உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக வெளியிடுவதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க் 2-வது இடத்தையும், ஐஸ்லாந்து 3-வது இடத்தையும், இஸ்ரேல் 4-வது இடத்தையும், நெதர்லாந்து 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்வீடன், நோர்வே, ஸ்விட்சர்லாந்து, லக்செம்பர்க், நியூசிலாந்து முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கனடா 13-வது இடத்தையும், அமெரிக்கா 15-வது இடத்தையும், ஜெர்மனி 16-வது இடத்தையும், இங்கிலாந்து 19-வது இடத்தையும், பிரான்ஸ் 21-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் 25-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 26-வது இடத்தையும், சவூதி அரேபியா 30-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஜப்பான் 47-வது இடத்தையும், பிரேசில் 49-வது இடத்தையும், சீனா 64-வது இடத்தையும், நேபாளம் 78-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும், இலங்கை 112-வது இடத்தையும், மியான்மர் 117-வது இடத்தையும், வங்கதேசம் 118-வது இடத்தையும், இந்தியா 126-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி இடமான 137-வது இடத்தை ஆப்கனிஸ்தான் பிடித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளான பின்லாந்து , சுவீடன், டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகின்றன. இதே நாடுகளில் தான் நாத்திகம் பற்றிய கருத்தாடல்களை கொண்டவர்கள் அதிகமாக காணப்படுவதுடன், நாத்திக கருத்துக்களை அல்லது மத சகிப்புத்தன்மையை கொண்டவர்களும் அதிகமாக வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் பின்லாந்து மக்களின் வாழக்கை பற்றியும் நோக்குதல் அவசியமாகிறது. பின்லாந்தை விட சிறந்த காலநிலையை கொண்ட பல நாடுகள் இருக்கின்றன, பணக்கார நாடுகள் பல இருக்கின்றன, மக்கள் தொகை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள நாடுகள் பல இருக்கின்றன. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இருக்கின்றதுப் என்பதைக் காணலாம்.
இயற்கை சூழல்
அங்கு பல பழமையான காடுகள், பளிங்கு போல தெளிவான ஏரிகள், வன விலங்குகள் இருக்கின்றன. காற்றிலும் நீரிலும் மாசு மிகக் குறைவு. இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கைவளங்கள் சூழ்ந்த பகுதியிலேயே வசிக்க விரும்புகின்றனர். வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை, இதுவும் மகிழ்ச்சிக்கான ரகசியங்களில் ஒன்று.
ஒற்றுமை
மிகவும் சுதந்திரமான மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். இறுக்கமான சட்டங்கள் இல்லை என்றாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது பின்லாந்து.
பின்லாந்து கலாச்சாரம் மற்றொரு காரணம். மக்கள் போட்டிப்போடுவதை விட ஒன்றாக இணைந்து செயல்படுவதே ஊக்குவிக்கப்படுகிறது.
திணிக்கப்படாத கல்வி முறை
பின்லாந்து மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அங்கு குற்றங்கள் மிகக் குறைவு என்பதுதான். மேலும் பின்லாந்தின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறை மற்றோரு காரணம்.
பின்லாந்தின் பள்ளி அமைப்பு ஐரோப்பியாவில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது. மேலும் பின்லாந்தில் சிறந்த மருத்துவ அமைப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து இங்குள்ள மக்கள் உயர்தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது.
சமத்துவமான கல்வி முறை
பின்லாந்து மக்கள் மகிழ்ச்சிக்கான மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஏற்றதாழ்வுகள் இல்லாமை தான். வேற்றுமைகளைக் கடந்து சமத்துவத்தை முன்னிருத்தும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான உதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.
சமூகத்தின் எந்த பொருளாதார பின்னணியில் இருந்து வருபவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.
சகிப்புத்தன்மையுடைய மதக்கட்டமைப்பு
மகிழ்ச்சி சுட்டெண்ணில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து உலகில் நாத்திகர்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது. அதே நேரம் மதம் தொடர்பான சகிப்புத்தன்மை இந்த நாட்டு மக்களிடம் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.