31

31

யாழில் சொகுசுகாரில் 18Kg போதைப்பொருள் கடத்தல் – 24 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் 10 வயதுடைய சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது !

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர்.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் சிறுமி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் துஷ்பிரயோகங்களையும் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்து கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த 10 வயது மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர்.

10 வயது மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர். மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தந்தையை வெட்டிப் படுகொலை செய்த 17,19 வயது மகன்கள் – யாழ்ப்பாணத்தில் கொடூரம் !

மிருசுவிலில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஜரூளின் கட்டளைக்கு இணங்க யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த காவல் பரிசோதகர் மேனன், உப பரிசோதகர் பிரதீப் ஆகிய காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே உயிரிழந்தவரின் இரண்டு மகன்களையும் இவர்களது நண்பனையும் கைதுசெய்து கொடிகாம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணைகளின் போது, தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக  மகன்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மிருசுவில் கரம்பகம் எல்.ஆர். தோட்டத்தில் இன்று பின்னிரவில் தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சிவசோதி சிவகுமார் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டிருந்தார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக மனைவியை பிரிந்து தோட்டக் குடிசையிலேயே தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவர் தங்கியிருந்த குடிசையில் வைத்தே அவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசாரணைகளின் போது சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதவான் ஏ.யூட்சன், மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

IMF கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் நிலை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்கள் சிலருக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களின் மீது சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எங்களுடைய அரசியல் விசுவாசங்களை ஒதுக்கிவிட்டு, இந்த இடத்தில் நாம் அனைவரும் சமூக ஆர்வலர்கள் என்பதை அங்கீகரிப்போம். இதை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

“இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள்” என்றரர்.

அரகலய இலங்கைக்கு ஒரு பெறுமதியான பாடத்தை கற்பித்ததாகவும்,”மக்கள் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தை வலுவாகக் கோரினால், மாற்றத்தை அடைய முடியும்.”

“அப்படியானால், அது அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடுமையான குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்கள் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டு !

ஒரை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் !

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது ஜனவரி மாத புள்ளிவிவங்களை விட 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, பெப்ரவரி 2022 இல், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 169 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், ஜனவரி 2023 இல் 102,545 வருகைகள் மற்றும் 2022 பெப்ரவரியில் 96,507 பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி 2023 இல் 107,639 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான முக்கிய ஆதார நாடுகளாக இருந்தன.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மார்ச் மாதத்தில் ஏற்கனவே 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த வருடத்தின் மூன்று மாதங்களிலும் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

கிளிநொச்சி பாடசாலை விளையாட்டு போட்டியில் இனந்தெரியாதவர்கள் புகுந்து தாக்குதல் !

கிளிநொச்சி, சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் இனந்தெரியாதவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம், திடீர் என்று நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கிராமத்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் ஏற்கனவே பிரிதொரு குற்ற செயலுடன் தொடர்புபட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலையானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை!

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.