ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.
வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.
இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.