June

June

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடி அதிகரிப்பு !

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை !

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை – 70க்கும் மேற்பட்டவர்கள் பலி !

கனடாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தினால் கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரையில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் வயதானவர்கள்.

நேற்றையதினம் கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலையான 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை, பிரிட்டிஸ் கொலம்பியாவின் லிட்டன் நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் மீள அதிகரித்துள்ள கொரோனாத்தொற்று !

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு  இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 47.55 லட்சத்தைக் கடந்துள்ளது.
மொத்தமாக கொரோனா வைரசால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,103 ஆக உள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 43.19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதே நேரம்  உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.21 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.67 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம் – தென்னாபிக்காவில் புதிய சட்ட முன்மொழிவு !

தென்னாபிரிக்காவில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம் என்ற  முன்மொழிவு ஒன்றினை அந்நாட்டு அரசாங்க் வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் புரிவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் சட்டத்திற்கு எதிராக தென்னாபிரிக்காவின் பழமைவாதக் குழுக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.

திருமணச் சட்டங்களில் மே மாதம் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.

தென்னாபிரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டபூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் சாதகமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விஷயம் தொடர்பான பொது விவாதத்திற்கான அழைப்புதான் இந்த அறிக்கை.

ஏற்கனவே அங்கு ஆண்கள் பல திருமணங்கள் புரிவது சட்டபூர்வமானது தான். என்றாலும் தற்போது பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவு பல எதிர்மறை விமர்சனங்களை கிளப்பியுள்ளன.

தென்னாபிரிக்காவில் உள்ள தற்போதைய திருமணச் சட்டம் பாலின பாகுபாடுடன் உள்ளது. எனவே அதில் சமத்துவத்தை கொண்டு வர சட்டத்தை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் முன்மொழிந்தனர்.

இருப்பினும் பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தென்னாபிரிக்காவில் இதை பெரிதும் எதிர்ப்பவர்களில் அந்நாட்டின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரமான முசா செலேகு நான்கு திருமணம் செய்தவர் என்பது ஆச்சரியம்.

செலேகு தொலைக்காட்சியில் பிரபலமானது அவருக்கு நான்கு மனைவிகள் இருக்கும் காரணத்தால் தான். அவரின் குடும்பம் குறித்த அந்த நிகழ்ச்சியால் தான் நட்சத்திரமானார் செலேகு.

தனது வலையொளி காணொளியில் தான் சமத்துவத்தை எதிர்ப்பவன் இல்லை என்று தெரிவிக்கும் அவர் பெண்கள் பலதாரம் புரிந்தால் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்து பெரிதும் கவலைப்படுவதாக தெரிவித்தார்.

எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் பெண் நல ஆர்வலர்கள், சமூக பணியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முடிவை பெண் ஆர்வலர்கள் பலர் ஒரு மைல் கல்லாகதான் பார்க்கின்றனர்.

மே மாதம் திருமணச் சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.

இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு முடிவு என்கின்றனர். பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு எனவே பல கணவர்களை கொண்டிருப்பது ஒரு தேர்வாக இருக்க வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதை எதிர்ப்பவர்கள் பலரும் கலாசாரத்தின் பக்கம் கைகாட்டினர்.

திருமண சட்டத்தில், குழந்தைகள் திருமணங்களை தடுக்கும் வகையில் திருமணத்திற்கான குறிப்பிட்ட வயது, பல்வேறு பாலினத்தவர்கள், மதங்களை சார்ந்தவர்கள், கலாசார நம்பிக்கை கொண்டவர்களின் திருமணங்களை சட்ட ரீதியாக்குவது போன்ற மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

ஏனென்றால் தென்னாபிரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதேபோன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை எனவேதான் இந்த மாற்றங்களை அதிபர் சிரில் ராம்ஃபோசாவின் அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. ஜூன் மாத இறுதி வரை தென்னாபிரிக்க மக்கள் இதுகுறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

ஆர்வலர்கள், பாரம்பரிய குழுக்கள், மத தலைவர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் இருபால் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்டுதான் இந்த பச்சை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் தற்போது உள்ள திருமணச் சட்டம் என்பது 1961ஆம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு மேலோங்கி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி கிறித்தவ முறை திருமணங்கள் மட்டுமே சட்டப்படியாக செல்லும்.

1994ஆம் ஆண்டுக்கு பிறகு திருமணச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அது அனைவருக்குமானதாக இல்லை என்றும் போதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இந்த சட்ட முன்மொழிவின் போது உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி – பதவியை இராஜினாமா செய்தார் சுவீடன் பிரதமர் !

சுவீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபன் (வயது 63) மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இராஜினாமா செய்துவிட்டு புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், பிரதமர் ஸ்டீபன் லோபன் தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். பிரதமர் லோபன் பதவி விலகினாலும், புதிய அரசு அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.
இதுபற்றி ஸ்டீபன் லோபன் கூறுகையில், கொரோனா தொற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்த முடிவல்ல என்று கூறினார். மாற்று தலைமையை முடிவு செய்யாமல், தனக்கு எதிராக வாக்களித்ததாக ஸ்டீபன் லோபன் குற்றம்சாட்டினார்.

