புதிய வருமான வரி மூலம் தொழில் வல்லுநர்களின் கழுத்தை நெரித்து ஆட்சியாளர்களின் சட்டைப்பையை நிரப்பும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொள்வதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமாயின், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் வேறு வழிகளில் வரி வசூலிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் போன்ற துறைகளின் ஊடாக அறவிடக்கூடிய பாரியளவிலான வரியை அரசாங்கம் வேண்டுமென்றே மறந்துவிட்டதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தங்களின் வருமானத்தின் மூலம் செலுத்த வேண்டிய வரியை தந்திரோபாயமாக நீக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிடப்படும் வரி மூலமாக எவ்வித நன்மையும் கிடைக்காத நிலையில், மருந்து பற்றாக்குறை, மின் கட்டண அதிகரிப்பு, வட்டி வீதம் அதிகரிப்பு போன்றவற்றின் ஊடாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளுக்கான வசதி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கான சூழலும் அற்றுப்போயுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் போது அறவிடப்படுகின்ற வரியை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தமது தனிப்பட்ட நன்மைகளுக்காக பயன்படுத்தி வீண் விரையம் செய்யக்கூடாது எனவும் அதனை சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய துறைகளுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.