January

January

“முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது” – நீதி அமைச்சர் அலிசப்ரி

“முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் நேற்று (30.01.2021) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல துறைகளிலும் சட்ட மறுசீரமைப்பு மற்றும் திருத்தத்திற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

சிவில் சீர்திருத்தத்தில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் நாம் 11 குழுக்களை நியமித்து சட்டம் தொடர்பான திருத்தத்தை மேற்கொண்டு வருகிறோம்.

எனக்கு தேவையான மாதிரி அப்பம் இறக்குவது போல் ஒரே நாளில் இதனை செய்ய முடியாது. முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கும் குழுவொன்றை நியமித்துள்ளோம். அது எனக்கு மறக்கவில்லை. என்றார்.

பழனி முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் !

தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து சிறப்பாக அசத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.

“இவ்வருட இறுதியில் இங்கிலாந்தில் பறக்கும் கார்களைக் கொண்ட விமான நிலையம் ” – இங்கிலாந்து திட்டம் !

இங்கிலாந்தின் நகர்ப்புற மையங்களில் எயார் டாக்ஸிகள் எவ்வாறு செயற்படும் என்பதை நிரூபிக்கும் நோக்கில், இந்த ஆண்டின் பிற்பகுதியில், பறக்கும் கார்களைக் கொண்ட விமான நிலையத்தைக் கட்டமைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

கோவன்ட்ரி நகரில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்திற்கான செயற்திட்டம் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப், அர்பன்-எயார் போர்ட், கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டருடன் கூட்டு சேர்ந்து பறக்கும் கார்கள் வானத்தையும், மக்களையும் பொருட்களையும் சுற்றிச் செல்லும்போது தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.

நவம்பர் முதல், கோவென்ட்ரிக்கு வருபவர்கள் ஒரு பறக்கும் கார் விமான நிலையம் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் மற்றும் செயற்பாட்டு மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (ஈ.வி.டி.ஓ.எல்) வாகனத்தை லேண்டிங் பேடில் காணலாம்.

கோவென்ட்ரி நகர மையத்தில் விமான நிலையத்தை தற்காலிகமாக நிறுவுவதற்கு நிதியளிப்பதற்காக 1.2 மில்லியன் பவுண்டுகள் (1.65 மில்லியன் டொலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

“பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்” – பிரித்தானியா அறிவிப்பு !

பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது.

இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் (29.01.2021) அறிவித்திருந்தன.

இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்று முதல்(31.01.2021) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பின்னர் ஹொங்கொங்கில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவுடன் வாதங்களை முன்வைத்துள்ளன.

1997ஆம் ஆண்டில் காலனி மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளை சீனா மீறுவதாக பிரித்தானியா தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர் சிறப்பு விசாவானது, மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும் அவர்கள் சார்ந்திருப்பவர்களையும் நாட்டுக்குள் ஈர்க்கலாம் என பிரித்தானிய அரசு கணித்துள்ளது.

கடந்த ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளவர்கள் பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வாழவும், படிக்கவும், வேலை செய்யவும், இறுதியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது.

இதேவேளை, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டுத் திட்டம் 1987ஆம் ஆண்டில் பிரித்தானிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தாகும் என்பதுடன் இது குறிப்பாக ஹொங்கொங்குடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி வெளியிட்டது சுற்றுச்சூழல் அமைச்சு !

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன.

இந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (31.01.2021) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு பிளாஸ்டிக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியனவும் குறித்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்” – வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்

“எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்” என வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது,

“எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம். அன்றையதினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில் நான்காம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திரதினத்தை துக்கதினமாகவே நாங்கள் கடைப்பிடிப்போம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிடம் இருந்து மெக்ஸிக்கோவுக்கு சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி இறக்குமதி !

பெப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்தூள்ளார்.
இதற்காக மெக்ஸிகோவும் அஸ்ட்ரா ஜெனெகாவும் ஒப்பந்தம் போட்டுள்ளன. அதே சமயம் பெப்ரவரி 10ம் திகதி முதல் மெக்ஸிகோவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு ஆதரவாக ரஸ்யாவும் சீனாவும் உள்ளன” – அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை !

“இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு ஆதரவாக ரஸ்யாவும் சீனாவும் உள்ளன” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் முடிவு புத்திசாலித்தனமானது. தற்போது எங்களால் சுதந்திரமாக பதில்களை வழங்க முடியும் அதனையே நாங்கள் செய்கின்றோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை எழுப்பிய கேள்விகளிற்கு முன்னைய அரசாங்கத்தினால் உரிய பதில்களை வழங்க முடியவில்லை. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகும் முடிவு எங்களுக்கு உதவியுள்ளது. மனித உரிமை பேரவை தீர்மானங்களை கொண்டுவரலாம் ஆனால் நாங்கள் அதற்கு கட்டுப்படவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னர் இணை அனுசரணை வழங்கியதால் எங்களிற்கு பொறுப்பு இருந்தது தற்போது எங்களிற்கு அது இல்லை. குற்றச்சாட்டு குறித்து நாங்கள் பதில் அளிக்கலாம்.

தடைகள் ஏதாவது விதிக்கப்படுவது என்றால் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையே தடைகளை விதிக்கவேண்டும். எங்களிற்கு ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச்சபையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். தடைகள் குறித்த அச்சம் காரணமாக நாங்கள் இழைக்காத குற்றங்களை இழைத்ததாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” எனவும் தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் .

 

வலி.வடக்கு பிரதேச செயலக குழுவின் தீர்மானத்தை உதாசீனம் செய்து 100 அடி புத்தர் சிலைக்கான அடிக்கல் நட்டார் இராணுவ தளபதி !

காங்கேசன்துறை பகுதியில் தனியார் காணியொன்றில்  100அடி உயரமான விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நட்டுள்ளதாக இராணுவத்தின் இணையதள பகுதி மூலமாக அறிய முடிகின்றது.

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தையிட்டி கிராமத்தில், 8 பேருக்குச் சொந்தமான தனியார் காணி இன்னமும்  விடுவிக்கப்படவில்லை. அந்தக் காணியில் 2019ஆம் ஆண்டு இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். விடுவிக்கப்படாத இந்தக் காணிக்குள் நேற்றைய தினம்(30.01.2021) திஸ்ஸ ராஜமகா விகாரையை நூறு அடியில் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் பதிவேடுகளுக்கு அமைவாக அந்தப் பகுதியில் போருக்கு முன்னர் திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அந்தக் காணியை விடுத்து தனியாருக்குச் சொந்தமான காணியிலேயே விகாரகைக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது என்று வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் நேரில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.

பௌத்தசாசன அமைச்சின் நிதி உதவியுடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த விகாரைக் கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த ஆனந்த தேரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. வலி. வடக்கில், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதி பெறாமல் விகாரைகள் அமைப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்போதும் இணைத் தலைவர் அங்கஜன் அதனை மறுத்து அனுமதி பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளேயே அதனை உதாசீனம் செய்யும் வகையில், திஸ்ஸ ராஜமகா விகாரைக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்த மன்னிக்க முடியாத குற்றங்கள் புரிந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து 09பேர் நீக்கம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின்போது, தமது கட்சியின் கொள்கைகளை மீறி கட்சியின் தீர்மானத்தை மீறி அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்த மன்னிக்க முடியாத குற்றங்களை புரிந்த குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் இன்றி மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அவர்களில் மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களை ஏற்கனவே கட்சியிலிருந்து  நீக்கி விட்டதாக அறிவித்த நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நால்வரும் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பிரகாரம் வழக்கு முடிவடையும் வரையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நால்வரையும் நீக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையிலேயே ஏனைய ஆறு உறுப்பினர்களான வரதராஜன் பார்த்திபன், சி. தனுஜன், இ.ஜனன், ப.பத்மமுரளி, அ.சுபாஜினி, இ.ஜெயசீலன் ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது, தமது கட்சியினை சேர்ந்த ப.மயூரனுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அகிலாண்டரூபி, கௌசல்யா மற்றும் தவிசாளர் தெரிவில் போட்டியிட்டவரும், தற்போதைய தவிசாளருமான ப.மயூரன் உள்ளிட்டோரையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகள் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த 9 உறுப்பினர்களும் நீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.