பின்லேடனை தியாகி என இம்ரான்கான் வாய் தவறியே சொல்லிவிட்டார் – பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி

2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தநிலையில் , பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று  பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.
இம்ரான்கான் மேற்கண்டவாறு பேசி ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆன நிலையில்,  இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃபவாத் சவுத்ரி கூறுகையில்,
“இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை இந்த வருடத்தில் நடந்த சம்வமாக தலைப்பில் வெளியிட்டுள்ள வலம்புரி – மோசமாகிப்போன தமிழ்பத்திரிகைகளின் தரம் – த.ஜெயபாலன்

‘கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையயை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையயை 15 முறை குத்திக்கொன்ற யாழ்ப்பாணப் பெண்!’ என்ற தலைப்புச் செய்தியுடன் நேற்று வலம்புரி பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் படி மேற்படி சம்பவம் சிலதினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்றிருக்க வேண்டும்.
May be an image of 2 people and text that says "கடழகன lampuri ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) தொலைபேசி 222 3378, 222 7829 ஒவி 190 கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையை 15 முறை குத்திக் கொன்ற யாழ்ப்பாணப் பெண் 4ு ழந் 15 (லண்டன்) இறந்தால் குழந்தை கொரோனா வைரஸால் தான் எப்படி வாழும் என்ற டைச் சட்டத்தின் 15 அமைச்சர் நாமல்"
ஆனால் இச்சம்பவம் ஓராண்டுக்கு முன்னதாக யூன் 30 2020 லண்டன் மிச்சத்தில் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்ற திகதியும் பத்திரிகையின் உட்பக்கத்தில் வந்துள்ளது. ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியயைக் கூட சரி பார்க்காமல் ஓராண்டு பழைய செய்தியை எழுதிய செய்தியாளர் அதனை சரிபார்க்காத ஒரு பத்திரிகை ஆசிரியர். இந்த நிலையில் தான் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் செய்தித் தரம் உள்ளது.
May be an image of 2 people and text that says "உலகம் செய்தி விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண் Updated ஜன 31, 2019 © 13:26 Added ஜன 31, 2019 o 13:24 கருத்துகள் (31) You May Like Arthritis: A Simple Trick to Relieve Pain Easily (Joint Helper) Sponsored Links by Tabool 142 Shares Omaze Million Pound House Draw (Omaze) 31 Advertisement லண்டன்: முதன் முறையாக லண்டன் இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்."
ஒரு பதிப்பில் வருகின்ற செய்தியின் நிலை இதுவென்றால் இணையத் தளங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
‘விண்வெளிக்குச் செல்லும்முதல் தமிழ் பெண்’ என்ற தலைப்பில் தமிழக இணையத்தளம் தினமலர் யூன் 31 2019இல் ஒரு செய்தியயை வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்தி இலங்கையில் உள்ள பல இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்து. இச்செய்தி தினமலர் இணையத்தளத்தில் இன்னமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தென்மராட்சி பிரதேச சபையில் மாணவி சிபோன் ஞானகுலேந்திரன் என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது. தமிழ் மாணவி மட்டுமல்ல எந்த மாணவியும் விண்வெளிப் பரிசோதணைகளில் ஈடுபட விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தில் பாடசாலைகளுடாக இணைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வழங்கிய நூண்ணுயிர்கள், தாவரங்கள் பரீட்சார்த்தமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின் மீளவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதுதொடர்பில் இரு மாணவிகளுடன் பிபிசி சில நிமிடங்கள் உரையாடி அதனை ஒளிபரப்புச் செய்திருந்தது. அந்த உரையாடலில் சிபோன் ஞானகுலேந்திரன் தனக்கு நுண்ணுயிர் கற்கைகளில் ஆர்வம் என்று தெரிவித்து இருந்தாரே அல்லாமல் விண்வெளிப் பயணத்தில் ஆர்மில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தினமலர் இணையமோ தனது செய்தியில் இவ்வாறு தெரிவித்து இருந்தது: “அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்”. இது தான் தமிழ் ஊடகச் சூழலின் நிலை.
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரும் அதன் ஆசிரியரும் செய்தியின் தற்போதைய நிலையயைப் பற்றி சிறிதுகூட சிரத்தை எடுக்கவில்லை. இச்செய்தி இவ்வாரம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கொலையாளியான தாய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு யூன் 24ம் திகதி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றிய எந்தக் குறிப்பும் வலம்புரி பத்திரிகைச் செய்தியில் வரவில்லை. ஏதோ கொரோனா மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி பிள்ளைகளையும் கொலை செய்யத் தூண்டும் என்ற விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி க்குழு செய்தியயைச் சோடித்து இருந்தது.
மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சிவானந்தம் (36 வயது) செய்த செயலை ஒரு பாரிய சோக நிகழ்வு என்று விபரித்த நீதிபதி வென்டி ஜோசப் அவருக்கு காலவரையறையற்ற சிகிச்சை வழங்குமாறு தீர்ப்பளித்து உள்ளார். தன்னால் மேற்கொள்ளப்பட்ட கொலை சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்டது அல்லவென்ற சுதா சிவானந்தம் தரப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சுதாவின் கணவர் சிவானந்தம், சுதா ஒரு முன்ணுதாரணமான தாயாக இருந்ததை நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். தான் சம்பவத்தின் போது மகளைக் காயப்படுத்துவதாக துன்புறுத்துவதாக கருதவில்லை என்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் இருந்தாகவும் தெரிவித்தார்.
சுதா சிவானந்தத்திற்கு ஏற்பட்ட மனநோய் பற்றிய முழுமையான விபரம் அவருடைய மனநிலை மருத்துவர்களாலும் முறையாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்பிட் கொன்சேர்ன் என்ற ஒருவகை மனப்பிறழ்வுநிலையின் கட்டத்தில் சுதா சிவானந்தம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனக்கு கடுமையான ஆபத்து அல்லது மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் பிள்ளைகளைப் பார்ப்பீர்களா என்றும் சுதா கேட்டதாக கணவர் சிவானந்தம் நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். இரு தாதிகளுடன் சுதாவும் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
தீர்ப்பினையடுத்து சுதா சிவானந்தம் மீண்டும் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு குடும்பத்தின் மோசமான சூழலை எவ்வித உணர்வுமின்றி ஒரு தமிழ் பத்திரிகை பரபரப்புச் செய்தியாக முயன்றதன் விளைவே இத்தலைப்பு. இப்பத்திரிகைகளின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கின்ற போது நாட்டில் ஜனநாயகம் சீரழிவும் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்த வேண்டிய பத்திரிகைகளே தரம்தாழ்ந்து இருக்கின்ற போது இவர்களால் எவ்வாறு அரசியல்வாதிகளை கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இவ்வாறு தான் பொறுப்பற்ற ஊடகவியலாளர்களால் மே 31 1981இல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம் யூன் 1ம் திகதி எரிக்கப்பட்டதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தக் குழப்பத்தினூடாக இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்கவும் சிறில்மத்தியூவும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மே 31 இரவு எரிக்கப்பட்ட நூலகம் யூன் ஒன்று காலை வரையும் எரிந்து கொண்டிருந்தது. அதனைச் செய்தியாக்கிய ஈழநாடு பத்திரிகை நூலகம் யூன் இரவு எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. யூன் அதிகாலை யூன் இரவாகி பின்னர் யூன் 2 இல் அப்பகுதிக்கு முதல் முறையாகச் சென்றவர்கள் முதல்நாள் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளையே மாற்றி எழுத முற்பட்டுள்ளனர்.
இதேபோல் புளொட்டின் வரலாற்றை எழுதுவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே தகவல்களைப் பொறுக்கி தனது அனுபவமாகச் சித்தரித்து ஒரு தொடரை எழுதிவருகின்றார் இந்திய உளவுத்துறையான றோவின் முகவர் வெற்றிச்செல்வன். அவர் இந்திய உளவுப் பிரிவுக்கு தனது விசுவாசத்தைகாட்ட றோவின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து வருகின்றார். இவர் உமா மகேஸ்வரனின் கொலை, மாலை தீவு கைப்பற்றல் நடவடிக்கைகளின் போது இந்திய உளவுபடையான ரோவிற்கு எதுவுமே சம்பந்தம் இல்லாமல் அவர்கள் எல்லாம் விரல்சூப்பிக் கொண்டிருந்தனர் என்ற வகையில் பதிவுகளை எழுதிவருகின்றார். தன்னை முகவர் என்று எழுதுபவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் அவர்களைப் பற்றி மோசமாக பதிவுகளை இடவதும் இவருடைய கைங்கரியமாக உள்ளது. இவருடைய பதிவுகளின் நம்பகத்தன்மையும் இவருடைய நேர்மைத்தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தன்னுடைய பதிவுகளிலேயே இவர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாகவும் குறிப்பான கால குறியீடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு தன் விருப்பு வெறுப்புப்படி எழுதி வருகின்றமையயை பலரும் தேசம்நெற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளனே வரலாற்றின் முதலாவது ஆசிரியன். ஆகவே பதிவுகளை மேற்கொள்வோர் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும்.

இந்திய ஜனாதிபதியின் பயணத்துக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து – உரிய நேரத்துக்கு வைத்தியசாலை செல்ல முடியாது உயிரிழந்த பெண் !

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,   உத்தர பிரதேச மாவட்டத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பகுதியான  கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கான்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிராமத்துக்கு சென்றார். அவரது கார் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார்.  சரியான நேரத்துக்கு  மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம்’ என, வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன்  வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கேரளாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – தடுப்பதற்காக முதல் மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கை !

இந்தியாவின் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

வரதட்சணை கொடுமை, பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்தது. கேரள காவல்துறையினருக்கு  இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.