“வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்” என யாழ் முஸ்லிம் இளைஞர் கழக தலைவர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்திற்குரிய ஒன்றாகும். இச் செயற்பாட்டிற்கு யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகமாக நாம் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை அகற்றியமையினால் உறவுகளை இழந்து வாழும் சகோதர உறவுகளின் மனங்களில் எவ்வளவு கவலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவ் உறவுகளின் துயரத்தில் ‘மக்கள்’ என்ற நோக்கில் முஸ்லிம் மக்களாகிய நாமும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றோம்
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் என்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் இணைந்து வாழ வேண்டும் என்பது நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் விடயமாகும். இவ் விடயத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு தூரம் எமது முன்னகர்வுகளை எடுத்துவைத்திருக்கின்றோம் என்பது பற்றி நாம் அவசியம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ‘தமிழ் பேசும் மக்களாக’ ஒன்றித்து வாழ்வதே இரு சமூகங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பாக அமையும் என்பது நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவரும் உண்மையாகும். இதுவே எம்மை பிற சக்திகளின் சிறுபான்மை (தமிழ் முஸ்லிம்) மக்களுக்கு எதிரான விடயங்களில் இரு தரப்பினரையும் பாதுகாக்கும்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களாக அனைத்து வழிகளிலும் ஒன்றினைய முயற்சிப்போம் என்று இத்தால் பகிரங்க அழைப்பு விடுவதுடன், நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளைய தினம் (11.01.2021) இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகமாக நாமும் எமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்பதை இத்தால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
‘வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களாக ஒன்றினைவோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.