September

September

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள 3 ஏரிகள் கண்டுபிடிப்பு !

மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பது சாத்தியமற்றது. ஆனால் தரைக்கு கீழே நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில்  இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான மாஸ்எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வு களத்தின் ரேடாரில் உள்ள தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலப்பரப்புக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடி யில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன 3 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆய்வின்போது கண்டறியப்பட்ட 4-வது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாது. எனவே இந்த கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா? என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் உப்புதன்மை வாய்ந்தவையே என்று கருதப்படுவதால் அதில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார் !

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக  உள்ளவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் ( வயது 91) .   தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23-ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவருக்கு பதிலாக, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83), தற்காலிக மன்னர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் இன்று காலமானார். மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எண்ணெய் வளம்மிக்க நாடான குவைத், அமெரிக்காவுடனும், இங்கிலாந்துடனும் நெருங்கிய நட்பு பாராட்டியதற்கு வழிவகுத்தவர் அமீர் ஷேக் சபா. அரபு நாடுகளில் முக்கிய நாடாக குவைத் மாறியதற்கு அமீர் ஷேக் சபாவின் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்காற்றியது எனக்கூறப்படுகிறது. அமீர் ஷேக் சபாவின் ஆட்சிக் காலத்தில் குவைத் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவுக்கு இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவு தொடர்பான இரங்கல் பதிவை  தனது ருவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

குறித்த இரங்கல் பதிவில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

2020 மேலுமொரு சோகம் !- “மறைந்தது பாடும் நிலா “ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் !

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இந்நிலையில், சற்று முன் SPB உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார்.

பாடகர் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தகவல் – news7 India

வீணானது பாப் டு பிளிஸ்சிஸியின் போராட்டம். – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது ராஜஸ்தான் !

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு  4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்தகுதியுடன் இல்லாததால் முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை  அணித்தலைவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜெய்ஸ்வால் 06 ஓட்டங்களுடன் தீபக் சாஹரின்  பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து  சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித்துடன் கைகோர்த்தார்.

இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2  சிக்சர்கள் அடித்த அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

அணியின் ஓட்டம் 132 ஆக உயர்ந்த போது சஞ்சு சாம்சன் 74 ஓட்டங்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டேவிட் மில்லர் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். 19-வது பந்துப்பறிமாற்றத்தின் போது ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களில் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு

20பந்துப்பறிமாற்ற முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்ளுடனும் (8 பந்து, 4 சிக்சர்), டாம் கர்ரன் ஓட்டங்ளுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளும், தீபக் சாஹர், நிகிடி, பியுஷ் சாவ்லா தலா ஒரு இலக்குமாக கைப்பற்றினர்.

அடுத்து 217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ஓட்டங்களிலும்(21 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), முரளிவிஜய் 21 ஓட்டங்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர்.

ஐபிஎல் கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
இமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ஓட்டங்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) அவரும் ஆட்டமிழந்தார்.

அதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

இத்தாலி ஓபின் டென்னிஸில் மகுடம் சூடினர் நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹாலெப் !

இத்தாலி ஓபின் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார்.

இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை

இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.

வீணானது பேர்ஸ்டோவின் அரைச்சதம் – வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது பெங்களூர்!

ஐ.பி.எல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில்  வென்ற சன்ரைசர்ஸ் அணி தலைவர் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார்.
36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 பந்துப்பறிமாற்ற முடிவில் 5 இலக்கு இழப்பிற்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்சிபி
இதனால் 164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர் 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
அந்த ஜோடி ஐதராபாத் அணியின் ஓட்டத்தை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்துவெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 இலக்குகளை இழந்து ஐதராபாத் திணறியது.  இறுதியில் ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து இலக்குகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .
பெங்களூர் அணி தரப்பில் சாஹல் 4 பந்துப்பறிமாற்றங்களில் 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார். சிவம் துபேயும் 3 பந்துப்பறிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.
நவ்தீப் சைனியும் 4 பந்துப்பறிமாற்றங்களில் 25 ஓட்டங்கள் கொடுத்து 2 இலக்குகளைவீழ்த்தினார்.

மும்பையை பழிதீர்த்து வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது டோனியின் சென்னைசுப்பர்கிங்ஸ்!

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றையதினம்  தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 பந்துப்பநிமாற்ற முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ஓட்டங்களும், டி காக் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
சென்னை அணி சார்பில் எங்கிடி 3 விக்கெட்டும், தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்கத்திலேயே விஜய் 1ஓட்டங்களும், வாட்சன் 4 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.

”நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிந்தால் கொரோனா தொற்று இல்லை” – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு வைத்தியசாலையின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

அதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-

ஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ஒரு தடையாக அமைந்திருக்கிறது.

இது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பால் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு !

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய ஆறு மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது.

பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன.

தடைப்பட்ட கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல் விட்டு விடலாம்: 'பிபா' |  Makkal Osai - மக்கள் ஓசைமேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களத்தின் தொடரும் பௌத்தமயமாக்கலும் – வெடுக்குநாறிமலை தமிழர் பல தலைமுறை வழிபாட்டுக்கான தடையும் !

