27

27

மாணவர்களின் உணவுக்காக வழங்கப்பட்ட பணத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய அதிபர் !

மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு காலை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்காக உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த உணவுத் திட்டத்தின் கீழ், இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபா வீதம் 72 000 ரூபா செலவிடுகிறது.

டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு வழங்குபவர் பால் சாதம், கொக்கிஸ் , கட்லெட் போன்றவற்றை சமைத்துள்ளார், மேலும் குழந்தைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

சம்பவத்தன்று, குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், அன்றைய தினம் குழந்தைகள் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வருமாறும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக அந்த வவுச்சரில் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலை ஏற்படுத்துவது நமது நோக்கமல்ல – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

3 மாதங்களில் 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் – சோகத்தில் மைத்திரிபால!

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை திரட்ட உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் உயர் நீதிமன்றம் 100 மில்லியன் ரூபாய் பணத்தை ஆறு மாதங்களில் செலுத்த எனக்கு அவகாசம் கொடுத்தது. அதில் மூன்று மாதங்கள் கடந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

“நான் கொள்ளையடிக்கவோ குண்டு வீசவோ இல்லை. ஆனாலும் எனது அரசாங்கத்தில் இருந்த சில அதிகாரிகள் தமது பொறுப்புகளை சரியாகக் கவனிக்காததால் நான் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

பணத்தை செலுத்த தவறினால் நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா இல்லையென்றால் வேறு ஏதேனும் தீர்ப்பு விதிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு!

கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.

இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

“அவள் தேசத்தின் பெருமை ” – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் !

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அவள் தேசத்தின் பெருமை என்ற தொனிப்பொருளிலான மகளிர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் 26.03.2023 கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் – பெண் விடுதலை பற்றிய கருத்துக்களும் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு மகாசக்தி மகளிர் சம்மேளன தலைவி திருமதி சத்தியமூர்த்தி லலிதகுமாரி தலைமை ஏற்று நடத்தி இருந்தார்.
தலைமை உரையில் கருத்து தெரிவித்திருந்த லலிதகுமாரி அவர்கள் ” வழமையாக அரசு நிறுவனங்களோ – அல்லது அதன் துணை நிறுவனங்களோ மட்டுமே இந்த மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இப்படியான ஒரு நிகழ்வு பல மாணவிகள் கல்வி கற்கக்கூடிய ஒரு திறன் விருத்தி மையத்தில் நடைபெறுவதையிட்டு நான் பெருமகிழ்வடைகிறேன். பெண்கள் சார்ந்த மாற்றம் என்பது பெரிய அளவிலான இடங்களில் இருந்து இடம்பெறுவதை காட்டிலும் வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய ஆண்பிள்ளைகள் ஆக குறைந்தது வீட்டில் உங்களுடைய வேலைகளை அம்மாவுக்கு பொறுப்பு கொடுக்காது நீங்களே செய்வது மாற்றத்திற்கான முதலாவது அடியாகும். கடந்த காலங்களைப் போல் அல்லாது இன்றைய நாட்களில் பெண்கள் முன்னோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். சில சமூக தடைகள் அவர்களுக்கு இருந்தாலும் கூட அதனையும் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்து பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை இன்னும் கிராமங்கள் முழுவதும் சென்றடைய வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளைப் பெற்று வன்னி மண்ணின் பெருமையை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி அகிலத்திரு நாயகி ஸ்ரீசெயானந்தபவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் தயார்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமும் – கலாச்சாரமும் பெண்களை பாதுகாக்கின்றதா ..? அல்லது அடிமைப்படுத்துகின்றதா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் பலருடைய வரவேற்பையும் பெற்றிருந்தது.
நிகழ்வுகளின் இறுதியில் தேசிய அரங்கிலும் – சர்வதேச அரங்கிலும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல விருதுகளை பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்புக்கான நிதி அன்பளிப்பை ஹட்டன் நேசனல் வங்கி வழங்கியிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட உருள்பந்து மகளிர் அணியின் தலைவி நடராசா வினுசா பேசிய போது ” கிளிநொச்சி மாவட்ட மகளிர் இன்று பல்வேறு பட்ட துறைகளிலும் மிளிர ஆரம்பித்துள்ளனர். இருந்த போதும் பெண்கள் என்பதாலோ என்னமோ அவர்கள் எவ்வளவு பெரிய சாதனை படைத்தாலும் அதனை நமது சமூகத்தினர் கண்டு கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் RollBall அதாவது உருள்பந்து விளையாட்டு வீராங்கனைகளாகிய நாம் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன் – நமது அணியைச் சேர்ந்த பல வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கிலும் கால் பதித்துள்ளனர். ஆனால் இந்த விளையாட்டு பற்றி கூட எம்மில் பலருக்கு இன்னும் தெரியாது உள்ளது. நாம் விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாது சிரமப்பட்டு கொண்டிருக்கின்றோம். விளையாட வருகின்ற அனைத்து வீராங்கனைகளுமே கஷ்டப்பட்ட குடும்ப பின்னணி உடையவர்களே. மற்றைய பகுதிகளில் விளையாட்டு வீராங்கனைகள் ஏதோ ஒரு வகையில் அடையாளம் காணப்பட்ட அவர்களுக்கான உதவிகள் செய்யப்படுகின்ற போதிலும் கூட எமக்கு கிடைக்கக்கூடிய சமூக மட்டத்திலான ஆதரவு என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. பயிற்றுவிப்பாளரும் – சில அதிகாரிகளும் மட்டுமே எங்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துகிறார்கள். எங்களுடைய பல வீராங்கனைகளுக்கு விளையாடுவதற்கான சப்பாத்து கூட இல்லாத ஒரு துர்பாக்கிய சூழலே நிலவுகின்றது. விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு தளம் கிடையாது. விளையாடுவதற்கான பயிற்சிகளை கூட நாம் பாடசாலையின் பிரதான மண்டபத்திலேயே மேற்கொள்ள வேண்டிய சூழலே காணப்படுகின்றது. எனவே இந்த இடத்தில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் போல எங்களை ஆதரிக்க கூடிய பலரை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்குமா இன்னும் பல மாணவிகளை சர்வதேச அரங்குக்கு எங்களால் கொண்டு செல்ல முடியும்.” என அவர்  குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் போராட்டமேயாகும் – நாமல் ராஜபக்ஷ

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போராட்டப் பகுதியில் வழங்கப்பட்ட போதைப்பொருள் பாவனையால் சிறுவர்கள் தற்போது அதற்கு பழகிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன் கருத்து தெரிவிக்கையில்,

எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்றுவந்தது. எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம்.  மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றோம். என்றனர்.

இதேவேளை விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர கச்சத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படை

புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர கச்சத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என்றும், கச்சத் தீவில் வேறு எந்த விகாரையோ அல்லது மத நினைவுச்சின்னத்தையோ கட்டும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.

கச்சத் தீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு கடற்படை இலக்கு வைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு நிலப்பரப்பில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவு ஆகும் . கச்சத்தீவைச் சுற்றியுள்ள பாதுகாப்பைக் கையாள்வதற்காக இலங்கை கடற்படை ஒரு கடற்படைப் பிரிவை நிறுவியுள்ளது. இலங்கை கடற்படையின் பௌத்த சங்கத்தின் அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தை பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக கடற்படையினர் கவனித்து வருகின்றனர்.
கச்சத்தீவு தேவாலய திருவிழாவைத் தவிர, வருடத்தின் மற்ற நாட்களில், கடற்படையினர் தேவாலய வளாகத்தை சுத்தம் செய்து, தேவாலயத்துடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் மிகுந்த பக்தியுடன் செய்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு கடற்பரப்பில் உள்ள கடற்படை வீரர்கள் பெரும்பாலானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் அங்கு உள்ள சிறிய புத்தர் சிலையை வணங்குவதாக அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.