மொகமட் அமீன்

மொகமட் அமீன்

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் – 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு

election_box.jpgஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல்; 6 அரசியல் கட்சிகள் நேற்று கட்டுப்பணம் செலுத்தின

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (03) வியாழக்கிழமை கட்டுப்பணம் செலுத்தினர்.

* ஐக்கிய சோசலிச கட்சியைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூரிய,
* ஒக்கொம வெசியோ ஒக்கொம ரஜவரு அமைப்பைச் சேர்ந்த எம். பி. தெமினிமுல்ல,
* ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணியின் ஜே. எ. பீற்றர் நெல்சன் பெரேரா,
* நவ சிஹல உறுமயவின் சரத் மனமேந்திர,
* ஜாதிக சங்வர்தன பெரமுனையைச் சேர்ந்த அச்சல அசோக சுரவீர,
* ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பீ. டி. பீ. எஸ். ஏ. லியனகே

ஆகிய அறுவருமே நேற்றுத் தமது வைப்புப் பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணை யாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார்.

வருட இறுதிக்கு முன் வடக்கில் சிவில் நிர்வாகம் : ஒரு இலட்சம் பேர் மீள்குடியேறுவர் – அமைச்சர் அமுனுகம

வட பகுதியில் இவ்வாண்டு இறுதிக்குள் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் (யு. என். டி. பி.) இணைந்து இதற்கென பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யு. என். டி. பியின் பிரதிநிதி நீல் பூனுக்கும், தனக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த திட்டத்திற்கு இணக்கம் கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் உரையாற்றுகையில்:-

கிராம சேவகர் பிரிவு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் வரையான சகல செயற்பாடுகளும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொலைத் தொடர்பு உட்பட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

சுனாமி அனர்த்தத்தின் போதும், கிழக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னரும் இது போன்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.

கிராம மட்டத்திலிருந்து நிர்வாக நடவடிக்கைகளை ஸ்தாபிக்க தேவையான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

பொய் செய்தி வெளியிடும் இணையத்தளம் குறித்து மக்களுக்கு அறிவூட்டல்

000lakshman_yapa_abeywardena.jpgபொய்யான செய்திகளை பிரசுரித்து வரும் சில இணையதளங்கள் குறித்து மக்களை அறிவூட்ட உள்ளதாகவும், இவை குறித்த தகவல்கள் அடுத்த வாரம் முதல் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடவுள்ள தாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறி பல பொய்யான செய்திகளை சில வெப்தளங்கள் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகின்றன.

யாழ். குடாவைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் – பயிற்சிகளை முடித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் கடமையாற்றுதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில். ஏ-9 வீதியின் ஊடாக சென்று யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.  வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் அவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும்;.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைச்சர்கள் நியமனம் – மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் கவனிக்கவென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தலைமை தாங்குவார். யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்றுக்காலை கச்சேரியில் மாநாடொன்று நடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கொழும்பிலிருந்து வருகைதந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன,  பிரதியமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், ஹஸைன் பைலா,  மஹிந்த அமரவீர,  பிரேமலால் ஜயசேகர உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் இதில் பங்குபற்றினார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கவனிக்க வாரா வாரம் கூடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மேற்படி அமைச்சர்கள் அல்லைப்பிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

இன்று தென் மாகாண சபைத் தேர்தல் – 53 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1091 பேர் களத்தில்

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தல் இன்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெறுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.

இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அபமர்த்தப்பட்டுள்ளனர்.

சூழ்நிலைகளைப் பொறுத்து வாக்குச்சாவடிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு நேற்றுக் காலையே வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கமராக்கள் கொண்டு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறு சிறு சம்பவங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய, அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85% வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், இரண்டு போனஸ் உறுப்பினர்களுமாகத் தென்மாகாணத்தில் 55 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்குகளை எண்ணுவதற்காக 168 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காகப் 15 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தென் மாகாண தேர்தல் பிரசார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தென்பகுதி பாடசாலைகள் வெள்ளி பூட்டு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் இன்று (7) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் நாளை பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். பொலிஸார் நாளை மறுதினம் (9) முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் ஐ. ம. சு. முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதேவேளை ஐ. தே. க., ஜே.வி. என்பனவும் பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்களும் இதில் அடங்கும்.

இதேவேளை தென் மாகாண சபைத் தேர்தலையொட்டி தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.  தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது.

இதேவேளை இம்முறை தேர்தல் கடமைகளில் 16 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தென் மாகாண சபைக்கு 55 பேரை தெரிவு செய்ய 1091 வேட்பாளர் போட்டி

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1091 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 2 போனஸ் ஆசனம் அடங்கலாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

காலி மாவட்டத்தில் 15 கட்சிகளிலும் 4 சுயேச்சைக் குழுக்களிலுமாக 494 வேட்பாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 14 கட்சிகளிலும் மூன்று சுயேச்சைக் குழுக்களிலுமாக 357 வேட்பாளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 கட்சிகளிலும் ஆறு சுயேச்சைகளிலுமாக 240 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இதில் காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டையில் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர் களை நிறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காலி மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தல்களுக் கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் கடந்த 21 ஆம் திகதியிலிருந்து நேற்று (28) நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சேபம் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.