09

09

குறைந்த வருமானம் உடைய 92 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க யுனிசெப் தீர்மானம் !

கொரோனா தடுப்பூசி அனைவக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத்தை முன்னிலை எடுத்து செய்வதாக, யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசிகளை வாங்கும் அமைப்பு யுனிசெஃப் ஆகும். ஆண்டுதோறும் தட்டம்மை, போலியோ உள்ளிட்ட நோய்களின் தடுப்பூசியை, 200 கோடிக்கும் அதிகமாக வாங்கி, யுனிசெஃப் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கிறது.

தற்போது Pan American Health Organization என்னும் அமெரிக்க சுகாதார அமைப்புடன் இணைந்து, குறைந்த வருமானம் உடைய 92 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கவுள்ளதாக, யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் யுனிசெஃப் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு 2021ற்காக டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை !

இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் சுமூகமான உறவை வைத்துக் கொள்வது, இதற்கு மாறாக வெஸ்ட் பேங்குடனான உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் தீர்மானம் டிரம்ப் கொண்டு வந்து இருந்தார்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உறவை இயல்பாக்கும் வகையில் மத்திய கிழக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
இந்நிலையில்,  2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம்  நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வருகிறார் யுவராஜ்!

பீல்டிங், பேட்டிங்,  பவுலிங் என மூன்று துறைகளிலும் அசத்தியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராகவும் இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு மற்றும் சகலதுறை வீரராகவுமு்  திகழ்ந்தவர் யுவராஜ் சிங்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பி.சி.சி.ஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் இணைந்து தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.

பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து வீரர் தாவித் மலன்!

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 இங்கிலாந்து தொடரை வென்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதன்மூலம் டி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான  தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ஓட்டங்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.

பசுவதை தொடர்பில் பிரதமரின் கருத்துக்கு வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராட்டு !

இறைச்சிக்காக பசுவை கொல்வதை தடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்த முடிவை நாங்கள் ஆதரிக்கின்றோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை)  நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த இறைச்சியை உண்பவர்களுக்கு   மாற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும். பசுவதை தொடர்பில் உலகத்தில் அதிகமான எதிர்ப்புக்கள் உள்ள நிலையில் பிரதமரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வரலாறு தொடர்பில் ஆராய்வதற்காக வரலாற்று ஆய்வாளர்களை கொண்ட ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் ” – பாராளுமன்றில் விக்ஸே்வரன்.

அண்மையில் திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள திரியாய் என்ற இடத்தில் கிழக்கு மாகாணத் தொல்பொருள் செயலணியைச் சேர்ந்த பிக்கு ஒருவர் 1000 ஏக்கர் காணிகளில் இதுவரை காலமும் பயிர் செய்து வந்த விவசாயிகளை குறித்த காணிக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று பயமுறுத்தியமையை பாராளுமன்றத்தில் விமர்சனம் செய்துள்ளார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

பாராளுமன்றத்தில் இன்று (09.09.2020) நடைபெற்ற இடைக்கால கணக்கு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா?.

திரியாயில் தமிழ் மக்கள் விவசாயம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட இடங்களில் இருப்பதாக கூறப்படும் தொல்பொருள் ஆராய்விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை. அதனால் தான் வரலாறு தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு வரலாற்று ஆய்வாளர்களை கொண்ட ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களென்றால் அவற்றைப் பாதுகாக்கும் கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து வரவேண்டுமேயொழிய சிங்களவரை மட்டும் உள்ளடக்கிய செயலணியில் இருந்து வரக்கூடாது. ஆகவே தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் வேற்றுநாட்டு தென்னாசிய வரலாற்று வல்லுநர்களைச் சேர்த்து ஆணைக்குழுவொன்றை கூட்டி சிங்கள மொழி பேசுவோர் பற்றிய முழுவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியுள்ளேன். பௌத்தர்கள் என்றவுடன் அவர்கள் சிங்களவர்களே என்று எண்ணுவது மடமை.

