நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரம் புலிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது – ராஜபக்ஷ

mahinda0.jpgநிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரத்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக எவரும் கூற முடியாது.  புலிகளைத் தடை செய்தமை, புலிகளுடனான உடன்படிக்கையை இல்லாதொழித்தமை போன்றவற்றிற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, நாம் திறைசேரியிலிருந்து பெருமளவு நிதியைச் செலவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கே இந்த நிதியைச் செலவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்த முறைமையின் கீழாவது இலவசக் கல்வியையோ, சுகாதாரத்தையோ இல்லாதொழிக்க முற்படவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரத்ன ஹேரத், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது, மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூற்றுக்கள் சர்வதேச அளவில் பெரும் அசெளகரியங்களுக்கு நாடு முகங்கொடுக்க காரணமாகியுள்ளன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மட்டுமன்றி முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் ஒரு தவறான கூற்றின் மூலம் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சிலர் முனைகின்றனர்.

இந்தவறான கூற்று காரணமாக 58வது படையணியினர் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான வெளிநாட்டு விசாவும் மறுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் புலிகளுடனான உடன்படிக்கையை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோதும், பாராளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரம சிங்கவே புலிகளுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார். நிறைவேற்று ஜனாதி பதியால் முடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்தார், ஜனாதிபதியால் வெறுமனே அதனைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடல் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் வகையில் ஐந்து துறைமுகங்கள் ஒரே சமயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எந்தகைய அபிவிருத்தி முன்னேற்றங்களை நாம் எட்ட முடிந்தாலும், நல்லொழுக்க முள்ள இளைய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமற் போனால் எதிலும் பயனில்லை.

அதனைக் கருத்திற்கொண்டே நாம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். எமது கலா சாரத்தை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். சமூகத்தையும், பிள்ளைகளையும் பாது காத்து புதிய யுகமொன்றை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நாம் எந்தளவு நிதியைச் செலவிட்டும் பயனில்லை. தொழில் வாய்ப்புக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பயனில்லை. எமது எதிர்கால தலை முறையினர் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஒரு வழிமுறையாகவே பொது இடங்களில் புகை பிடித்தல், போதை ஒழிப்பு போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அத்துடன் இவ்வருடத்தை ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப வருடமாகவும் பிரகடனப் படுத்தியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *