24

24

நான் வழங்கிய கொரோனா பாணியை சுகாதார அமைச்சர் முறையாக பருகினாரா என தம்மிக பெரரா சந்தேகம் !

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தான் கொரோனா பாணியை வழங்கிய நிலையில்,அவர் அதனை உரியமுறையில் பருகினாரா? என்பது குறித்து தனக்கு தெரியாதென கேகாலை தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சர் பவித்ராவிடம் பாணியை வழங்கிய போது, அவர் அப்போது தேக்கரண்டியில் அதை பருகியதுடன், பின்னர் எவ்வாறு பருகினார் என்பது குறித்து தெரியவில்லை என தம்மிக தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை 4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ள நிலையில், இதனால் குணமடைந்தவர்கள் பற்றி எவரும் கதைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – தாலிபான் அமைதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்படும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு !

தாலிபான்களுடன் கடந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் குறித்து, ஜோ பைடன் நிர்வாகம் மறுஆய்வு செய்யும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சல்லிவன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், தாலிபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது என்றும், தீவிரவாத செயல்களில் தாலிபான்கள் ஈடுபடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தற்போது அங்கு 2 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தாலிபான்கள், ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால், வன்முறை மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஒப்பந்தம் குறித்து பைடன் நிர்வாகம் மறுஆய்வு செய்ய உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்சல்லிவன், ஆப்கன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப்-உடன் தொலைபேசி மூலம் பேசியபோது தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும், அதற்கான நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்றும் ஜாக்சல்லிவன் குறிப்பிட்டார்.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இராணுவ மந்திரியாக பொறுப்பேற்கும் கறுப்பினத்தவர் !

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். முன்னதாக அவர் அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை நியமனம் செய்து இருந்தார்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். அதன்படி நேற்று செனட் சபையில் லாயிட் ஆஸ்டின் நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 2 பேர் மட்டுமே அவரது நியமனத்துக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லாயிட் ஆஸ்டினை இராணுவ மந்திரியாக நியமிப்பதற்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து அவர் விரைவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னிலையில் ராணுவ மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.இதன் மூலம் அமெரிக்க ராணுவ மந்திரி பதவியை வகிக்கும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை லாயிட் ஆஸ்டின் பெற உள்ளார். லாயிட் ஆஸ்டினின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஜனாதிபதி ஜோ பைடன் செனட் சபைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனது நியமனம் குறித்து லாயிட் ஆஸ்டின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘நமது நாட்டின் 28-வது ராணுவ மந்திரியாக பணியாற்றுவது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். மேலும் இந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் நான் என்பதில் கூடுதல் பெருமை கொள்கிறேன். வேலையை தொடங்குவோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக் கோரி ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் !

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் திகதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனே ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.
தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24-ம் திகதி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின.
இதற்கிடையேயும், கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷியாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் கடந்த 18ம் திகதி ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தார். அவரை மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது
அலெக்ஸி நவல்னியை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.   ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னியை விடுதலை செய்யக் கோரி நடந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்து பெறுவதே அரசின் நோக்கம்” – இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன

“கொரோனா வைரஸ் மருந்தினை நன்கொடையாக வழங்கும் நாடுகளிடமிருந்தும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும் ஆகக்கூடியளவிற்கு பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம்” என இராஜாங்க அமைசசர் சன்ன ஜயசுமன தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

அஸ்டிராஜெனேகா நிறுவனம் ஐந்து இலட்சம் மருந்துகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதன் பின்னர் இன்னொரு தொகுதி மருந்துகள் நன்கொடையாக கிடைக்கவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து மருந்தினை நன்கொடையாக பெறுவதற்கு சீனாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிடமிருந்தும் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான மருந்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

“ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் ” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் ” எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெராவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள  பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (24.01.2021) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு சாராத தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் உள்ளடங்கிய ஒரு ஆலோசனை குழு கூட்டத்தை இன்று நடத்தியிருந்தோர். அரசியல் கட்சிகள் என்று பார்க்கும் போது 10 அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம் இதில் ஒன்பது தமிழ் அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை.

அவர்களுக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற பூர்வாங்க கூட்டத்திலும் அழைப்பு விட்டிருந்தோம் அதாவது சட்டத்தரணி சுகாசுடன் தொடர்பு கொண்டபொழுது தான் வெளிமாவட்டத்தில் இருப்பதாகவும் கட்சியினுடைய தலைவர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தார். அதற்கமைய நேற்றையதினம் கட்சியினுடைய பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை.

இரவு நேரம் சுகாஸ் அவர்களுக்கு, இன்றையதினம் காலை 10 மணிக்கு கூட்டம் இருக்கின்றது என்பதனை உங்களுடைய கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அறிவிக்குமாறு நீண்ட குறும் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தோம். இன்று காலையும் அனுப்பியிருந்தேன் எந்த பதிலும் வரவில்லை. எதிர்காலத்திலாவது அவர்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.

எந்த கட்சி, எந்த முன்னணி என்பதல்ல இங்கு பிரச்சினை இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய, அசுர வேகத்திலே செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு  தந்திரோபாய வேலைத்திட்டங்களை வகுப்பதற்காகத்தான் இந்த கூட்டம் ஒழுங்குபடுத்துள்ளது.

பங்குபற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டிருக்கின்றோம் நீங்கள் தலா இரண்டு பிரதிநிதிகளை தந்து ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை ஆராய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பிலே ஒரே நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் நோக்கம்.

இந்த நடவடிக்கை குழு என்பது மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது ஏனைய விடையங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” – ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் இரா.சம்பந்தன் !

“இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக, ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை அரசு, தனது பொறுப்புக்கூறலைச் செய்யாது அதனைக் குழி தோண்டிப் புதைப்பதற்கே முயற்சிக்கின்றது. அதற்காகத் தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றவதற்காக இவ்விதமான காலதாமதப்படும் செயற்பாடுகளைத் திட்டமிட்டு முன்னெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் என்பன கூட்டாக நிலைப்பாட்டை விபரித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மேலும் பொறுப்புக்கூறலைச் செய்விப்பதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்வதற்குமான எமது முயற்சிகள் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட இந்த ஆணைக்குழுவில், முன்னாள் காவற்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமால் அபேசிறி ஆகியோரும் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபினமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக இற்றைவரையில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இலங்கையில் கடந்த  காலங்களில் ஸ்தாபிக்கப்பட்ட  ஆணைக்குழுக்கள்  மற்றும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன இலங்கை அரசின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சிபார்சுகளைச் செய்துள்ளன.

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்வேறு அமர்வுகளை நடத்தி 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை அவரிடத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமான விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திலும் கற்றுக்கொண்ட  பாடங்கள்  நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்தத் தருணங்களிலும் அதன் பின்னருமான காலத்தில் அந்த பரிந்துரைகள், தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாசு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில்தான் ஜனாதிபதி கோட்டாபய பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை விசாரணை செய்வதற்குப் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். இவ்வாறானதொரு ஆணைக்குழுவொன்று தற்போதைய சூழலில் தேவையற்றதொன்றாகும்.

இவ்வாறான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் காலத்தைக் கடத்தலாம் என்று கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு எண்ணுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசு கருதுகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவானது ஏமாற்று வித்தையாகும். அதற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை குழிதோண்டிப் புதைப்பதையே விரும்புகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. அரசு புதிய விசாரணை ஆணைக்குழு போன்ற குறைபாடுடைய விடயங்களைப் பயன்படுத்தி தப்பித்து விட முடியாது. பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான  எமது தீவிர செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதில் மாற்றமில்லை” – என்றார்.

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழ்தலைவர்கள் நல்லூரில் ஒன்றுகூடல் !

தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள்  என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.

வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி  இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

“முற்போக்கான பரிந்துரைகளை அண்ணன் ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாத போது தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது” – ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் மனோ கணேசன் !

“இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் சபையைச் சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்தப் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராகக் கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்நாட்டுக்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசு  முன்னெடுத்திருக்க வேண்டும்.  அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்கு அப்பால் சென்று, பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசு முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையிலான அரசுதான் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். இதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளன.

மஹிந்த ராஜபக்‌ச, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிகச் சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. அந்த பரிந்துரைகளை கூட அண்ணன் ஜனாதிபதி  செயற்படுத்தவில்லை.

இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது. ஆகவே, இது கண்துடைப்பு என்பதே எனது உறுதியான நிலைப்பாடு  – என்றார்.