05

05

வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் மனைவி இன்று காலமானார்!

குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை காலமானார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.

குட்டிமணியை தேடி வீட்டிற்கு சென்ற ஆமி, பொலிஸ்இ இரகசியப் பொலிசாரினாலும் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். 1972 ல் குட்டிமணி தேடப்பட்ட காலம் முதல், இரு (ஆண், பெண்) பிள்ளைகளையும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கியுள்ளார். அவரும் தமிழினத்திற்காக குட்டிமணி போராடிய காலங்களில் பலவகையிலும் தனது கணவருக்கு ஒத்தாசையாக இருந்து விடுதலைக்கு உதவியுள்ளார்.

ரெலோ தளபதி குட்டிமணி: பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ரெலோ போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். அவரோடு ஸ்தாபக தலைவர் தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானதுஇ தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுஇ நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய  கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். (Source: telo.org)

முன்னணியின் நீண்ட இழுபறிக்கு வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மணிவண்ணன் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் என விளித்து செய்திகளை பிரசுரிக்காதீர்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினயமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன் , கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டார். அதனால் அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாம் கடிதம் மூலம் இதுகுறித்து அறிவித்தோம். அதற்கு அவர் எழுத்து மூலமாக பதில் அனுப்பி இருந்தார்.

அதனை மத்திய குழுவில் ஆராய்ந்து அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் கருத்தில் கொண்டு அவரை நாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளோம். அது தொடர்பில் அவருக்கு அறிவித்துள்ளோம்.

இரண்டு கிழமைக்குள் அவர் பதில் அனுப்ப வேண்டும். உறுப்புரிமையை நீக்கப்பட்டதற்கு நிரந்தமாராக நீக்காது இருக்க அவர் பதில் அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் இரண்டு கிழமைக்குள் பொது குழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்படும். அந்த விசாரணையின் பின்னர் கட்சியின் உறுப்புரிமையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா ? இல்லையா ? என தீர்மானிப்போம்.

இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு அறியத்தருவது யாதெனில், இன்று முதல் கட்சியின் செயற்பாட்டில் மணிவண்ணன் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது.

அவருக்கு கட்சியின் பெயர் அல்லது சின்னத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அவர் கட்சியின் பெயரில் செயற்பட்டால் அது கட்சி ரீதியானது அல்ல. அது கட்சியை மீறியது என அறிய தருகின்றோம்.

ஒழுக்காற்று விசாரணைகள் முடிந்த பின்னர் மேலதிக தகவல்களை அறிவிப்போம். உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதனை மக்களுக்கும் , எமது ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கின்றோம்.

மணிவண்ணனின் கருத்துக்களோ செயற்பாடுகளோ கட்சியின் செயற்பாடாக இனிவரும் காலங்களில் அமையாது.

மணிவண்ணன் தொடர்பில் நாம் இவ்வளவு காலமும் அமைதி காத்தமையினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் பத்து  வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது” – ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை இன்னும் பத்து  வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது” என  ஐக்கிய தேசியக்கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஜோன் அமரதுங்க மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களினால் மக்கள் தற்போது ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆகவே எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே தொடர்ந்து நிலவும்.

இதேவேளை இதற்கு முன்னர் ஆட்சிசெய்த நல்லாட்சி அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இத்தகைய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்காது.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு ஒரு வேலையேனும் வழங்கத் தவறிவிட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயார் ! – டொனால்ட் ட்ரம்ப்

ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டு வரும் அமெரிக்கா அடுத்து தன்னுடைய பார்வையை இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை நோக்கி திருப்பியுள்ளது. சீனாவுடன் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தமை முதல் தன்னுடைய வெறுப்பை சீனா மீது காட்டி வரும் அமெரிக்கா இந்த பிரச்சினையிலும் இடைத்தரகராக தலையிட ஆரம்பித்துள்ளது.

எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன இராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது.

இதனால் இந்திய – சீனா  ஆகிய  நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.

இந்நிலையிலேயே இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.

சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். ஆகவே, சீனா- இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம்.

இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார்“ – புபுது ஜாகொட

2015 ஆம் ஆண்டில் மக்கள் சிங்கத்தை எதிர்பார்த்தனர். நல்லாட்சி அரசாங்கம் சிங்கத்திற்கு பதிலாக எருமை கன்றை வழங்கியது. அந்த எருமை கன்றையும் தற்போதைய அரசாங்கம் பறித்துக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (2020.0.04) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இடமளிக்காது 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றும் அதிகாரம் இந்த திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பயங்கரமான அதிகாரங்கள்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சட்டம் இருந்தது. அதனையும் நீக்கியுள்ளனர்.