உள்ளூர் பொருளாதாரத்தை தீர்வைகள் ஊடாக பகுதியாக மேம்படுத்தும் பொருளாதாரக் கொள்கையுடையதாக இந்த அரசாங்கம் இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இதனை நான் வரவேற்கின்றேன். எமது கட்சியாகிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அரசியலில் தன்னாட்சி, பொருளாதாரத்தில் தன்நிறைவு தனி மனித மற்றும் சமூக ரீதியில் தற்சார்பு என்ற குறிக்கோள்களை கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் பொருளாதார துறையில் தன்னிறைவு நோக்கி நாங்கள் பயணிப்பது இன்று அதிமுக்கியமாயுள்ளது. எமது சர்வதேச கடன்கள் கட்டு மீறி உயர்ந்துள்ள நிலையில் தன்நிறைவு நோக்கி நாம் நகர்வது அவசியமாகியுள்ளது. எமது வெளிநாட்டு செலாவணிகளைச் சேமிக்க வேண்டியுள்ளது. இது பற்றிய பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

நான் முதலமைச்சராக இருந்த போது உலக வங்கி நிபுணர் ஒருவர் என்னைச் சந்தித்தார். நெற்செய்கையின் போது எமது விவசாயிகள் தமது செலவுகளை ஈடு செய்ய முடியாத வருமானத்தையே பெற்று வருவதாக அவர் கண்டிருந்தார். ஆகவேதான் நாங்கள் தொடர்ந்தும் நெற் செய்கையில் ஈடுபடுவது எமக்கு பலனை அளிக்காது என்று கூறி தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்க வேண்டும் என்று கூறினார். அவரின் சிந்தனை உலகளாவிய ரீதியில் சென்றதில் வியப்பில்லை! எமது நெற்காணிகளை இனிமேல் சிறு பயிர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். எமது மக்கள் சிவத்த அரிசியையே விரும்புகின்றார்கள் என்றும் வெள்ளை அரிசியை அவர்கள் பாவிக்க மாட்டார்கள் என்றும் கூறி, செலவு எவ்வாறெனினும் எமது அடிப்படை உணவான அரிசிக்கான நெல்லை தொடர்ந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தேன்.

அத்துடன் நவீன முறைகளை நெல் உற்பத்தியில் நாங்கள் பாவிக்க வேண்டும் என்றும் எந்தவித அவசர தேவைகளுக்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் கூறினேன். தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து அரிசி கிடைப்பது போர் போன்ற சில காரணங்களின் நிமித்தம் தாமதமானால் எமது மக்கள் பட்டினியில் இருக்க முடியாது என்றேன். அதற்கு அவர் நெல்தான் வேண்டியவாறு வேறு நாடுகளிலும் கிடைக்கின்றதே என்றார். போர்க் கால விபரீதங்கள் எம்மால் கணிக்க முடியாதவை என்று கூறினேன்.

கோவிட் – 19 நோய்ப் பரவல் எமது உணவு சம்பந்தமாக நாம் தன்னிறைவு அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. தன்னிறைவு மட்டுமல்ல அதற்கு அப்பாலுஞ் சென்று ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு நெல் விவசாயம் அமைய வேண்டும் என்பதே எமது கருத்து. அத்துடன் எமது உற்பத்திக்கு பெறுமதி சேர்த்து எவ்வாறு ஏற்றுமதி செய்யலாம் என்பது பற்றியும் ஆராய வேண்டும். இதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்குப் போதிய அனுசரணைகளை வழங்கி நெல் உற்பத்தியை வலுவடையச் செய்ய வேண்டும். பெறுமதி சேர்ப்பது பற்றி அறிவுரை வழங்க வேண்டும். ஏற்றுமதி செய்யவும் அரசாங்கம் உதவி புரிய வேண்டும்.

தன்னிறைவு நோக்கி நகர்வதாவது போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும். பலவிதமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கும் ஒரு நாடு தன்னிறைவை நோக்கி நடப்பதே நன்மை பயக்கும்.

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பது எமது மக்களிடையே தொழில்களை ஊக்குவிக்க உதவும். போரினால் பாதிக்கப்பட்ட எமது இடங்களில் வேலையில்லாதவர்களின் தொகை 10 சதவிகிதங்களுக்கு அதிகமாக உள்ளது. நாட்டின் விகிதம் சராசரி 6 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வேலையில்லாத நிலைமையினைக் குறைக்க உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

போதிய திட்டமிடலுக்குப் பின்னரான உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகள் வேலையில்லாத நிலைமையை வெகுவாகக் குறைக்கும். அத்துடன் அபிவிருத்திக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவர் எனினும் வேலையொன்றைப் பெற நாங்கள் பாடுபட வேண்டும். இதன் பொருட்டு வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பல குடும்பங்கள் பயன் பெற்று வாழ்வார்கள் எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கிற்கு அதிகாரம் தேவை என கேட்பதை போல மீனவர் அத்துமீறல் தொடர்பாகவும் இந்தியாவிடமே கேளுங்கள் ” – சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு நாணயக்கார பதில்!

