March

March

இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்கள் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டு !

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தானில் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள் – 700 குழந்தைகள் வரை உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலிபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.

“ராகுல் Vs மோடி மோதலும் – பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியலும்” : அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்

அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.

The many Khalistani attacks on Indian embassies from UK to America

மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளமிட்டது போல் தெரிகிறது. தற்போது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மீண்டும் கிளம்பியுள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ முழக்கங்கள் இதனை மேலும் வலுப்படுத்துகிறது.

ரஷ்யா-உக்ரேயின் போரில், ரஷ்யா மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் நழுவல் போக்கினை இந்தியா கடைப்பிடிப்பதாக மேற்குலகம் கருதுவதை, இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளும் பொதுவெளி ஊடக உரையாடல்களில் வெளிப்படும் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன. “ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமே உலகத்தின் பிரச்சினையல்ல” என்று ஜெயசங்கர் அவர்கள் கடும் தொனியில், ஊடகச் சந்திப்பொன்றில் கூறியது இம்மோதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Germany, Japan seek deeper ties during Scholz visit – DW – 04/27/2022

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மையம் கொண்ட குவாட்(QUAD) இல் இந்தியா இருந்தாலும், ஆக்கஸ் (AUKUS) என்கிற உயர் தொழில்நுட்பக்கூட்டில் இந்தியாவும் இல்லை. ஜப்பானும் இல்லை. ஆனாலும் சீனாவிற்கு எதிரான QUAD அணியில் இந்தியாவின் வகிபாகத்தைப் பலப்படுத்த G7 இலுள்ள ஜப்பானைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய அதிபர், நடைபெறும் போரில் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், தென்சீனக்கடலில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். இதனை ஜப்பான் ஊடான அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறை என்று கணிப்பிடலாம். ஆகவே இந்தியாவை மையச்சுழல் புள்ளியாகக் கொண்ட, மேற்குலகின் புவிசார் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதனை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையிலும் மேற்குலகின் இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் அக்கறை கொள்வதைக் காணலாம்.

அடுத்ததாக இந்திய அரசியலில் இதன் எதிர்வினைகள் என்னவென்று பார்க்கலாம். தமது பிராந்திய மூலோபாய நலனிற்குத் தேவையான நாடொன்று, நடுநிலையாகவோ அல்லது எதிரணியில் இருந்தாலோ, அந் நாட்டினை தம் பக்கம் இழுக்க பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் ஆட்சிமாற்றமும் ஒன்று. இவைதவிர புதிதாக ஒரு பொருண்மிய அல்லது இராணுவக் கூட்டினை அமைத்து, அந்த ‘சிக்கலான’ நாட்டினை உள்வாங்கிக் கொள்வார்கள். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சிமாற்றத்திட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கப்படுகிறது. அவரின் அண்மைக்கால புவிசார் அரசியல் கலந்த பேச்சுக்கள் மேற்குலக நிலைப்பாடுகளுக்கு இசைந்து போவதைக் காணலாம். இலண்டனில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய ராகுல் காந்தி, ‘ இந்தியா மீதான சீனாவின் பாரிய அச்சுறுத்தலை வெளிநாட்டமைச்சர் புரிந்துகொள்ளவில்லை’ என்கிறார். ஆகவே மேற்குலகின் புவிசார் அரசியலோடு இணைந்து, ஹின்டன்பேர்க் அம்பாக மாற, ராகுல் காந்தி வில்லாக மாறி அதானியையும், ‘ஹவாலா’ மோடிகளையும் விமர்சிக்கும் ஒரு இந்தியத் தலைவராக தன்னை இனங்காட்டிக் கொள்ள முனைகிறாரா? என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அவசர அவசரமாக எதிர்வினையாற்றிய மோடி அரசு, ஹவாலா மோடிகளோடு நரேந்திர மோடியை சரிநிகர் பிம்பமாக சித்தரித்துப் பேசிய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை முடக்கிவிட்டது.

ஆகவே இந்திய நாட்டின் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமாக இருப்பதால், அரசின் புவிசார் நிலைப்பாட்டில் மாற்றங்களை நிகழ்த்துவது கடினமானதாகவிருக்கும் என்பதே நிதர்சனமாகும். 18 நாடுகள் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்ய உடன்பட்டிருப்பதும், BRICS இன் விரிவாக்கமும் அதன் பொது நாணய உருவாக்க முன்னெடுப்பும், உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்படும் மாற்றமும், அமெரிக்க- ஐரோப்பிய வங்கிகளின் நிதி மூலதன வெளியேற்றங்களும் சேர்ந்து உலக நிதிக்கட்டமைப்பில் பெருமாற்றங்களை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக்களை காண்பிக்கிறது. இதில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாடு குறித்தே மேற்குலகமும் ஜப்பானும் அதிக கரிசனை கொள்கிறது. ஆனாலும் இந்தியா மீதான மேற்கின் மறைமுக அழுத்தங்கள் அதிகரிக்கும் போக்குகளே அதிகமாகும் என்று தெரிகிறது.