ஜே.ஆர். செய்ததை விட மேலதிகமாக ஒன்றை செய்ய முயற்சிப்பதிலேயே பிரச்சினை இருக்கின்றது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான போட்டியில் அண்ணனை எப்படி மண்டியிட்டு வைக்க முடியும் என்றே தம்பி எண்ணுகிறார் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

”சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை, இதுதொடர்பில் மீள் பரிசீலினை செய்ய வேண்டும்” – அமெரிக்கத் தூதரகம் அறிக்கை.

கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே சீனா அரசின் மீது அமெரிக்காவும் அதன்  சார்பு நாடுகள் அனைத்தும் தம்முடைய எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் இது பனிப்போராக உருமாறியுள்ளது.

இந்நியைில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை  ஏற்படுத்தியதால் அமரிக்காவின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் – நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் இலங்கை, இதுதொடர்பில் மீள் பரிசீலினை செய்ய வேண்டுமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

குறித்த நிறுவனத்தினாலேயே கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில்  முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், சுற்றாடல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறான முறைகேடுகள் மற்றும் இறையாண்மை மீறலில் இருந்து நாடுகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும்  அமெரிக்காதூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது இங்லாந்து ! – ஆஸிக்கு அதிர்ச்சி தோல்வி.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி.20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. கடைசி பந்து வரை இந்தப் போட்டி சுவாரஸ்யமான  போட்டியாக அமைந்தது.

163 ஓட்டங்கள் என  இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 124/1 என்று 14 பந்துப்பறிமாற்றங்களில் எளிதான வெற்றி நிலையில் இருந்தது. கடைசியில் 160/6 எனினும் முடிவு இங்லாந்து வசமானது தான் சோகம்.

14வது பந்துப்பறிமாற்றம் வரை சிறப்பாக ஆடி வந்த ஆஸி அதனை தொடர்ந்து 14 பந்துகளில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. இதனையடுத்து கடைசி 3 பந்துப்பறிமாற்றங்ளில் 26 ஓட்டங்கள்கள் தேவைப்பட்டது,  டி20-யில் இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால் விக்கெட்டுகள் போய்க்கொண்டே இருந்தால் கடினம்தான். கடைசி 2 பந்துப்பறிமாற்றங்களில் 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 19வது பந்துப்பறிமாற்றத்தில்  4 ரன்களே ஆஸிக்கு கிடைத்தது, கடைசி பந்துப்பறிமாற்றத்தில் 15 ஓட்டங்கள்  தேவைப்பட்டது. டாம் கரன் அந்த ஓவரை வீசினார்.

இதில் 2வது பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கவர் திசையில் ஒரு பெரிய சிக்சரை அடித்து வெற்றியை நெருக்கினார், 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஆனால் இன்னொரு பவுண்டரி அடிக்க முடியவில்லை. 2 ரன்கள் குறைவாக முடிந்தது.

163 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஏரோன் பிஞ்ச் (46), வார்னர்  (58) ஆகியோர் மூலம் 98 ஓட்டங்கள் பெற்று  அதிரடி தொடக்கம் கண்டது. வார்னர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ஓட்டங்களையும்  சேர்க்க முதலில் பிஞ்ச், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆர்ச்சரிடம் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித்  ஒரே பந்துப்பறிமாற்றத்தில்  ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸுடன் 11 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்  ரஷீத் பந்தில் பிடிகொடுத்து  ஆட்டமிழந்து சரிவைத் தொடங்கி வைத்தார். அதே ஓவரில் ரஷீத் 1 ஓட்டத்துடன்  கிளென் மேக்ஸ்வெலை வீழ்த்தினார்.

அடுத்ததாக வார்னர் 58 ஓட்டங்களில் ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். . அலெக்ஸ் கேரியை 1 ஓட்டத்துடனும் ஆஷ்டன் ஆகர் 4 ஓட்டத்துடனும்  முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்தனர். 19 பந்துப்பறிமாற்ற முடிவில் 148/6 என்ற நிலையில் கடைசி பந்துப்பறிமாற்றத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்சரைத்தவிர பவுண்டரி அடிக்க முடியவில்லை 2 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா தோற்ற போது ஸ்டாய்னிஸ் 23 ஓட்டங்கடன் ஆட்டமிழக்காது இருந்தார். , வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா, ஆனால் மோர்கனின் தலைமைத்துவம் அருமையாக இருந்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 162/7 என்று முடிந்தது, டேவிட்மலான்  66 ஓட்டங்களையும் பட்லர்  44 ஓட்டங்களையும் எடுத்தனர். ஜோர்டான் (14) நீங்கலாக மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கமே எட்டவில்லை, கேன் ரிசர்ட்ஸன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.ஆட்ட நாயகனாக டேவிட் மலான்  தேர்வு செய்யப்பட்டார்.

2016க்குப் பிறகு இங்கிலாந்து வெற்றிகரமாக 180 ஓட்டங்களுக்கும் குறைவான இலக்கை தடுத்துள்ளது. ஞாயிறன்று நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரைக் கைப்பற்றும்.

 

”இந்தியா சிறந்த தலைவரையும், சிறந்த மனிதரையும் கொண்டுள்ளது. எங்களுக்கு இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் “ – ட்ரம்ப் பாராட்டு.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து வாஷிங்டனில் பத்திரிகையாளர்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் பேசும்போது, “ பிரதமர் நரேந்திரமோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார். அவர் செய்வது சுலபம் அல்ல. ஆனால் அதனை அவர் செய்து வருகிறார். இந்தியா சிறந்த தலைவரையும், சிறந்த மனிதரையும் கொண்டுள்ளது. எங்களுக்கு இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்துட் ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில், நாம் ஆயுட்காலத்தில் சந்தித்திராத பேரழிவான துரோகங்களுக்குரியவர் என்பது பிடனின் வரலாறு. வரலாற்றில் தவறான பக்கத்தில் அவர் காலம் முழுதும் இருந்து வருகிறார் என்று ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதேவேளை ஜோ பிடனோ, அமெரிக்காவின் பொருளாதாரத்தை ட்ரம்ப்  சரித்துவிட்டார்.  கொரோனா வைரஸை அவர் சரியாக கையாளவில்லை என்றும் பிடன் ட்ரம்பை  விமர்சித்து வருகிறார்.

அண்மையில் அமெரிக்காவில் நிறவெறி தொடர்பான பிரச்சினை வலுவடைந்திருந்த நிலையில் அமெரிக்க வெளிநாட்டவர்களுடைய வாக்குகள் யாருக்கு கிடைக்கவுள்ளன என்ற போட்டியும் பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஜனநாயகக்கட்சி சார்பாக பிடன் ஜனாதிபதி வேட்பாளாரகவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆபிரிக்க – இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும் போட்டியிடுவதால் அமெரிக்கா வாழ் வெளிநாட்டவர்களுடைய வாக்குகள் யாருக்கு விழப்போகின்றன என்பதே பெரிய போட்டியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாகவே ட்ரம்பின் மோடி மீதான வாழ்த்து பார்க்கப்படுகின்றது.

வெனிசுலாவில் இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோவை கொலைசெய்ய ட்ரம்ப் முயற்சி ? – 15 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை நிர்ணயம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டிருப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் கொண்ட தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இடதுசாரி தலைவரான நிக்கோலஸ் மதுரோ ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டுக்கு எதிரான மிகக்கடுமையான பொருளாதார நடவடிக்கையால் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் இருந்து வருகிறது.

இதற்கெல்லாம் அமெரிக்காவே காரணம் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தன்னை கொலை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தற்போது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதற்காக கூலிப்படையை தேடிக்கொண்டிருப்பதாகவும், தனது தலைக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அமெரிக்க அரசு நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 03.09.2020 மதுரோவின் இந்த புகார் சர்வதேச அரங்கில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது” – உலக சுகாதார அமைப்பு.

சீனாவும், ரஷ்யாவும் தங்களது கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும், ஐ.நா. அங்கீகரிக்காது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், தடுப்பூசிகளுக்கு எதிராக போராடுபவர்களின் கருத்துகளைக் கேட்டு மக்கள் குழப்பமடையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தடுப்பூசிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பெரியம்மை மற்றும் போலியோவை கட்டுப்படுத்தியதில், தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் தெரிவித்தார். முழுவதும் பாதுகாப்பானது என உறுதியாகும் வரை எந்த ஒரு தடுப்பூசியையும் அங்கீகரிக்க மாட்டோமெனவும் டெட்ரோஸ் அதனோம் உறுதியளித்தார்.

விரிவான ஆய்வுகளுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் சீனா தங்களது தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரிட்டனும் கொரோனா தடுப்பூசியை முன்னரே பயன்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.