வடக்கிற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09.09.2020) உற்பத்தி வரி (சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாத்தில் உரையாற்றிய சார்ல்ஸ் நிர்மலநாதன் வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார்.

வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார்.

எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் என கடும் தொனியில் கூறியுள்ளார்.

இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் “நீங்கள் எமது மக்களுக்கு தரவேண்டியதை தராது போனால் நாம் அவர்களிடம் தானே கேட்டாக வேண்டும்” என பதில் வழங்கினார்.

“தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது“ – மனோ கணேசன்

தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெருந்தோட்டங்கள் நஷ்டமடைவது காலங்காலமாக நடைபெறுகிறது. இவற்றை எதிர்கொள்ளவே நஷ்டமடையும் பெருந்தோட்டங்கள், சிறு தோட்ட உடைமைகளாக பிரித்து வழங்க வேண்டும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்.  அந்த முயற்சிகளையும் நாம் ஆரம்பித்து இருந்தோம்.

இந்நிலையில் நஷ்டமடையும் தோட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அக்கறை காட்டுவது நல்லது.  அவற்றை சிறு தோட்டங்களாக பயிர் செய்கைக்காகவும் இரத்தினக்கல் அகழ்வுக்காகவும் காணிகள் பிரித்து வழங்கப்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை நல்லதே.

ஆனால் காணிகள் பிரித்து, வழங்கப்படும்போது, தோட்ட தொழில் துறையில் பெரும் தொழில் நேர்த்தி அனுபவம் கொண்ட தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த புதிய மாற்றத்தின் பின்னாலே வரும் புதுயுகத்திலும் தொழிலாளர்கள் புதிய தோட்ட ‘எஜமானர்களுக்கு’ ‘கொத்தடிமைகளாக’ இருக்க கூடாது. முடியாது. இதை கவனத்தில் கொள்வது, அரசின் உள்ளே இருப்பவர்களின் கடப்பாடு” என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

“ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த முன்மொழிவு“ – ஜி.எல். பீரிஸ்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அதிகாரம் பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஜனாதிபதிக்கு உதவும் என சுட்டிக்காட்டினார்.

மேலும் 19 ஆவது திருத்தம் இருக்கும் வரை, ஜனாதிபதி நீதிமன்றங்களுக்கு பதில் வழங்க வேண்டியவராக இருப்பதனால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.

எனவே நீதிமன்றம் தொடர்பான விடயங்களைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஜி.எல். பீரிஸ் கூறினார்.

தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜராகியமையினை சுட்டிக்காட்டிய ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அத்தகைய நீதிமன்றங்கள் மற்றும் அணிக்குழுக்களில் முன்னிலையானால் அவரினால் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான நேரம் இருக்காது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் பிரிவு 35 (1), 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு விடயத்திற்காகவும் எந்தவொரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா பிரச்சினையை தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துகிறார் ட்ரம்ப்” – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

கொரோனா பிரச்சினையை ட்ரம்ப் தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்னடுத்துகிறார் என ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம். இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அது, ஜனநாயக கட்சியை பாதிக்கும்.

கடந்த, 2013ல், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக, ஷெல்பி ஹோல்டர் என்பவரின் வாக்குரிமை முடக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பர்கள், தனி நபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் வாக்குரிமையை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன.

வடக்கு கரோலினா மேல் முறையீட்டு நீதிமன்றம், கறுப்பர்கள் வாக்களிப்பதை  தடுக்கும் வகையில், மிக நுணுக்கமான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்திருப்பதே இதற்கு சான்று.

கொரோனா குறித்து, வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை, டிரம்ப் அலட்சியப்படுத்தி விட்டார். அதே கொரோனா பிரச்னையை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார்.

இப்படிப்பட்ட ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். எத்தகைய தடைகளையும் கடந்து, நாங்கள் வெற்றி பெறுவோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.