லுவதற்கும் ஒருவர் தேவைதானே அதனைதான் அவர்கள் செய்து வருகின்றனர். ஆகவே சோதனை சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோடு சோதனை சாவடி நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை.

இதன்போது மாகணசபை தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டபோது ‘தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்திற்கு மாகாணசபை நடாத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்த போதும் அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரை தேர்தலை எந்தளவு விரைவாக நடாத்தலாமோ அந்தளவு விரைவாக நடாத்துவதுதான் நோக்கமும் கொள்கையுமாக இருக்கின்றது.அந்த வகையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனாவை ஒரு காரணமாக வைத்துக்கொள்ளலாம்.
கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் கொரோனா பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. இன்று இத்தொற்று நோய் அதிக பிரச்சனையாக உள்ளமையால் அதனை கருத்தில் எடுக்க வேண்டும். அதனை விட புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா தேர்தல் நடாத்துவதா என்ற முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்கள் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் அல்லது பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஏனென்றால் இது தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும். பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் அதற்கு காலம் போகாது. ஆனால் புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய காலம் எடுக்கும். சிலவேளைகளில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது மாத்திரமல்லாது சர்வஜன வாக்கெடுப்பிற்கும் போக வேண்டி வரும்.அதன் அடிப்படையில் அரசாங்கம் தமக்குள்ளேயும், எதிர் தரப்பினருடனும் கலந்துரையாடி வருகின்றனர். இந்த தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தி.மு.க 139 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 139 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 94 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 114 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

“கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயார்.” – சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை.” – பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர்

“இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை.சில நோயாளிகள் வீட்டிலேயே இறந்து விடுகின்றார்கள்.” என  பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைகளை பெவதிலுள்ள இடர்பாடு குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குபுறிப்பிடுகையில்,

ஆய்வகங்களின் திறன் மீறப்பட்டு வருகிறது, இது மிகவும் கடுமையான காலம் என்று அவர் எச்சரித்தார்.

இது வரை எடுக்கப்பட்ட சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளில் 15% நோய்த்தொற்றுக்கள் அடையாளம் காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை என்றும் நோயாளிகள் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வீட்டில் தங்குவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அம்பியூலன்ஸ்கள் இல்லாததால் சில நோயாளிகள் வீட்டிலேயே இறந்து விடுகின்றார்கள் என்றும், நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த நாடு உடனடியாக பூட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

15.26 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு – 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

“தமிழர் பிரதேசங்களை பௌத்த மயப்படுத்த முற்பட்டால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அவ்விடம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

DSCN0558குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் மற்றும் சூழமைவுகள் தொடர்பில் இவர்கள் பார்த்து பரிசீலித்தனர். இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது, அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாது, அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்ற அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அவரவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

DSCN0512

““தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆபத்தானது.” – இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.  ஆகவே  இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று இணையவழியூடாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போததே அவர்  இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற காலத்தில் இருந்து மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. இம்முறை மே தின கூட்டத்தை  வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தோம். புத்தாண்டு கொவிட் கொத்தணியின் காரணமாக   உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்றினைத்து கூட்டங்களை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஒரு நாடு – ஒரு சட்டம், அனைவருக்கும் சமவுரிமை என்ற இலக்கிற்கு  அமைய இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் பொது சட்டத்தை பின்பற்ற வேண்டும். பொது சட்டத்திற்கு புறம்பாக ஒரு தரப்பினர் செயற்படும் போது முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

தமிழ் பிரிவினைவாதம் நாட்டின் அரசியலமைபப்பிற்கு முரணாக செயற்பட்டதால்  பாரிய விளைவுகள் நாட்டில் தோற்றம் பெற்றது.  30 வருட கால யுத்தம் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை  நாட்டிலிருந்து இல்லாதொழித்தார்.

தமிழ் பிரிவினைவாதத்தை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இதன் விளைவை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின்ஊடாக விளங்கிக் கொள்ள முடிந்தது.  இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு இதற்காகவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை  தோற்றுவித்துள்ளார்கள்.

அரசியல் நோக்கங்களினால் முடக்கப்பட்டிருந்த தொழிலாளர் உரிமைகளை  பாதுகாத்துள்ளோம்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்க்கத்தினர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று பல்வேறு சவால்கள்  நேரடியாகவும், மறைமுகமாகவும்   தோற்றம் பெற்றுள்ளன. சவால்களை வெற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.