03

03

“மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்”  – பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா

“மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும்”  என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதியதொரு வருடம் ஆரம்பமாகியிருக்கின்றது. எனினும் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கேனும் முன்வரவில்லை. கடந்த அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்நின்று செயற்பட்டவர்கள் கூட, பின்னர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

எனவே புதியதொரு கொள்கை மற்றும் செயற்பாட்டு ரீதியான மாற்றங்களை எதிர்பார்த்தே மக்கள் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தார்கள். இந்நிலையில், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல்களைப் பொறுத்தவரையில், மக்கள் மாகாண சபைகளின் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றை அவர்கள் ‘வெள்ளை யானை’ என்றே வர்ணிக்கின்றார்கள். ஆகவே தேர்தல்களை நடத்துவதாயின், மக்களின் அபிப்பிராயம் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும்.

அதேபோன்று மாகாணசபைகள் முறையாக செயற்படுத்தப்படுமாயின், அந்தந்தப் பதவிகளுக்கு தகுதிவாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்களாயின் நாட்டின் அரசியலில் மற்றொரு முக்கிய அத்தியாயம் உருவாகக்கூடும்.

அதுமாத்திரமன்றி மத்திய அரசாங்கத்தை விடவும் மாகாணசபைகளால் மிகவும் அடிமட்டத்திலிருந்து செயற்பட முடியும். எனினும் சில சந்தர்ப்பங்களில் மாகாணசபை முறைமை என்பது நாட்டில் இன, மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்போருக்கு வாய்ப்பாக அமையக்கூடும். இம்முறைமையில் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. எனவே இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் நன்கு சிந்தித்து மாகாணசபை முறைமை அவசியமா? என்பது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவினால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டமைக்காக அதனைத் தொடரவேண்டும் என்ற அவசியமில்லை. எனவே இதுகுறித்த மக்கள் கலந்துரையாடலொன்றை உருவாக்கி, தீர்மானம் எடுப்பதே சிறந்ததாகும்.

எதுஎவ்வாறெனினும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலை நடத்துவதும் உகந்ததல்ல என்பதே எனது நிலைப்பாடாகும். இப்போது தனிப்பட்ட அரசியல் நலன்களை அடைதல் மற்றும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளல் என்பவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கக்கூடாது. மாறாக தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும். வைரஸ் பரவலின் முதலாவது அலையை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட, அரசாங்கம் அதற்குத் தயார் நிலையில் இருக்கவில்லை. ஆகவே அரசாங்கத்தின் கவனயீனத்தினாலேயே இரண்டாவது அலை ஏற்பட்டது என்ற எண்ணம் மக்களிடமுள்ளது.

அடுத்ததாக நாட்டின் தேசிய சொத்துக்கள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பில் மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறியே, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. கொழும்புத்துறைமுகத்தின் கிழக்குமுனையம் என்பது எமது நாட்டைப்பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர மையமாகும். அதனை இந்தியாவிற்கு வழங்குவதை மிகமோசமான செயற்பாடு என்றே கூறமுடியும். இத்தகைய செயற்பாடுகளுக்கு பதில்கூறவேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு விரைவில் ஏற்படும். என்றார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி – 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை !

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இருப்பினும் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து இலக்குகளையும் இழந்து இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 60 ஓட்டங்களையும்  கசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றதே அதிகமாக காணப்பட்டது. ஏனைய வீரர்களுள் 07 பேர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணி பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 6 இலக்குகளை கைப்பற்றினார். முதலாவது இனிங்சுக்காக தொடர்ந்து ஆடிவரும் தென்னாபிரிக்க அணி 48 ஓட்ங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” – ஜே.வி.பி

“கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு” என ஜே.வி.பி குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனாவைரசிற்கு எதிராக விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளிற்கு பதில் புராணக்கதைகளை நம்புவது பெரும் தவறு.

அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தபடி மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் முதலாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் இரண்டாவது அலையின் போது சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை குறைவடைந்ததால் மக்கள் அவர்கள் தெரிவிப்பதை செவிமடுக்க தவறிவிட்டனர்.

சுகாதார அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் மற்றும் சபாநாயகரும் தேவையற்ற ஊக்குவிப்புகளை முன்னெடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு ஒன்று அண்மையில் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த ஆலோசனைக்குழு இன்று(03.12.2020) பிற்பகல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றைமுன்னெடுத்துள்ளது.

IMG c70577fe6fc5d1065af98b5a1b9e5276 V

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கயேந்தி்குமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் , முன்னாள் மாகாண உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.

“சுலைமானியை கொலை செய்தவர்கள் பெரும் பழிவாங்களுக்கு சாட்சியாக இருக்கப் போகிறார்கள்” – ஈரான் சூளுரை !

ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.

காசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஒருவருடம் கடந்த நிலையில் அவருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பல ஈரான் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஈரான் தலைமை நீதிபதி இம்ராஹிம் ரைசி கூறும்போது, “சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெரும் பழிவாங்களுக்கு சாட்சியாக இருக்கப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 3-ம் திகதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட ராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான்  அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது. மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான்  குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.

“எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” – மயானங்களில் புதைக்க இடமில்லாமல் அமெரிக்காவில் காத்துக்கிடக்கும் மனித உடல்கள் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும் சோகம் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் பரவ ஆரம்பித்ததாக கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ், உலக நாடுகளை இன்னும் உலுக்கிவருகிறது. இதில் உலக நாடுகளிலேயே மோசமாக பாதிக்கப்பட்டது அமெரி்க்காதான். இதுவரை 3.50 லட்சம் மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழந்துள்ளனர், 2 கோடி மக்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு மேல் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்க்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக நாள்தோறும் லட்சக்கணக்கில் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரி்க்காவில் நேற்று 2.32லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,107 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாட்கணக்கில் காத்திருக்கின்றன.

லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கான்டினென்டல் ஃபனரல் ஹோம் உரிமையாளர் மாக்டா மால்டோனாடோ கூறுகையில் “ நான் கடந்த 20 ஆண்டுகளாக இறுதிச்சடங்கு செய்யும் பணியில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற சூழலை நான் பார்த்தது இல்லை, நடந்ததும் இல்லை.

கொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை என்னால் புதைக்க முடியாத அளவுக்கு தொடரந்து வந்து கொண்டே இருக்கின்றன. பலரிடம் உடலை எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் இடமில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க இடமில்லை எனச் சொல்வதற்கு மன்னிக்கவும் எனச் சொல்லிவிட்டேன்.

சராசரியாக நாள்தோறும் 30 உடல்களை கல்லறை அடுக்குகளில் இருந்து எடுத்து புதிய உடல்களை வைக்கிறேன். வழக்கமாக செய்யும் பணியைவிடஇது 6 மடங்கு அதிகமாகும். எங்களுக்கு வழி தெரியாமல் மனிதஉடல்களை குளிர்பதனப் பெட்டியில் காத்திருப்பில் வைத்திருக்கிறோம். இதற்காக கூடுதலாக 15 மீட்டர் குளிர்பதனப்பெட்டியை வாடகைக்கு எடுத்திருக்கிறேன்” எனத் தெரிவி்த்தார்.

california-funeral-homes-run-out-of-space-as-covid-19-rages

கலிபோர்னியா ஃபனரல் டைரக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் இயக்குநர் பாப் ஆச்சர்மான் கூறுகையில் “ கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காரணமாக, உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தொடர்ந்து மெதுவாகியுள்ளது. வழக்கமாக ஒருவர் இறந்துவிட்டால் 2 நாட்களில் உடல்அடக்கம் நடந்துவிடும், ஆனால், இப்போது ஒரு வாரத்துக்கும் மேல் ஆகிறது.

எங்களால் உடல்களை பாதுகாக்க முடியவில்லை. இன்னும் மோசமான நாட்கள் எங்களை நோக்கி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

லாஸ்ஏஞ்சல்ஸ் கவுண்டியில் மட்டும் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள்தோறும் 2,500 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அர்கனாஸ், லூசியானா, டெக்சாஸ், அரிசோனா, ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சராசரியாக 3 ஆயிரம் பேருக்கும் மேல் புதிதாககரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இன்னும் விடுமுறைக் காலம் முடியாததால், மக்கள் கூடும்போது, இன்னும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றில் முதல்முறையாக நிராகரிக்கப்பட்டது ட்ரம்பின் வீட்டோ அதிகாரம் !

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இதனிடையே டொனால்ட் டரம்ப் இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்: நிதி மசோதா நிறைவேற்றம்!அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான, 740 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021” என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, ட்ரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

இந்த மசோதாவின் 230-ம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 உறுப்பினர்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.

“மனிதர்களின் புதுவருட பட்டாசு கொண்டாட்டத்தில் செத்துமடிந்த நூற்றுக்கணக்கான பறவைகள்” – ரோமில் சம்பவம் !

இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.

இந்தநிலையில் புது வருட நாளன்று அதிகாலையில் ரோம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ரோம் இறந்த பறவைகள் வீழ்ச்சி: இத்தாலி இறந்த பறவைகள் ரோம் தெருவில்  புத்தாண்டுக்கான பொகாலிப்டிக் சகுனம்: இத்தாலியில் புத்தாண்டு இறந்த ...பின்னர் அவர் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில் “நண்பர்களே, நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கு சங்கடமாகவும், நம்ப முடியாததுமாக உள்ளது. நாம் வெடித்த பட்டாசுகளே இதற்கு காரணம்” என அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு, பறவைகள் சாவுக்கு பட்டாசுகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரொடானா டிக்லியோ கூறுகையில் “பறவைகள் அதிக பட்டாசு சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம். திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்; சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும்; மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும்” என்றார்.

“ஜோபைடன் அரசு சீன – அமெரிக்க நட்பை இயல்பு நிகை்கு கொண்டு வரும்” – சீனா நம்பிக்கை !

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதி வருகின்றன. ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. வர்த்தகம், மனித உரிமை மீறல், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருகிறது.

Joe Biden remporte la primaire démocrate de l'Alaska - Le Point

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன்  வருகிற 20-ந் திகதி பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்ததும் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறியதாவது:-

சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா- சீனா உறவுகள் முன்னோடி இல்லாத வகையில் சிக்கல்களில் சிக்கியுள்ளன. அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. புதிய நிர்வாகம் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பும்; சீனாவுடனான உரையாடலை மீண்டும் தொடங்கும்; இருதரப்பு உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுக்கும்; ஒத்துழைப்பை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 90 வாகன விபத்துக்கள் – 09 பேர் பலி !

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2,045 பேர் குடிபோதையில் வாகன செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்