October

October

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது !

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக, படகில் கஞ்சாவை கடத்தி வந்து அவற்றை முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்து சென்ற போது , வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் , கடத்தலுக்கு பயன்படுதத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” முன்ஜன்கிளப்பாக்கில் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் அறிமுகம்

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்று வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூலில் த ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் இன்னமும் நிதர்சனமாகவே உள்ளது. லண்டன், கிளிநொச்சி, பாரிஸில் நடந்த நூல் அறிமுக விழாக்களின் தொடர்ச்சியாக ஜேர்மனியின் முன்ஜன்கிளப்பாக் நகரில் இந்நூல் வெளியீடு ஒக்ரோபர் 29 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. மலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் புலத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் உலகக் கலாச்சாரப் போக்கும் மீள் சிந்தனையும் என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுகம், கலந்துரையாடல், விருந்துபசாரம் என்று இந்நிகழ்வு சிந்திக்கவும் சுவைக்கவும் ஏற்றாற் போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் சமூகக் கலாச்சார கல்வி அமைப்பின் தலைவி திருமிகு ஜெ கங்கா தெரிவிக்கின்றார். இந்நிகழ்வில் அரசியல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜெ கங்கா முன்ஜன்கிளப்பாக்கில் அண்மைக்காலத்தில் நிகழ்கின்ற முதல் நூல் அறிமுக நிகழ்வு இதுவெனத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யுத்தம் ஏற்படுத்திய உணர்வலையின் தாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் போன்றதொரு நூல் இனிமேல் வெளிவருவதற்கு வாய்ப்பிலை என ஹொலன்டில் வாழும் அரசியல் ஆர்வலரான ஆர் சிறிகாந்தராஜா தெரிவிக்கின்றார். நாளைய நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள இவர் இவ்வாறான பக்கசார்பற்ற வரலாற்றுப்பதிவுகள் எமக்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் கடந்து வந்த காலகட்டம் தொடர்பாக காத்திரமான சில பதிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளன. வெளிக்கொணரக் கூடிய விடயங்கள் ஏராளமானவை. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் இந்த யுத்தத்தின் அடிப்படைத் தகவல்களே சேகரிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது” என்று த ஜெயபாலன் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை “எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் ஊனமுற்றனர்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்? எவ்வளவு சொத்துக்கள் இழக்கப்பட்டது? எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில் இல்லை” என்று தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகள் தங்கள் மக்களுக்கு நியாயமாகவும் அரசியல் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

“இலங்கையின் இனவாத அரசு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு தலைமை வழங்குவதாக மக்களை ஏமாற்றும் தரப்பும் விமர்சனத்திற்குரியதே. தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்ற கேள்வியையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

விமர்சனபூர்வமான இந்நூல் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாக பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நூல் வெளியீடு பற்றிய விபரங்கள் கீழே:

அம்பிட்டிய சுமன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

அம்பிட்டிய சுமன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென , பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பொலிஸ்மா அதிபரை கோரியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பொலிஸ்மா அதிபருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன தேரரின் பகிரங்கமான அறிக்கைகள் ஊடகங்களில் மிக அதிக அளவில் வெளியானதாக அவர் அந்த கடிதத்தில், சுட்டிக்காட்டியுள்ளார்.

13 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் – இரண்டு பிக்குகள் கைது !

மத்துகம பிரதேசத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிக்குகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைதான பிக்குகள் மத்துகம நவுத்துடுவ யதோல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

 

இந்த இருவர் மீதும் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹேமமாலி சந்தேக நபர்களை கைது செய்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், பிக்குகள் இருவரும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துடன் இணைந்து மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்; பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி – விசாரணைகளை தீவிரப்படுத்தும் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு !

யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 

தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நேரில் சமூகமளிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்காகப் பொது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அரச பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாகத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக விடயம்சார் அறிவுடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவரின் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளதால், கோரப்படும் ஆவணங்களுடன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழுவினால் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தன்மை தொடர்பிலான அறிக்கையொன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னமொன்றை தாபிக்கும் போது பின்பற்றப்படவேண்டிய நடமுறைகள் தொடர்பிலான அறிக்கையொன்று, நினைவுத் தூபியை நிர்மாணித்ததற்குரியதான கொள்முதல் கோப்பு மற்றும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் நினைவுத் தூபியின் தற்போதைய நிலைமை தொடர்பிலான அறிக்கையொன்று போன்ற விடயங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கியது இஸ்ரேல்!

இஸ்ரேலினால் காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 22 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலியாகியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதினர் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் காசா பகுதியிலுள்ள இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளது.

இதனால் இஸ்ரேலில் நடக்கும் எந்த ஒரு விடயமும் உலகத்திற்கு தெரிய வராது என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதனால் காசா பகுதியிலுள்ள 2.2 மில்லியன் மக்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவராது. மக்களின் நிலை தான்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோடு அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கூட வழங்க முடியாத சூழல் ஏற்படும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் – பெண் உட்பட மூவர் கைது !

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்த்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 25ம் திகதி இரவு வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியது.

 

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் 25ம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

 

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட இராமநாதபுரம் பொலிசார் ஒரு பெண் உட்பட மூவரை இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

 

உயிரிந்தவரை தொலைபேசி மூலம் அழைத்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம் !

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வௌிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் வாக்களிக்கவில்லை..

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் மக்கள் – தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழில் வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து உள்ளமையால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுது்து வருகின்றனர்.

 

இதனால் தினமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சுமார் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் சுமார் 10 வீதமானவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. ஏனையோருக்கு தண்டம் விதிக்கப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.