பிரித்தானிய குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவுக்கு ஹொங்கொங் குடியிருப்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பம், கடந்த ஆண்டு சீனாவால் கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்து வழங்கப்படுகிறது.
இதனிடையே, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என சீனாவும் ஹொங்கொங்கும் நேற்று முன்தினம் (29.01.2021) அறிவித்திருந்தன.
இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கான விசா விண்ணப்பங்கள் இன்று முதல்(31.01.2021) ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பின்னர் ஹொங்கொங்கில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் சீனாவுடன் வாதங்களை முன்வைத்துள்ளன.
1997ஆம் ஆண்டில் காலனி மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளை சீனா மீறுவதாக பிரித்தானியா தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர் சிறப்பு விசாவானது, மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும் அவர்கள் சார்ந்திருப்பவர்களையும் நாட்டுக்குள் ஈர்க்கலாம் என பிரித்தானிய அரசு கணித்துள்ளது.
கடந்த ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளவர்கள் பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வாழவும், படிக்கவும், வேலை செய்யவும், இறுதியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது.
இதேவேளை, பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டுத் திட்டம் 1987ஆம் ஆண்டில் பிரித்தானிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தாகும் என்பதுடன் இது குறிப்பாக ஹொங்கொங்குடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.