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இக்கோவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு-பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - Nallurlk

300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை வித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து, இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீண்டகாலமாக வழிபடப்பட்டுவருகின்ற எமது  வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 17ம்திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த நிலையில் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்துவதற்காக கடும் பிரயத்தனங்களை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி அவசர அவசரமாக தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்துள்ளனர். இரண்டு பக்கங்கள் நிரம்பிய அந்தக்கடிதம்  முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும் அது தொல்லியலுக்குறிய இடம் என்றும் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது.எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பட்டிப்பதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பட்டு இருப்பதாக வழக்கு தொடர்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் திணைக்களம் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் ஆலய உற்சவத்தினை நிறுத்துமாறு நாளையதினம் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலய நிர்வாகத்தினரை  நீதிமன்றம் வருகைதருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மொழிசார்ந்த நம்முடைய அடையாளங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ ..?அதை விட முக்கியமானது நம்முடைய கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது. அதற்கானவையே இந்த திருவிழாக்களும் பண்பாடு சார் நிகழ்வுகளும்.
வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் - Tamilwin
அண்மையில் கிழக்கு தொல்லியல் செயலணியில் உள்ள ஒரு பிக்கு ஒருவர் திருக்கோணேஸ்வர ஆலயம் ஒரு விகாரை என குறிப்பிட்டு அதற்கு பௌத்த மயமாக்கல் ரீதியான விளக்கம் ஒன்றை வழங்கியிருந்தார். இது போன்றதான ஒரு நிலையே வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கும் ஏற்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகளை பொலிஸார் தடுப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்றதான ஒரு கெடுபிடிக்குள்ளேயே இங்கு வழிபாடுகளெ் மேற்கொள்ளப்பட்டன.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது ஒரு மலைக்கோவில் இதனாலென்ன வந்து விடப்போகின்றது எனத்தோன்றும் உண்மை நிலை அவ்வாறானது இல்லை. எங்களுடைய கண்ணுக்குத் தெரியாமல் படிப்படியாக தமிழர்களுடைய வழிபாட்டு தலங்கள் பௌத்தமயமாக்கப்பட்டவண்ணமுள்ளன. அண்மையில் கூட முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளளையார் கோவிலில் கூட இது போன்றதான ஒரு பிரச்சினை அரங்கேறி இறுதியில் பௌத்தபிக்கு ஒருவருடைய உடல் அப்பகுதியில் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி தகனம் செய்யப்பட்டிருந்தது. அதனுடைய இன்னுமொரு பகுதியாகவே வெடுக்குநாறி மலையை பௌத்தமயபடுத்தும் முயற்சியை தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடுகள் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழும் பல தலைமுறையினரால் வழிபடப்பட்டு வருகின்ற நிலையில் அதனை தடுப்பது அல்லது மக்களை அங்கு சென்று வழிபாடியற்ற தடை செய்வது எவ்வளவு வக்கிரமான ஒரு மனோநிலை. ருவன்வெலிசாய 2000 வருட பழமையான ஒரு விகாரை . அங்கு இப்போதும் வழிபாடுகள் அதே புனிதத்தன்மையுடன் இடம்பெறுகின்றன. அதே போன்றதான ஒரு வழிபாட்டு மையமே வெடுக்குநாறி மலையும் அதற்கு மட்டும் ஏன் இத்தனை
கட்டுப்பாடுகள் ..? தொல்லியல்திணைக்களம் என்பது ஒரு நாட்டினுடைய எல்லா பிரஜைகளுக்குமானதாக இருக்க வேண்மே தவிர ஒரு தரப்பினருடைய வரலாற்றை அழித்து இன்னொரு தரப்பினருடைய வரலாற்றை பதிய வைப்பதாக இருக்க கூடாது. இத்தனைக்கும் வெடுக்குநாரிமலை ஆலயபகுதி தொல்லியல் பகுதி என்பதற்கான எந்த வர்த்தமானி அறிவிப்புமே வெளியாகியிராத சூழலில் இந்த செயல் எத்தனை அபத்தமானது.
ஊடகங்களும் பெரிதாக இது பற்றி அலட்டிக்கொள்வதில்லை. நகர்ப்புறங்களில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கும் சொந்த அரசியலுக்காகவும் அதிக பக்கங்களையும் நேரத்தையும் ஒதுக்கும் ஊடகங்கள் கிராமப்புறம்தானே என வெடுக்குநாரியை ஒதுக்கிவிட்டனர் போலும். பாராளுமன்ற அமர்வுகளில் தேவைக்கில்லாத விடயங்களை பற்றி அலட்டிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளுடைய பார்வை கூட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மேல் பட்டதில்லை.
வெடுக்குநாறி தனிப்பட்டு அப்பகுதி மக்களுடைய பிரச்சினை மட்டுமேயில்லை. வெடுக்குநாரி தொல்லியல்துறையினரிடம் பறிபோகுமாயின் அழியப்போவது ஆலய சூழல் மட்டுமல்ல. எம்முடைய 2000 ஆண்டுகால வரலாற்று நிலைப்பும் தான். ஊடகங்களுடைய பார்வையும் அரசியல் தலைவர்களுடைய பார்வையும் படாத இடமாகவும் ஒதுக்குப்புறமாக நம்மால் கவனிப்பாரற்றும் வெடுக்குநாறி கிடப்பதால் தான் இலகுவாக அதனை கையகப்படுத்த தொல்லியல்துறை முயற்சிக்கின்றது.
தமிழ் ஊடகங்கள் விரைந்து இந்த செய்தியை எல்லா தரப்பினருக்கும் கொண்டு செல்ல முயற்சிப்பதுடன் வெடுக்குநாறி வரலாற்றை ஆவணப்படுத்தவும் முன்வரவேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் அரநியல்தலைமைகளும் அதிக கவனம் செலுத்தி விரைந்து இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பல வெடுக்குநாரிமலைகளை தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து பாதுகாக்க முடியும்.