தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம். “ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது,” என்று பொம்மன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.
தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுள்ளது.
`எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.
காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.
தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.
யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள்.
இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ள அதேsஅமயம் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.