19

19

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வளர்ச்சி காணும் சீனப் பொருளாதாரம் !

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகநாடுகள் பலவற்றிலும் பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.

உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடான சீனாவும் கொரோனா வைரசால் பொருளாதார சரிவை எதிர்கொண்டது. அதே சமயம் கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தொடங்கி இருந்தாலும், முதலாவதாக அதில் இருந்து மீண்டு வந்ததும் சீனா தான். அதன் பிறகு அந்த நாடு பொருளாதார முன்னேற்றத்தில் தீவிர கவனம் செலுத்தியது.

இதன் மூலம் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியை கண்டுள்ளது.

சீன தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 2020-ம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.42 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 1976-ம் ஆண்டு சீன பொருளாதாரம் 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதற்கு பிறகு கடந்த ஆண்டில் தான் அந்த நாடு மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. அதேசமயம் கொரோனா தாக்கம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி காணலாம் என்று கருதப்பட்ட நிலையில், அது சற்று வளர்ச்சி கண்டுள்ளது. இது சீனா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளதையே காட்டுகிறது.

கம்போடியாவுக்கு நன்கொடையாக 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்கிய சீனா – முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரதமர் ஹுன்சென் !

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.

இந்த வரிசையில் கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதல் நபராக இந்த தடுப்பூசியை அவர் போட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நான் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் நான்தான் முதலில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹுன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” – மாவை சேனாதிராஜா

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்”  என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

புதிய ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எமக்கு கருத்துகளை கூறமுடியாது. அது அவர்களது தீர்மானமாகும். அதற்கு நாம் பதிலளிக்க வேண்டியதும் இல்லை. தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் பிரகாரம் ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” என்றும் அவர் கூறினார்.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனா பாணியை எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா !

கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் மருந்தினை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனாவினால் பாதிக்கப்ட்டுள்ளார்.

துரித அன்டிஜென் பரிசோதனையின் போதே அமைச்சர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அமைச்சரின் பத்து உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவர் தனது மருந்தினை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றவேளை இராஜாங்க அமைச்சர் அதனை பயன்படுத்தியிருந்தார்.

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” என ஜே.வி.யின் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அச்சம் காரணமாக இந்தியா கோரியதை வழங்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் பங்குகளை விற்பதன் மூலம் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்ட பின்னர் தனக்கு ஏதாவது தரவேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனக்கு ஏதாவது வேண்டுமென கோரியது அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் மோடி பதில் !

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” என இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் டுவிட்டர் செய்திக்கு அளித்துள்ள பதில் செய்தியில் இந்திய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமைக்காகவும் நட்புறவு அயல்நாடுகள் குறித்த தாராள மனப்பான்மைக்காகவும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டுவிட்டர் செய்தியில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர்

“நன்றி கோத்தபாய ராஜபக்ச அவர்களே நோய்பரவலிற்கு எதிராக கூட்டாக போராடும் அதேவேளை நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கம் அயல்நாடுகளிற்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கும் மில்லியன் டோஸ்களிற்கு அதிகமான கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது” என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.