இதயச்சந்திரன் (25-03-2023)

செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியர் அமெரிக்காவில் கைது !

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரில் விக்டர் மற்றும் அந்த பயணி கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இதன் தீர்ப்பு வெளியானது. இதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இரு குழந்தைகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன்!

லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன் (62) ஒரு வீட்டில் பெண் குழந்தையும் மற்றுமொரு வீட்டில் ஆண் குழந்தையையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை மார்ச் 21 லண்டன் ஜஸ்ல்வேர்த் கிரவுண் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பாலியல் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குள் மற்றுமொரு பாலியல் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் சதானத்திற்கான தண்டனைக்கான நீதிமன்ற அமர்வு யூன் 16 நடைபெற இருக்கின்றது.

பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னும் கலாநிதி நித்தியானந்தன், ஆச்சுவே உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் உட்பட உட்பட சைவ ஆலயங்களில் முக்கிய உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கி சமூகத்தில் தங்களை அம்பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் லாகுர்னேயில் சிவாலயம் நடத்துகின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு யாழ்ப்பாணத்தில் இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுக்கு போதையூட்டி சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றார். போதைப்பொருள் தொடர்பில் அவர் மீதும் நல்லூரடியில் உள்ள அவருடைய லகஸ் ஹெட்டல் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. லாக்கூர்னே சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் பணத்திலேயே ஜெயந்திரன் என்ற குடுமிஜெயா சமூகச் சீரழிவு வேலைகளைச் செய்து வருகின்றார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர் தற்போது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ்ப்பாணத்தின் முக்கிய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் சதானந்தனின் செயற்பாடுகள் பற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது குடும்பங்களோடு நெருங்கிப் பழகிய சதானந்தன் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அப்பிள்ளைகளை பாலிஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் பிள்ளையை அவர் பன்னிரெண்டு வயதாக இருக்கின்ற போது தன்னுடைய வியாபாரம் சம்பந்தமாக சில ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி கணணியைப் பயன்படுத்த என்று சொல்லி அப்பிள்ளையின் படுக்கைஅறைக்கு சென்றுள்ளார். அங்கு ‘இது வேறொருவருக்கும் தெரியத் தேவையில்லை. இது எனக்கும் உங்களுக்கும் உள்ள ரகசியம்’ என்று சொல்லி அப்பிள்ளையை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதேசமயம் மற்றைய வீட்டிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வீட்டிற்குச் சென்று அந்த ஆண் பிள்ளையையும் ஒன்பது வயது முதல் 13 வயதுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஏப்ரல் 27, 2019இல் சுப்பிரமணியம் சதானந்தத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சும்பிரமணியம் சதானந்தன் மே 10, 2019இல் கைது செய்யப்பட்டார்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரேமகுமார் ஆனந்தராஜா கைது செய்யப்பட்டிருந்தார். இரு குற்றவாளிகளுமே ஆரம்பத்தில் இருந்து தாங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தே வந்தனர்.
சுப்பிரமணியம் சதானிற்கு எதிராக எட்டு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளும் இரண்டு சிறுவர்களோடு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளுமாக பத்துக் குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இவ்வழக்குத் தொடர்பில் கருத்து வெளியிட்ட மெற் பொலிஸின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரி நில் சிமித்சன் “நானும் எனது குழுவும் பாதிக்கப்பட்ட இருவரும் முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட்டதை வரவேற்கிறோம். அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, நாங்கள் அவர்களுக்கான உதவியையும் ஒத்துழைப்பையும் விசாரணை முழுவதும் வழங்கி இருந்தோம்.

பாலியல் துன்புறுத்தல்கள் அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால் என்ன இப்போது நடந்துகொண்டிருந்தால் என்ன, யார் வந்து எங்களிடம் முறையிட்டாலும் நாங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்போம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உங்களை நம்புவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

பெண் பிள்ளை வளர்ந்து பல்கலைக்கழகம் சென்ற பின்னரேயே ஸ்கைப் மூலமாக தனது பெற்றோருக்கு இச்சம்பவத்தை தெரியப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆண் பிள்ளையும் தனக்கு நிகழ்ந்ததை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட இந்தக் கொடிய அனுபவம் பிரேமகுமார் ஆனந்தராஜயாவினால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையின் அனுபவமும் ஓரே மாதிரியானதாகவே உள்ளது. குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகி, நம்பிக்கையை உருவாக்கி அதன் பின் பிள்ளைகள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பாலியல் குற்றவாளிகளான பிரேமகுமார் ஆனந்தராஜாவும் சுப்பிரமணியம் சதானந்தனும் ஒரு சில மைல் தூர வித்தியாசத்திலேயே வாழ்பவர்கள். இவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களா என்பதை இச்செய்தி பிரசுரிக்கும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது – ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,

“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

 

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம்!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய் கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி !

பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது.

ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.